Saturday, 25 August 2012

கருவறைக்குள்
என்னை
சிறையடைப்புச்
செய்தவளே..

இருட்டறைக்குள்
எத்தனைநாள்
எனை பூட்டி வைப்பாய்..?

ஆனால் என்ன ஆச்சர்யம்..!
மூச்சு முட்டவில்லையே..!

புரிந்துவிட்டது-எனக்கு
நீ தந்தது
பாசம் மட்டுமல்ல..
உனது சுவாசமும்தான்..

உன்னை பத்து மாதம்
கடந்து பார்க்க
பொறுமையில்லை..
அதனால்தான்
வந்துவிட்டேன்
எட்டே மாதங்களில்..

வந்து பார்த்த
பின்புதான்
நொந்துகொண்டேன்..
சிரிக்கவேண்டிய
உன் முகத்தில்
ஏனோ வலிகலந்த
வேதனையின் ரேகை..

உன் வயிற்றில்கூட
தையல்ரேகை..

பதறுகிறதென்
பிஞ்சு மனம்..

என் அழுகை சத்தம்
கேட்கிறதா அம்மா உனக்கு..?

இது பால்கேட்டு அழும்
பசியழுகையல்ல..!

உன்னை
வேதனைப்படுத்தி
குறையாய்
பிறந்ததில் வந்த
குற்ற உணர்வழுகை..


இறைவா......
அறியாமல்
நான்செய்த பாவம்
போக்க
ஒரு
சந்தர்ப்பம்கொடு..

நான்
வேண்டுமானால்
திரும்பவும் கருவறை
சென்று
இருமாதம் கழித்து
வருகிறேன்..

- குறைபிரசவக் குழந்தை.

No comments:

Post a Comment

Thank You...