குழந்தை தத்தித் தத்தி
தன் முதல் அடிகளை எடுத்து வைப்பதாகவேயிருந்தது
நீ
உன் சம்மதத்தைச் சொன்னது.
நெல்வயலில் புகுந்த காற்று
பச்சைக்குள் இன்னொரு பச்சையாய்
சுழித்து நெளிந்து ஓடுகிறது…
மிதிவண்டியில் செல்லும் சிறுவன்
கைக்கம்பியிலிருந்து விடுவித்த கைகளை
உயர்த்தி வானை வருடிக்கொண்டே
உற்சாகமானதொரு பாடலை
உரக்கப்பாடியபடியே செல்ல
மிதிவண்டியே விமானம் ஆகிறது…
சிறகுகளுக்கு ஓய்வளித்து இறக்கும் சுமையை
கால்களுக்கு மாற்றி அமரும் கணத்தில்
சின்னானின் சிறிய தோகை
விசிறியாக விரிந்திருக்கிறது…
புத்தம்புதிய காற்றில்
என் கையிலிருந்த புத்தகத்தின் தாள்கள்
அப்படி படபடத்தது
எல்லாம் சரி!
இப்பொழுது உன் சம்மதத்தினால்
என் மனம் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை
நடித்துக்காட்டச் சொல்லி
இவைகளுக்கு ஆணையிட்டது யார்?
No comments:
Post a Comment
Thank You...