Friday, 13 April 2012

வானில் ஒரு விடிவெள்ளி!






நிசப்தத்தை தன்னுள் அடக்கிய நீண்ட  இரவு.  1930 -ஆம் ஆண்டு. அந்தக் கப்பல் நடுக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் அந்த இளைஞன். மெல்ல எழுந்து கப்பலின் மேல் தளத்துக்குச் சென்றான். வானமும், கடலும் கறுமை பூசியிருந்த அந்த நள்ளிரவில் அவன் மட்டுமே தனியாக...

மனதில் பலவிதச் சிந்தனைகள், குழப்பங்கள். கடல் காற்று உடலைத் துளைத்தது.

‘இங்கிலாந்துக்குப் புறப்பட்டது தவறோ?!’  - நூறாவது முறையாக கேள்வி கேட்டது மனம்.

அம்மாவின் அன்பு முகம் மனதில் நிழலாடியது. பாதிக் கடல் தாண்டியாயிற்று. இனி இந்தியாவுக்குத் திரும்பிப் போவது சாத்தியமில்லை. துணிந்தாகிவிட்டது. இனி துவண்டு பிரயோஜனமில்லை. இங்கிலாந்து சென்று படித்துவிட்டுத் திரும்புவதற்குள் அம்மா உயிரோடு இருப்பார் என்பது நிச்சயமில்லை. மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தாயைவிட, வெளிநாட்டுப் படிப்பு முக்கியமா?

அப்பாவும், சகோதர, சகோதரிகளும் தயங்கிய நேரத்தில் அம்மா துணிச்சலாக முடிவெடுத்தார்.

‘இந்த உலகத்துக்காகப் பிறந்தவன் இவன். எனக்காகப் பிறந்தவன் அல்ல. இப்போதே இவன் லண்டனுக்குப் புறப்படட்டும்!’

அம்மாவின் உறுதிக்கு முன்பு, மற்றவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதோ, அம்மாவிடம் விடைபெற்று பயணத்தையும் தொடங்கியாயிற்று.

அவனுக்குக் கிடைத்துபோல் ஒரு தாய் வேறு யாருக்குக் கிடைப்பார்?

அப்பா சுப்பிரமணியன், அரசு அதிகாரி. ஆரம்பக் கல்வியை அவனுக்கும் அவனது சகோதர சகோதரிகளுக்கும் அம்மா சீதாலட்சுமிதான் கற்பித்தார். தமிழும், ஆங்கிலமும் அவனுக்கு அப்போதுதான் பரிச்சயமாயின. அம்மா மிகச் சிறந்த அறிவாளி. அந்தக் காலத்திலேயே ஹென்ரிக் இப்சனின் ‘எ டால் ஹவுஸ்’  புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அப்பாவுக்கு இசையிலும் நல்ல தேர்ச்சியிருந்தது.  இசை பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

இப்படிப்பட்ட அற்புதமான சூழ்நிலையில்தான் அவன் வளர்ந்தான். அப்பாவின் பணி நிமித்தமாக, சென்னைக்கு குடும்பத்துடன் அவர்கள் குடிபெயர்ந்தனர். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு, மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை   முடித்தான்.

பள்ளியில் படிக்கும்போதே அவன் அதி புத்திசாலி.கல்லூரியில் இயற்பியல், கணிதம், வேதியியல், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றைப் படித்தான். அதிலும், இயற்பியலும், கணிதமும் அவனுக்கு இரு கண்கள். ‘கணக்குப் புலி’ என்று ஆசிரியர்கள் அவனை செல்லமாய் அழைப்பார்கள்.

மாநிலக் கல்லூரியிலும் அவனது திறமையைப் பற்றி பேராசிரியர்கள் வியந்து பேசிக் கொண்டார்கள். இயற்பியலில் பி.எஸ்சி. ஆனர்ஸ் படித்திருந்தான். எல்லாப் பாடங்களிலுமே முதலாவதாக வந்ததால், அவன் விருப்பத்திற்கேற்ப வகுப்பிற்கு வந்தால் போதும் என்று சிறப்புச் சலுகை வேறு.  அது போதுமே! நூல் நிலையம் சென்று நிறையப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தான்.

அப்படி அவன் படித்த ஒரு புத்தகம்தான் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி  சம்மர் ஃபீல்டு எழுதிய, அணுக்களின் அமைப்பு பற்றிய புத்தகம். ஃபீல்டை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பும் அவனுக்கு எதிர்பாராமல்  வாய்த்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் தத்துவங்கள் பற்றி சொற்பொழிவாற்ற ஒரு முறை வந்திருந்தார் அவர். அதனால் அவருடன் நெருங்கிப் பழக முடிந்தது.

