Monday, 4 June 2012

விழிப்பாவை




கொய்யாப் பழத்தில் குடியிருக்கும் சில்வண்டே!
கொட்டம் அடிக்கின்ற கும்மிருட்டு வெளவாலே!
செய்யாப் பிறப்பே! சிறகடிக்கும் கொக்கே!
சிலிர்க்கின்ற காற்றில் வெடுக்கென்று பாய்ந்திடும்
ஒய்யாரச் சிட்டே! ஒளிப்பூக்கும் மின்மினியே!
ஓங்காரக் கோட்டானே! ஒத்தூதும் ஊர்க்கொசுவே!
மெய்யாகக் காற்றில் மிதக்கும் கச்சேரி!
பறக்கின்ற தோழரைப் பாராய் விழிப்பாவாய்!

மாய மழைவான்; மழிக்காத மண்கன்னம்;
மாறிலியாய்க் கோப்பை. விதவிதமாய் வண்ணங்'கள்'!
மையக் குழியம்; மகரந்தத் தூவியம்;
வண்டுவாய்ச் சீழ்க்கை; வயதுவரும் வைகறை;
தூய கிழக்கு; சுவரில்லாச் சித்திரங்கள்;
துய்த்துத் துணித்துத் துளையம் அடித்தாடி
ஏய நெகிழாமல் இன்னுமா தூக்கம்?
இமைஎறிந்து விட்டே எழாயோ விழிப்பாவாய்!

முட்டியிட்டுத் தாய்மடியை முட்டும் கருப்பாடு;
முத்தமிடும் தத்தை. முகையவிழும் மந்தாரை;
சொட்டுவிடும் கீற்று; சுழற்றிவிடும் பேரிளமை;
தொட்டுவிடும் பாட்டு; துவைத்துவிடும் நாதலயம்;
தட்டிலைகள் ஏந்தும் தடாகம்; மழலையுடன்
தத்திவரும் சிட்டுகள்; தாவிவரும் ஆழியலை
எட்டும் அசைவெல்லாம் காற்றின் வரிவடிவம்.
ஈதைப் பயின்று விரிவாய் விழிப்பாவாய்!

பேழை திறப்பதுபோல் பேசுகிற பைம்பெண்ணே!
பெய்யும் மழைக்கட்டி கையேந்தி, உள்ளங்கை
ஆழ உறைந்தே எறிந்து விளை யாடாயோ!
ஆர்க்கும் அருவிக்குள் காதடைய நில்லாயோ!
நாழிகள் சேமித்து நாத இயற்கைக்குள்
நட்டு வளர்த்து நிழல்காய வாராயோ!
தாழை இறுக்கித் திரைக்குள் புதையாது
தாகங்கள் தீர்த்துமீண்டும் தாராய் விழிப்பாவாய்!

மேகத்தின் மெந்நீழல் மெல்ல நகர்கிறது.
மேற்கின் அலகிற்குள் செம்பூச்சி வீழ்கிறது.
ஆக அகஅகழ்வில் அத்வைதம் பூக்கிறது.
ஐந்து புலத்தும் அமரம் வழிகிறது.
ஊகத்தின் பேரில் உடலை வருடுகிறோம்.
ஊறும் உயிரில் உருஅருவம் ஆகின்றோம்.
ஏகத் திரைவிழுங்கும் ஏக்கத்தில் ஆழாமல்
எங்கே தொலைந்தாய்? எழுவாய் விழிப்பாவாய்!

சாயும் காலங்கள் சயனத்தில் ஆழ்கையிலே
சாயல் தெரிகிறது சாரங்கீ! உன்இதழில்
தோயும் தொழிலைத் தொழப்புகுமென் சிந்தையிலே
தூறல் விழுகிறது தூவம்மே! நானுனக்கு
வேயும் விதானம் வெறிப்பரிவால் என்கையிலே
வெள்ளம் புரள்கிறது மாதங்கீ! என்னிடத்தில்
நேயம் இருக்கிறது. நீயும் இருக்கின்றாய்.
நித்தம் கனவிருக்கும். நீசொல் விழிப்பாவாய்!

வார்த்தையற்ற மெட்டுகளை வாயில் குதப்பி
வடித்த இசைச் சிற்ப வடிவமென வந்துநிற்கும்
நேர்த்தியான தேவியின் நித்திரையை ஆராய,
நீள்வெட்டுத் தோற்றத்தில் நானும் குறுக்குவெட்டுத்
தோற்றத்தில் அந்தத் துணைமயிலும் பூத்திருக்க,
தூவிகளில் என்கை துழாவித் துழாவியொரு
தேர்ந்த மயக்கத்தைத் தீட்ட, செருகும்உன்
தேவ சுயசரிதம் தேவை விழிப்பாவாய்!

நாடிய மேனகை சேலைத் தலைப்பின்
நயமிகு பாவனை நோக்காயோ! நீள்குழல்
சூடிய பூச்சரம் மெல்லிடை மேலிடும்
சுந்தர நாட்டியம் காணாயோ! அன்னவர்
தோடு ஜிமிக்கி துணைநடம் ஆடும்
சுறுசுறுப் பிற்குள் சுருளாயோ! எங்கெங்கும்
ஊடும் ஒளிக்கூழை ஒட்ட வழிக்காது
உறக்கம் தகுமோ உனக்கே விழிப்பாவாய்!

முத்தக் கறைபடிந்த கன்னங்கள்; செங்குருதி
முட்டிச் சிவந்துவிட்ட பாகங்கள்; பேராவல்
பித்துப் பிடித்தலையும் சித்தங்கள்; இல்லையிதில்
பின்னென்றும் முன்னென்றும் பேதங்கள்; அந்தரங்கம்
அத்துப் படியாகி ஆட்டங்கள்; தீபூத்த
ஆவி நிறையமிகு ஊட்டங்கள்; மூழ்கியெழில்
முத்தை எடுத்துவரும் நேரங்கள்; வாழ்வின்
வெளிச்சங்கள் என்றே விரிப்பாய் விழிப்பாவாய்!

