Friday, 13 April 2012

அண்ணா பல்கலைக்கழகத்தில் MSc வீட்டிலிருந்தே படிக்கலாம்!



அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு புதிதாகத் தொடங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளவும் இந்த ஆன்லைன் படிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது

கவல் தொழில் நுட்பத் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறை. எனவே, இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவேதான், இது தொடர்பான படிப்புகளில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் இருந்து வருகிறது. தற்போது, கம்ப்யூட்டர் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, இது தொடர்பான தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களும் அதுதொடர்பான புதிய தொழில்நுட்பங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் குறித்து அறிந்த தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்ற புதிய  முதுநிலைப் பட்டப் படிப்பைத் தொடங்கியுள்ளது. இது இரண்டு ஆண்டு படிப்பு. “அறிவியல், என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ளவும், ஐ.டி. பணிகளில் வேலைகளில் இருப்பவர்கள் தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் உதவும் வகையில் இந்த ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர்.

“இந்தியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேருக்காக முதுநிலைப் பட்டப் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதன் முறை. அதுவும் ஆன்லைன் முறையில் முதன் முறையாக நடத்தப்படுகிறது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்குநர் பேராசிரியர் எம். மதுசூதனன். அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் - கேபிசி ஆராய்ச்சி மையம், இந்த ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்கிறது. “ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், அத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், இந்தத் துறையில் தகுதி படைத்த திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சி-டாக், அறிவியல் தொழில்நுட்பத் துறை போன்ற அமைப்புகளுடன் இணைந்து கேபிசி ஆராய்ச்சி மையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தப் புதிய படிப்பைக் கொண்டு வருவதிலும் கேபிசி ஆராய்ச்சி மையம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்க முடியும் என்பதுதான் இந்தப் படிப்பின் முக்கிய அம்சம்” என்கிறார் கேபிசி ஆராய்ச்சி மைய புரோகிராம் டைரக்டர் பேராசிரியர் சி.என். கிருஷ்ணன்.

வழக்கமான தொலைநிலைப் படிப்புகளைவிட இந்தப் படிப்பு எந்த வகையில் சிறப்பானது?

வாரத்தில் இருமுறை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் துறை சார்ந்த பேராசிரியர்களும் நிபுணர்களும் வகுப்புகள் எடுப்பதை ஆன்லைன் மூலம் கேட்டு கற்க முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லது இ-மெயில், சாட்டிங் மூலம் தொடர்புகொண்டு விளக்கம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படிப்பை மாணவர்களுக்கு ஆர்வமிக்கதாக்கும் வகையில் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஸ்லைடுகள், ஆடியோ, வீடியோ பாடங்கள் வழங்கப்படுகின்றன. அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து தரம் வாய்ந்த சில புத்தகங்களை வாங்கிப் படிக்கும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செய்முறைக்கும் புராஜக்ட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் தொழில்துறைப் பணிகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தயாராக வாய்ப்பு ஏற்படும்.

இந்தப் படிப்பு நடைமுறைகள் எப்படி இருக்கும்?

ஆன்லைன் மூலம் படிப்பு என்றாலும்கூட, மாணவர்கள் இரண்டு முறை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டியதிருக்கும். அதாவது அட்மிஷனின் போது, சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக நேரில் வர வேண்டியதிருக்கும். இறுதி செமஸ்ட்ரில் புராஜக்ட் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டுவதற்காக வர வேண்டியதிருக்கும். மாணவர்கள் இந்தப் படிப்பை இரண்டு ஆண்டுகளில் நான்கு செமஸ்டர்களில் முடிக்க வேண்டும். அதேசமயம், மாணவர்கள் விரும்பினால் மேலும் கால அவகாசம் எடுத்துக்கொண்டு படிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது 6 ஆண்டுகளுக்குள் (12 செமஸ்டர்கள் வரை) இந்தப் படிப்பை முடிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், குறிப்பிட்ட செமஸ்டரில் படிக்க விரும்பவில்லை அல்லது அதற்குப் போதிய அவகாசம் இல்லை என்றால் அந்த செமஸ்டரில் படிப்பிலிருந்து விலகிக்கொண்டு அடுத்த செமஸ்ட்ரில் படிக்கலாம். வேலையில் இருந்துகொண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் காமிராவுடன் கூடிய லேப் டாப் அல்லது டெஸ்க் டாப் வைத்திருக்க வேண்டும். அதற்கு இன்டர்நெட் வசதியும் தேவை. இதன் மூலம், ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களைக் கேட்டு, தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற முடியும். இந்தப் படிப்புக்குத் தேவையான ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்களை மாணவர்களின் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்வதில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையம் தேவையான உதவிகளை வழங்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பாக மாலை நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். 60 நிமிடங்களிலிருந்து 90 நிமிடங்கள் வரை ஒரு வகுப்பு இருக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வகுப்புகளிலிருந்து 30 வகுப்புகள் வரை இருக்கும். இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு 50 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும். தியரி வகுப்புகளுடன் செயல் முறை விளக்க வகுப்புகளும் நடத்தப்படும். இதுதவிர வகுப்பறைத் தேர்வுகள், அசைன்மெண்ட்டுகள் போன்றவற்றின் அடிப்படையில் அகமதிப்பீடும் இருக்கும். மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்படும் நேரங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கவனிக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் எழுத்துத் தேர்வுகளை தேர்வு மையங்களில் எழுத வேண்டியதிருக்கும். பாடத்திட்டங்கள், இந்தப் படிப்பு குறித்த விரிவான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் படிப்பில் யார் சேரலாம்?

பிசிஏ அல்லது  அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளில் பிஎஸ்சி பட்ட மாணவர்கள் இந்த முதுநிலைப் படிப்பில் சேரலாம். ஆனால் அவர்கள் கணிதத்தை ஒரு பாடமாகவாவது எடுத்துப் படித்திருக்க வேண்டும். என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்பு என்பதால் வேலையில் இருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். பிசிஏ, பிஎஸ்சி படித்துவிட்டு சாப்ட்வேர் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள இந்தப் படிப்பு உதவியாக இருக்கும். அதற்காகப் பணியை விட்டு விட்டோ அல்லது விடுமுறை எடுத்துக்கொண்@டா இந்தப் படிப்பைப் படிக்க வேண்டியதில்லை. சாப்ட்வேர் அல்லது ஐடி அல்லாத வேறு துறைகளில் என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்துவிட்டு, சாப்ட்வேர் மற்றும் ஐடி துறைகளில் வேலை செய்ய விரும்பும் மாணவர்கள் தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான களமாக இந்தப் படிப்பு அமையும். இதுவரை வேலை கிடைக்காத என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இந்தப் படிப்பின் மூலம் தங்களது வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.

கட்டணம் எவ்வளவு?

இந்த ஆன்லைன் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் செமஸ்ட்டர் கட்டணம் ரூ.29,500. பிற மாநில மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆயிரம். இரண்டாவது செமஸ்டரிலிருந்து கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் செய்து அதனைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.  விண்ணப்பத்துடன் மாணவர்களின் கையொப்பத்துடன் கூடிய புகைப்படம் ஒட்டப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100.  The Director, Centre for Distance Education, Anna university, Chennai - 600 025’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 9ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு:

http://www.mscfoss.au-kbc.org.in
http://www.annuniv.ecu/cde

No comments:

Post a Comment

Thank You...