கல்லூரி வாழ்க்கையை வெறும் பொழுதுபோக்காகக் கழிக்கவில்லை அவன். மாணவனாக இருந்தபோதே, தன்னுடைய 19-வது வயதிலேயே லண்டனிலுள்ள ராயல் சொசைட்டிக்கு அறிவியல் கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்தான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபவுலருக்கு தன் ஆராய்ச்சிக் கட்டுரை பற்றிக் கடிதமும் அனுப்பியிருந்தான்.  இயற்பியலில் அவனுக்கு ஒரு முன்னோடி, அவன் குடும்பத்திலேயே இருந்தார். அவர்தான் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன். ஆம். ராமன், அவனது பெரியப்பா மகன்தான்.

அவன் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. சென்னையில் 1929-ல் இந்திய விஞ்ஞானிகள் மாநாடு. அப்போது அவனும் தனது விஞ்ஞானக் கட்டுரைகளைப் படித்தான். அங்கிருந்த அறிஞர்கள் எல்லோருமே அவனை வெகுவாகப் பாராட்டினார்கள். அந்த மாநாட்டுக்கு யார் தலைவர் தெரியுமா? சர் சி.வி.ராமன்தான்.

கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவனைத் தேடி வந்தது, இந்திய அரசின் சிறப்பு உதவித்தொகை. இங்கிலாந்து சென்று படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் இந்திய அரசு அளிக்கும் இதுபோன்ற உதவித்தொகை அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைக்காது.

இடையில் அம்மாவின் உடல் நலம் மோசமடைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்றுதான் அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கப்பலில் ஏறும் வரை அவனது பயணம் நிச்சயமில்லாததாகவே இருந்தது.

அவனைவிட அவன் அம்மாவுக்குத்தான் இதில் ஆர்வம் அதிகம். தன் மகன் இங்கிலாந்து சென்று படித்துப் புகழ்பெறவேண்டும் என்பதே அந்தத் தாயின் ஆசை.

எல்லாம் கூடி வந்ததும், இதோ, இப்போது கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

மேலே வானத்தை அண்ணாந்து பார்த்தான். கும்மிருட்டு. ‘பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்’  என ஆங்காங்கே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின. விண்மீன்களைப் பார்த்ததும் அவனது ஆராய்ச்சி மனம் விழித்துக் கொண்டது.

நட்சத்திரங்கள் எப்படித் தோன்றுகின்றன?  அவை எப்படி வளர்கின்றன? பிறகு எப்படி அழிந்து போகின்றன? ஒரே குழப்பமாக இருந்தது.

கப்பல் பயணம் முழுவதும் இதே கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன. எல்லோரும் உறங்கும் இரவு நேரங்களில் அவன் மட்டும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடியே நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

சூரியனும் ஒரு விண்மீன்தானே! சூரியனைவிட அடர்த்தி அதிகமாகவும், குறைவாகவும் உள்ள விண்மீன்கள் ஏராளமாக உள்ளன என்ற உண்மையை அவன் அன்று அறிந்துகொண்டான்.   நட்சத்திரங்கள் அதிக அளவில் வெப்ப ஆற்றலை உமிழும்போது, உள்ஈர்ப்பு விசையால் சுருங்கி குறுவெண்மை என்ற நிலையை நாளடைவில் அடையும் என்ற கருத்து அப்போது நிலவி வந்தது.

அவனது வானியல் ஆராய்ச்சிக்கு அந்தக் கப்பல் பயணம்தான் விதை போட்டது.

லண்டன் போய் இறங்கியதும் ஃபவுலரைப் போய்ப் பார்த்தார் அந்த இளைஞர். கப்பல் பயணத்தின்போது விண்மீன்களைப் பற்றி, தான் எண்ணிய கருத்துக்களை இரண்டு கட்டுரைகளாக எழுதி எடுத்துச் சென்றிருந்தார். அதைப் படித்துப் பார்த்த ஃபவுலர், அவரை அப்படியே கட்டிக் கொண்டார். முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.

ஃபவுலரின் தலைமையின்கீழ் ஆராய்ச்சிப் பணிகளை ஆரம்பித்தார்.  இடையில் அம்மா இறந்துவிட்ட தகவல் இந்தியாவிலிருந்து வந்தது. மனம் சோர்ந்து போனார். அவரைவிட அவர்மேல் அம்மாவுக்குத்தான் அதிக நம்பிக்கை என்ற எண்ணம் தோன்றியவுடன், சோகங்களையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றவுடன், டிரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்குதான் அவர் பேராசிரியர் ஆர்தர் எடிங்டனைச் சந்தித்தார். எடிங்டனைப் பற்றி இங்கு குறிப்பிட்டாகவேண்டும். அந்தக் காலத்தில் உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுநராக விளங்கியவர் எடிங்டன். வானியல் சம்பந்தமாக எடிங்டன் எழுதிய கட்டுரைகளைப் படித்தபிறகுதான் அவருக்கு இந்தத் துறை மீதே ஆர்வம் வந்தது. அதனால் எடிங்டன் மீது அவருக்கு அளவுக்கதிகமான மரியாதை.

