Friday, 13 April 2012

இனி என்ன நடக்கும்?



அச்சிடுகமின்னஞ்சல்



ஜெனீவா வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட தோல்வி, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். சில நாடுகள் உள்நாட்டு நிர்பந்தங்கள் காரணமாக நிலைப்பாடு எடுப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் கூறியிருந்தாலும்கூட, இந்தியாவின் முடிவை எதிர்ப்புடன் அல்லது காழ்ப்புணர்ச்சியுடன் இலங்கை பார்க்கவில்லை என்று தெரிகிறது.

கடைசி வரையில் ஒரேயொரு விஷயத்தில் இலங்கை உறுதியாக இருந்தது. அதாவது, வெளிநாட்டு தலையீடு இருக்கக்கூடாது என்கிற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தனர். பொறுப்புடைமை (accountability), போர்க்குற்றங்கள் என்றெல்லாம் வருகிறபோது, அரசின் தலைமையையும் ராணுவ வீரர்களையும் அது பாதிக்கும். எந்தவொரு அரசாங்கமும் போர் முடிந்தவுடன் தன்னுடைய ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது அந்த அரசுக்கும் அந்த நாட்டிற்கும் ஆபத்தாக முடியும். வெளிநாடுகளில் இருந்து குறுக்கீடுகள் வரக்கூடாது என்று அவர்கள் சொல்வதற்கு முக்கியக் காரணம், குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பிரிவில் எந்தெந்த ராணுவ வீரர்கள் இருந்தனர் என்று ஒவ்வொரு நபராகக் குறிவைக்கப்படும்போது அங்கு ராணுவப் புரட்சி கூட வரும் வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் தங்கள் முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர்.

தமிழினப் பிரச்சினை குறித்து இலங்கை அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு இந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போதைய சூழலில் அந்தப் பேச்சுவார்த்தை தொடருமா என்பது சந்தேகமாக உள்ளது. குறிப்பாக, ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன்அமைத்த குழுவின் அறிக்கை வந்ததற்கு மறுநாளே அதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால், இலங்கை அரசோ அதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்துப் பேசினர். இரு தரப்பினருக்கும் இடையே இடைவெளி வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தனர். அதன் பிறகும் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடருமா என்பது சந்தேகமாக உள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஆதரவோடுதான் முடிவு எடுப்போம் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக உள்ளது. அதை அரசிடமும் தெரிவித்துள்ளது. தற்போது, ஜெனீவா வாக்களிப்புக்குப் பிறகு இரு தரப்புப் பேச்சுவார்த்தை தொடருமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வதை புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்பார்களா அல்லது புலம்பெயர்ந்த தமிழர்கள் கூறுவதைக் கேட்க வேண்டிய கட்டாயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஜெனீவா வெற்றியானது தமிழினம் என்பதைப் பொருத்தவரையில், அது புலம் பெயர்ந்த தமிழர்களையே சாரும். எனவே அவர்கள் இன்னும் வலுப்படுவார்கள். அதுபோன்ற சூழல் வருமானால் அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் தனி நாடு என்ற இலக்கை நோக்கியதாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில் இலங்கை அரசுக்கு சந்தேகம் எழுமானால் பேச்சுவார்த்தையை அது முன்னெடுக்காது.

கடந்த முறை பேச்சுவார்த்தை நடக்கும்போதெல்லாம் அரசு சார்பில் கலந்து கொண்டவர்கள், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதியிடம் பேசிவிட்டு வருகிறோம் என்றும் சொல்லிவிட்டுச் செல்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ எதுவாக இருந்தாலும் இப்பொழுதே பேசத்தயார் என்று சொல்வார்கள். ஆனாலும் அவர்கள் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை முடித்துச் சென்றுவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்போது அவர்களின் யுக்திகளிலும் கோரிக்கைகளிலும் சில பல மாறுதல்கள் இருந்தன. அதை அவர்கள் தாங்களாகவே முடிவு செய்தனரா, இல்லை வெளியிலிருந்து யாருடைய நிர்பந்தம் காரணமாக முடிவு எடுத்தனரா என்கிற சந்தேகம் அரசுக்கு இருக்கவே செய்கிறது.

தற்போதைய சூழலில் ஜெனீவா வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட தோல்வியானது, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்கா கடைசி நேரத்தில் தீர்மானத்தை வாபஸ் செய்திருந்தாலோ, நீர்த்துப்போன தீர்மானம் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நினைத்தாலோ, நம்மை இந்தியா ஏமாற்றிவிட்டது, அமெரிக்கா ஏமாற்றிவிட்டது, தன் கையே தனக்கு உதவி என்று அவர்கள் மீண்டும் போராட்ட குணத்திற்கு திரும்பி இருப்பார்கள்.

