Sunday, 8 April 2012

அலெக்ஸ்

யன்னல்கள்

அம்புலி படர்ந்த சமையல் பாத்திரங்கள்
மின்விசிறி இணைப்பை இரைச்சல்களை நிறுத்தி மென்தென்றல் உலவும் அமைதியை உடுத்தும் இரவு
பனித்த விடியலில் பல்துலக்கியபடி வானம்
ஆடைகள் களைந்து குளிக்கும் அறையில் பழுத்த இலைகளும் வீதியின் மழையும்

திசையெங்கும் யன்னல்கள் வழி
வெளி நிறையும் வீடு

வாழத்தகுந்த இடமாய் நகரம்

அது

அது அப்படித்தான்
இருந்தது

சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல

இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித்
தளும்பியது


குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

பூப்பறித்தல்

எதிர்பார்க்கவேயில்லை
இந்தக்காலைப்பொழுதில்
சற்றுமுன் மலர்ந்த
பூ
பறிக்கபடுமென்று

தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

அவசரமாக

மேகம் சூழ்ந்த மாலையில்
அவசரமாக
வானம் பார்த்தனர்

யாரும் நிற்பதில்லை
நிறுத்தங்களில் கூட
கோடையில் கூட

தூரங்கள்

1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை

2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ

உயிர்த்திருத்தல்

வேர்களை பத்திரப்படுத்தும்
பூந்தொட்டி
மெல்ல தீண்டுகிறது
உதிர்ந்து விழும் மலர்களை

கால் தடங்கள்

பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று

மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு

விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன

கோடைக்கால அந்தி

இறுக்கமான போர்வை
மேலும்
ஈரமான கனவொன்று
வேண்டும்

அல்லது

இந்த மாலையை
எதிர்கொள்ள

ஒரு
ஆழமான
முத்தம் மட்டும்

special Dedication: Mr and Mrs.Ambakur

திருமணம்

ஏறத்தாழ
2532 சட்டங்களின் படி
நான் தண்டனை பெறும் குற்றவாளி
மறைத்தும் தப்பித்தும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

திருமணத்திற்கு
பிறகு
இன்னும் கூடுதலாக
சில சட்டங்களின் படி

கால பைரவன் கண்சிமிட்டுகிறான்

பெரிதும் நிராகரிக்கபட்டவள்
ஒரு
அடிமையைக் கண்டடைகிறாள்

வேசிகள் என்று
இழிந்து திரிந்தவன்
கண்கள் பனிக்க
குழந்தையைத் தீண்டுகிறான்


காதலிக்கச்சொல்லிக் கெஞ்சியவன்
ஆழ்ந்து உறங்குகிறான்

எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்

மென்முலைகள்
பெருத்துப் பாலூட்டி ஆகின்றன

என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன


இந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்

கோடை

நெருக்கமான
வெயிலின் கரங்கள்
மூச்சுதிணறும்
முத்தங்கள்
நிரம்பியது

சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்

காற்றுக்கேங்கும்
மனிதப்பார்வையை
அசைந்து அசைந்து
பரிகாசிக்கிறது
ஒரு பசுந்துளிர்
வெளிச்சம் வழிய

(இந்த வலைப்பூவைப்போல)

சற்றே தாமதமாக

1.
சாலைகள் பூக்களாகின
நகரம் தடாகம் ஆனது

காலப்படிகளில்
கண்
இமையைக்
கண்டடைந்தது

இனி எந்த
தூசிக்கு
இங்கு
இடமில்லை


2.
கத்திக்கொண்டிருந்தக்
குழந்தைக்குப்
பால்சோறு

தனிமை
இறந்தகாலம்

தடாகம்
முழுதும் நனைந்திட


நாங்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்

ஒரு பறவை ஒரு கிளை

ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தஅமர்ந்து
அன்பைப்
பாடுகிறது

பறவை
கூடுகட்டலாம்
இனி
கிளைப்
பறவையாகி
உடன் பறக்கலாம்

சில
உண்மைகள்

பறவை
கிழக்கில் இருந்து
வந்தது

கிளை
கூடுகளற்றது

அன்புற்றிருத்தல்



இந்த மாலைப்பொழுதில்
அழகாகவே இருக்கிறது
சூரியன்
மேகம்
மற்றும் வாழ்க்கை

சொல்ல மறந்துவிட்டேன்
அந்த மீன்கள்
முத்துமிட்டுக்கொண்டன
மணல்வெளி கடலானது

No comments:

Post a Comment

Thank You...