அப்படிப்பட்ட எடிங்டனுடன் கலந்து பழகும் வாய்ப்பு தானாகவே வாய்த்தபோது அவர் மிகுந்த உற்சாகமடைந்தார். இடையில் தன்னுடைய விண்மீன்கள் ஆராய்ச்சியைப் பற்றி ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் முன்னிலையில் சொற்பொழிவாற்றினார். பிறகு மீண்டும் இங்கிலாந்து திரும்பி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

ஒரு நாள் எடிங்டன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நிறைந்திருந்த அவையில் தன் ஆராய்ச்சியை உற்சாகமாக எடுத்துரைத்தார் அந்த இளைஞர்.

‘சூரியனைவிட பல மடங்கு எடை அதிகம் உள்ள நட்சத்திரங்கள், ஈர்ப்பு விசை அதிகமாகிக் கடைசியாகச் சுருங்கும் நிலையை அடையும். இதற்கு கருங்குழி என்று பெயர். இந்த கருங்குழி நிலையில், வேறு எதுவும் அதன் அருகில் நெருங்க முடியாது. ஒரு சில விண்மீன்கள் சுருங்கிச் சுருங்கி, மேலும் சுருங்க முடியாத நிலையில் வெடித்து விடலாம். நட்சத்திரங்களின் அளவு சூரியனின் அளவைப்போல கால் பங்குக்கு மேல் இருந்தால், அவை அழியும்போது இந்த மாற்றங்கள் நிகழும்’ என்று கணித முறையில் தர்க்க வாதங்களுடன் எடுத்துக் கூறினார்.

சபையில், அவரது கோட்பாடுகளைக் கேட்ட எடிங்டன் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘உங்கள் கருத்துக்கள் தவறானவை’ என்று முகத்திற்கு நேராகவே கூறினார். அதைக் கேட்டு மற்ற விஞ்ஞானிகளும் அமைதியாக இருந்தனர்.

வானியல் துறையில் பழம் தின்று கொட்டைபோட்ட எடிங்டனின் பேச்சை மறுத்துப் பேசவோ, எதிர்க்கவோ முடியாதபடி மிகவும் இளையவராக இருந்தார் அவர். எனவே எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

தொடர்ந்து தம் ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். வான்வெளி அமைப்புகளை, நட்சத்திர மண்டல இயக்கத்தை கணித ஆய்வின் மூலம் சமன்பாடுகளுக்கு உட்படுத்தி வானியல் பேருண்மைகளைக் கண்டறிந்தார்.

அப்போதுதான் அவரைத் தேடி வந்தது, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளர் பணி.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்றார். அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதுடன், தமது ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தனது ஆராய்ச்சிகளைத் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்ற நூலை வெளியிட்டார்.

இடையில் இந்தியாவுக்கு வந்த அவர், தன்னுடன் சென்னை பிரசிடென்சி கல்லூரியில்  படித்த லலிதாவை திருமணம் செய்தார். லலிதா, அவரைவிட ஓராண்டு ஜூனியர். இருவருமே படிக்கும் காலத்திலேயே நன்கு அறிமுகமானவர்கள். அதனால் மண வாழ்விலும் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து அவரது ஆராய்ச்சிகளுக்கு தூண்டுகோலாய் இருந்தார் லலிதா.

சிகாகோவில் பணியாற்றியபோது, மாணவர்கள் போற்றும் பேராசிரியராக விளங்கினார் அவர். மாணவர்களின் நலனுக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் அவர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றினார். அவரது அளப்பறிய ஆர்ப்பணிப்பால், சிகாகோ பல்கலைக்கழகம் முழுவதும் அவர் புகழ் பரவியது.

அப்போதுதான் நியூஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணிபுரிய அழைப்பு வந்தது. வாழ்க்கையில் உயர் பதவிகள் தேடி வரும்போது, அதை ஏற்றுக் கொள்வதுதானே சிறப்பு! அவருக்கும் அந்தப் பணியில் சேர ஆர்வம் ஏற்பட்டது.

ஆனால் சிகாகோ பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவரைத் தேடி நேரடியாக அவரது இருப்பிடத்துக்கே வந்தார்.