ஜெனீவா வெற்றி காரணமாக, கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய மனநிலை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழலில், கடந்த காலங்களில் எல்டிடிஇ அமைப்புக்கு அவர்கள் செய்து வந்த உதவிகள், பணப் பரிமாற்றங்கள், தனி அரசாங்கம் நடத்தியது போன்ற விஷயங்களை எல்லாம் வைத்து தற்போதும் கூட இலங்கை அரசு அவர்களை சந்தேகக்கண் கொண்டுதான் பார்த்து வருகிறது. இலங்கைத் தமிழர்களை குறிப்பாக இளைஞர்களை இவர்கள் மீண்டும் போராளிகளாக வந்து விடுவார்களோ என்று அங்குள்ள பாதுகாப்புப் படைகள் சந்தேகத்துடன்தான் பார்க்கின்றன. இத்தகைய சூழலில், புலம் பெயர்ந்த தமிழர்களின் போக்கு கடுமையாகிறது என்று தெரிந்தால், அங்குள்ள தமிழர்களுக்கு இடர்பாடுகள் அதிகமாகும்.

ஜெனீவா வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்த பிறகு அங்குள்ள சிங்களப் பேரினவாதிகள் தங்கள் மீது மீண்டும் காழ்ப்புணர்ச்சி கொள்வார்களோ என்ற பயம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வரும் வாய்ப்புள்ளது. முப்பது ஆண்டுகளாக அமைதியை இழந்து, இருக்கிற கொஞ்ச நஞ்ச அமைதியும் தொலைந்து விடுமோ என்று பயந்து வாழும் சூழலுக்கு இலங்கையில் வாழும் தமிழர்களை ஜெனீவா வாக்களிப்பு தள்ளியுள்ளது. இது ஒரு பெரிய இடர்பாடு. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகி விடக்கூடாது.

இப்படிப்பட்ட சூழல் வருமானால், இலங்கையில் தமிழினப் போர் இயக்கங்கள் மீண்டும் உயிர்ப்பித்து வருமானால், அதன் தாக்கமும் துவக்கமும் தமிழ்நாட்டில் இருந்துதான் வரும் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. அதனால் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மிதவாத அரசியல் போக்கு என்று எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் ஜெனீவா வாக்கெடுப்பிற்கு உரத்த குரல் கொடுத்து மத்திய அரசைப் பணிய வைத்தன. அதற்கு ஒரு காரணம், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி செயல்படும் சில குறிப்பிட்ட சிறிய கட்சிகளும் சிறிய தமிழினக் குழுக்களும்தான். இப்போது அவர்கள் தங்களது யுக்தி வெற்றிபெற்றுவிட்டது என்று கருதுவார்களேயானால், மேலும் மேலும் இந்திய அரசைக் கட்டாயப்படுத்தி இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறாக, அவர்களோ அல்லது அவர்களுக்குப் பின்னிருந்து செயல்படும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களோ விரும்பினால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை சார்ந்த மிதவாத அரசியலில் ஏட்டிக்குப் போட்டி என்ற நிலைமை மீண்டும் உருவாகும்.

கூடங்குளம் பிரச்சினை ஓர் உதாரணம். கூடங்குளம் பிரச்சினைக்கும் தமிழினப் பிரச்சினைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒருவேளை கூடங்குளத்தில் பேரழிவு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், பக்கத்து கேரளாவில் உள்ள மலையாள மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஆனால், ‘தமிழினத்தைக் காவு கொடுக்கப்போகிறோம்’ என்று சிலர் பேசத் தொடங்கினர். தமிழ்நாடு அரசு ஒரு முடிவு எடுத்தவுடன், ‘தமிழினம்’, ‘முள்ளிவாய்க்கால்’ என்றெல்லாம் பேசி இந்த அரசியலையே மாற்றப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் இனப்பிரச்சினை அல்லாத மக்கள் பிரச்சினையிலும் கூட இனப்பிரச்சினையைப் புகுத்தும் நிலை உள்ளது. இது கவனமாக கையாளப்பட வேண்டும்.

ஜெனீவா தீர்மானம் வெற்றி பெற்றதுடன் இப்பிரச்சினையை ஒரு ‘லைவ் இஷ்யூ’ ஆக வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. காரணம், இந்த ஆண்டு கடைசியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. ஒபாமா தலைமையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன என்பதை அமெரிக்க வாக்காளர்களுக்கு சொல்ல நினைக்கின்றனர். எனவே, தீர்மானம் கொண்டு வந்ததன் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதைச் செய்யவில்லை.

இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்படுகிறது என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. இலங்கைக்கு சீனா நிறைய கடன் கொடுத்துள்ளது. ஹம்பந்தோட்டா துறைமுகம், மாத்தளை விமான நிலையம், நிலக்கரி அனல்மின் நிலையம் உட்பட பல திட்டங்களுக்கு ஏராளமாக நிதி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த கடனை இலங்கையிடம் சீனா எப்பொழுது கேட்கிறதோ அப்பொழுது இலங்கை அரசால் அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால் அதற்குப் பிணையாக அல்லது மாற்றாக இலங்கையிடம் இருந்து சீனா எதை எதிர்பார்க்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் வெறும் ஹேஷ்யங்களே. ஆனால், இலங்கைக்கு சீனா ஆதரவு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டை சீன அரசியல் மற்றும் இலங்கை அரசியலை நன்கு அறிந்த எவரும் எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தெற்காசியாவில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு. இந்திய எல்லையை ஒட்டிய சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய நான்கு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. எதிர்காலத்தில், இலங்கையைப்போல நமக்கும் ஒரு பிரச்சினை ஏற்படுமானால் இந்தியா நம்மை ஆதரிக்காது என்ற எண்ணம் அண்டை நாடுகளுக்கு வரலாம். அண்டை நாடுகளை அரவணைத்துச் செல்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், இன்றைக்கு அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா மாதிரியான ஒரு பெரிய நாடு அண்டை நாட்டைக் கைவிட்டுவிட்டதே என்ற எண்ணமும் இந்தியாவை நம்பி நாம் எதுவும் செய்ய முடியாது என்கிற எண்ணமும் மற்ற அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு இந்தியா மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் துவங்கினால் இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாதிகள் அங்குள்ள தமிழனத்தைப் பயமுறுத்தும் அளவுக்கு நடக்குமானால், அப்பொழுது இந்தியா வேறு விதமாக தலையிட வேண்டிய சூழல் உருவாகலாம். அந்தச் சூழலை தமிழகத்தில் உள்ள தமிழினப் போராளிகளோ, தமிழன ஆதரவுக் குழுக்களோ பெரிதுபடுத்துவார்கள். பிரச்சினை மேலும் மேலும் பெரிதாகிவிட்டால் இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமான உறவு வேறுவிதமாகப் போய்விடும்.

இந்தத் தீர்மானத்தால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தூக்கம் கெடும். வடக்கில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் பிப்ரவரி 27, 28ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்குப் போய்விட்டனர். பலர் போரில் இறந்துவிட்டனர். பலர் அங்கிருந்து வெளியேறி கொழும்பில் குடியேறிவிட்டனர். இப்போது கொழும்பில் இருக்கும் தமிழர்கள் எப்படா வெளிநாட்டிற்குப் போவோம் என்றுதான் இருக்கிறார்களே ஒழிய அங்கு தங்கள் நாட்டில் இருக்க விரும்பவில்லை. இன்றைய சூழலில் அரசின் கணக்குப்படி அங்குள்ள விதவைகள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். அடுத்தடுத்த தலைமுறையில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். அப்படியென்றால் நாம் எதற்காகப் போராடுகிறோம், யாருக்காகப் போராடுகிறோம் என்ற கேள்வி அங்குள்ள தமிழர்களுக்கு எழும்.

நான்கைந்து அரசியல் கட்சிகளும் தனிப்பட்ட ஐந்தாறு எம்பிக்களும் சேர்ந்ததுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் அல்ல. அதைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாற்ற வேண்டும் என்பதில் அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இருக்கிறது. இன்றைக்கு 80 வயதான சம்பந்தம் தலைவராக உள்ளார். அவருடைய இடத்தில் இன்னொரு ஆளை வைத்துப்பார்க்க அவர்கள் தயாராக இல்லை. இளைஞர்களை எல்டிடிஇ போராளிகளாக மாற்றியதே தவிர, அதில் சில பேரையாவது அடுத்த தலைமுறையினருக்கான அரசியல்வாதிகளாக மாற்றவில்லை. போர் முடிந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யாரையாவது வளர்த்துக் கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சி இல்லை. அதற்கான மனப்பான்மையும் இல்லை. இதன் விளைவால் நாளைக்கு இலங்கை அரசுடன் சரிசமமாக நின்று பேசக்கூடிய தமிழினத் தலைமை அங்கு உருவாகாமலே போய்விடும்.

No comments:

Post a Comment

Thank You...