Monday, 10 March 2014

பூமிப் பந்து விளையாட்டு

பூமிப் பந்து விளையாட்டு

1.

இந்த பூமிப்பரப்பில்

ஒரு மீச்சிறு புள்ளியை

விலை கொடுத்து வாங்கிவிட்டேன்

என்னிடம் விற்றது

எப்போதுமிருக்கும்

பூமியல்ல

கடவுளும் அல்ல

எனக்கு அதை

ஒரு மனிதன்தான் விற்றான்

2.

பூமிப்பந்து

தலைமை ஆசிரியரின் அறை

மேசையில் மட்டுமே இருக்கும்

அடிக்கடிச் செல்வது

அவ்வளவு எளிதா என்ன?

அத்தனை ஆண்டுகளில்

இரண்டுமுறைதான் சென்றிருப்பேன்

ஒரு பூமிப்பந்தை

விலைக்கு வாங்கும் வசதியில்லை

மேசையுமில்லை

இப்போது வாங்கிக் கொள்ள முடியும்

ஆனால், எப்போதாவது மட்டுமே

சுழற்றி, உற்றுப் பார்க்கவேண்டியதை

ஏன் வாங்கி எப்போதும் வைத்திருக்கவேண்டும்?

எப்போதாவது சந்தேகம் எழுகிற வேளைகளில்

கை விரல்களை குவித்து

உருண்டையாக்கிக் கொள்வேன்

சூரியனை சற்று உயரத்தில் தள்ளி நிற்க வைப்பேன்

பூமிப்பந்தை இப்படியும் அப்படியுமாக சுழற்றுவேன்

சந்திரகிரகணங்களையும் சூரிய கிரகணங்களையும்

இடைவேளையின்றி நிகழ்த்துவேன்

என் வீடு இருக்குமிடம்

நிச்சயமானதாகத் தெரியாததால்

இடம் மாற்றி மாற்றி வைப்பேன்

முப்பரிமாண சந்தேகங்கள்

தெளிந்த உற்சாகத்தில்

மீண்டும் பூமிக்கு வந்து

என் மனித உடலில் புகுந்துகொள்வேன்


கோட்டும், சூட்டும் அணிந்த அதிகாரம்

என் கழுத்தை

கத்தரிக்கோலால் துண்டுபோட முயன்றது

கத்திகளை கைகளால் விலக்கித் தள்ளிவிட்டு

தப்பியோடினேன்


அதிகாரத்தின் ஏவல்கள்

என்னை விரட்டுகின்றன

கொடூரக் கொலையிலிருந்து

எளிய மரணத்திற்கு தப்பியோட

நானொரு கிணற்றில் குதித்தேன்

அதில் தண்ணீருமில்லை ஆழமுமில்லை



துர்நாறும் சாக்கடையில் குதித்தேன்

அது விரட்டுபவர்களின் வீடுகளுக்கே

கொண்டு சேர்த்தது

ஓடிப்போய் உச்சிமலையில் நின்று வெளியே குதித்தேன்

அடிவாரத்தில் வலைவிரித்துக் காத்திருந்தார்கள்

பூமியில் எங்கிருந்து குதித்தாலும்

பூமிக்கே திரும்புவது கொடுமையில் கொடுமை

தப்பியோடிக்கொண்டிருக்கிறேன்

இந்த வீதியின் நுனியிலிருக்கும் பூமியின் இறுதிக்கு

அங்கிருந்து பிரபஞ்சப் பள்ளத்திற்குள் குதிப்பதற்கு

No comments:

Post a Comment

Thank You...