“நீங்கள் பிரின்ஸ்டனுக்குச் செல்வது எனக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் நீங்கள் அங்கு சென்றுவிட்டால், உங்கள் அறிவுரைப்படி இங்கு நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் அனைத்தும் நிலைகுலைந்துவிடும். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தினர் உங்களுக்குச் செய்து தருவதாகக் கூறிய எல்லா வசதிகளையும், இங்கேயே நான் உங்களுக்குச் செய்து தருகிறேன். இப்போது வாங்கும் சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தரத் தயாராக இருக்கிறேன். பதவி உயர்வும் அளிக்க விரும்புகிறேன். நீங்கள் எங்களைவிட்டுப் போகவேண்டாம். நீங்கள் மனது வைத்தால், நீங்கள் பெருமை கொள்ளும் வகையில் ஒரு சிறப்பான பதவியை இங்கு உருவாக்க முடியும் அல்லவா?” என்று துணைவேந்தர் நெஞ்சம் உருகிக் கூறவும், அவரால் மறுக்க முடியவில்லை.

எந்த ஒரு  சிறந்த பொருளையும் எல்லோரும் தமக்கே உரிமையாக்கிக் கொள்ளத்தானே விரும்புவார்கள்!

அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர், சிகாகோ பல்கலைக்கழகத்தைவிட்டு வேறு எங்கும் பணியாற்றச் செல்லவில்லை. தன் முழு உழைப்பையும், அறிவையும் அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவே  செலவிட்டார். வானியல் ஆராய்ச்சிக்காக அவர் உபயோகித்தது பேனாவையும், காகிதத்தையும் மட்டுமே. தொலைநோக்கியை அவர் தொட்டதே இல்லை.

வானியல் துறையில் அவரது அளப்பறிய பங்களிப்பிற்காக பல்வேறு நாடுகளின் விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி  அணிவகுத்து வந்தன.

எல்லாம் கிடைத்தும், அவர் மனதில் நிரந்தர சோகம் குடியிருந்தது. அவரது ஆராய்ச்சியை எடிங்டன், எள்ளி நகையாடிய அந்தத் தருணத்தை அவரால்  மறக்கவே முடியவில்லை. வானில் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம், தன் ஆராய்ச்சிக்குக் கிடைக்காத அங்கீகாரமே அவரை வாட்டியது.

காலம் மாறியது. வானில் ஒரு விடிவெள்ளி தோன்றியதைப் போல், அந்த நாளும் வந்தது. 1983-ஆம் ஆண்டு. அவரது கருந்துளைகள் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்க நோபல் பரிசுக் குழுவினர் ஒருமனதாக முடிவு செய்தனர். சர்வதேச வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்களெல்லாம் ஒரே செய்தியை திரும்பத் திரும்ப ஒலி, ஒளிபரப்புச் செய்தன.

‘இந்தியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான பிரபல வானியல் நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகருக்கும், பேராசிரியர் வில்லியம் ஃபவுலருக்கும் சேர்த்து பெருமை மிகு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது’ என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் ஒலித்தது.

எத்தனை நாள் கனவு இது! 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கனிந்திருக்கிறது! காத்திருப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது! பொறுமைக்குக் கிடைத்த பரிசு இது! இதற்காகத்தானே, இந்தியாவைவிட்டு, பெற்ற தாயைப் பிரிந்து அவர் வெளிநாட்டுக்கு வந்தார்.

1930-ல் இளைஞனாக, மனம் நிறைந்த கனவுகளுடன், கப்பல் பயணத்தில் உறக்கமின்றி வானத்து நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்தது அவரது நினைவில் எட்டிப் பார்த்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரசேகர் அன்று நிம்மதியாக உறங்கினார்.


வாழ்க்கைக் குறிப்பு
பெயர்  : சுப்பிரமணியன் சந்திரசேகர்

பிறப்பு : 19.10.1910

படிப்பு  : திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி, சென்னை மாநிலக் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் டிரினிட்டி கல்லூரி.

பணிகள்: சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்.

ஆராய்ச்சி : நட்சத்திரங்களின் தோற்றம், வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி. வானியல் ஆராய்ச்சி

அறியப்படுவது : இவரது வானியல் கண்டுபிடிப்பு ‘சந்திரசேகர் லிமிட்’ என்ற பெயரில் மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது.

விருதுகள் :புரூஸ் பதக்கம், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்டு பதக்கம், ராயல் வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம், ரம்போர்டு பரிசு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆதம் பரிசு, இங்கிலாந்து நாட்டின் ராயல் கழகம் வழங்கிய ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், ஹென்றி ட்ரேபர் பதக்கம், இந்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண். வானியல் ஆராய்ச்சிக்காக 1983-ல் நோபல் பரிசு.

இறப்பு :   21.08.1995

No comments:

Post a Comment

Thank You...