எச்சரிக்கைச் சிவப்பு விளக்கின் ஆணைக்குப் பணிந்து
நின்று சாலையில் தளும்பின ஊர்திகள்
இந்த ஊர்தியிலிருக்கும் இளைஞன்
அந்த ஊர்தியிலிருக்கும் பெண்ணை
பார்வைத் தீவிரத்தால் தீண்டினான்
காலாதிகாலமான உள்ளுணர்வின் தீண்டலில் திரும்பியவள்
இவன் கண்களொடு கலந்தாலும் முறைத்தாள்
ஊர்திகள் உருண்டு பார்வைகளை மறைத்தன
கொஞ்சம் மீண்டும் நகர்ந்ததும்
மங்கல மஞ்சள் விளக்கு எரிந்து
பார்வைகள் கைகோர்த்தன
இருவருக்கும் இடையிலான கானல் வரிகள்
நேராய் நிமிர்ந்த வானவில் நிறங்களாலானது
அவள் பார்வையில் வெம்மை தணிந்தது
இவன் பார்வையில் வேறு வெம்மையேறியது
காதுகளில் அணிந்த பண்பலை வானொலியில்
இருவரும் ஒரே அலை வரிசைக்கு மாறியிருந்தனர்
உள்ளங்களால் புன்னகைத்தனர்
மீண்டும் சேரவே அரிதான வெவ்வேறு பாதைகளில்
இருவரின் திசைகளையும் பிரிததது
கொடிய பச்சை விளக்கு
பச்சை என்றால் சம்மதமல்ல
கடந்து செல்லுதல்
No comments:
Post a Comment
Thank You...