'கிட்டுங்கால் கிட்டும்; கிடக்கட்டும்' என்றின்றிக்
'கிட்டாமல் விட்டோமோ' என்றே முழக்கமிடும்
கட்டிளங் காளையரும் கன்னியரும் சேர்ந்திருக்க,
கைக்குள் வலுவிருக்க, கண்ணில் ஒளியிருக்க,
நெஞ்சில் உரமிருக்க, நீதியெனும் வாளிருக்க,
நீசரின் சூழ்ச்சியின்முன் நீர்வடிய நிற்பதினும்
வெட்கப் படுமோர் விடயம்வே றில்லை
விசைமுடுக்கி என்தோழா இன்றே விழிப்பாவாய்!

நாலெழுத்துக் கற்றறிந்து நால்வர் உடன்பழகி
நாலுபேர் கையால் நறுக்கெனக் குட்டுவாங்கி
நாலுகால் பாய்ச்சலில் நாலுதிசை சுற்றிவந்து
நாலுகாசு பார்த்து, ஒரு நாற்காலி வாய்ப்பதற்குள்
நாலு கழுதை வயதேறி, பாரம்
நசுக்கிவிட, நாலுகால் இல்லாத கட்டிலை
நாலுபேர் தூக்கும் நலிவுற்ற வாழ்வினை
நாலிமையும் கொட்டி நகைப்பாய் விழிப்பாவாய்!

கேணி மிகப்பெரிது; கெட்டிச் சுவருண்டு;
கீர்த்தனம் பாடும் சகடை; கயிறுகொஞ்சம்
நாணிச் சிறிதுகோணும்; எத்தனையோ பேரழகு
நங்கையர்கை பட்ட நினைப்புத்தான்; உள்ளிறங்க
ஏணி வளைவாய்ப் படியுண்டு; கொஞ்சமே
எட்டிநாம் பார்த்தால் திகிலுண்டு; பாதாள
வாணிபம் போல வளர்ந்திருக்கும் தண்ணீரைப்
பார்க்க முடிந்தால் பார்த்துக்கொள் விழிப்பாவாய்!

சுற்றும் விசிறியே! சும்மா புலம்பாதே!
நேர்கீழே நின்றும்உன் மூச்சென்னை எட்டவில்லை.
வெற்றுச் சுழற்சி; வெறும்பயிற்சி! மின்சாரம்
வேறு குடிக்கிறாய்; வண்ணம் தொலைத்தாய்; உன்
அற்றைநாள் வீரம் நினைக்கிறேன். தென்றலை
அள்ளிக் கொடுத்தாய் அலையெகிற! இன்றுன்னைச்
சுற்றிவிட ஒற்றைக் கழிதேவை. காலச்
சுவடுகளின் மாறாட்டம் பாராய் விழிப்பாவாய்!

நிலத்தினை நீர்விழுங்கி நின்றதோர் காலமுண்டு
நீரை நிலம்விழுங்கக் காணுகின்றோம் இன்று.
நலந்தரு நீர்நிலைக்கு நல்ல சமாதியேபோல்
நஞ்சேறும் வேகத்தில் நீள்நெடு மாடங்கள்
உலக்கை மனிதர் ஒருநீள் வரிசையில்
ஓர்கைக்குப் பத்தாய்க் குடங்களுடன். யாகம்
வளர்த்தால் மழையென்பார் வண்ணம்பார். புத்தி
வளர்க்கும் வழிசொல்ல வாராய் விழிப்பாவாய்!

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

உத்தமா எங்கே? உறங்கும்இவ் வூரில்
ஒளிந்துகொண்டா? யாரோ எறிந்த குப்பையில்
பத்தோடு மற்றொன்றாய்? வெங்காற்றில் சுற்றுகிற
பாலிதீன் பையினுள்? கத்தலிடை கூவலாய்?
புத்தம் புதிய படச்சுவ ரொட்டியைத்
தின்னும் பசுவைத் தடவிக் கொடுத்தபடி?
பொத்தாம் பொதுவில் கரித்துண்டு வாக்கியங்கள்
தீட்டும் அவனெங்கே? தேடேன் விழிப்பாவாய்!

கையில் கழியும் கழியில் இசையுமாய்க்
காற்றைத் தடவும் கருமை உலகம். இம்
மையில் உறையும் வடிவ கணங்கள்
மயங்குழல் வாழ்வின் பெருஞ்சல னங்கள்.இவ்
வையவான் திக்கெலாம் மையம் இழுக்க
விழியும்அதில் பார்வையும் வேண்டும். இறந்தபின்
தாயேன் உனையிங்கு தானமாய். ஊழிதாண்டும்
தக்கவாய்ப்பைத் தக்கவைத்துத் தங்கு விழிப்பாவாய்!

வெய்யில் மழைக்குள் வெளிச்சஇருள் நின்றமர,
வித்துமரம் ஆழ்ந்தோங்க, மொட்டுமலர் ஆடிஅற,
மெய்ப்பொய்யாய்க் காட்சி விழுந்துஎழ, காற்று
மிதவேக மாய்க்கதவை மூடித் திறக்கவொரு
தெய்வ மிருகம் சிரித்துஅழ, எங்கெங்கும்
சேய்க்கிழமாய்க் கேட்கும் ஒலியமைதி, உள்வெளியில்
ஒய்யார கோரம் உயிர்ச்சவமாய்த் தீக்குளிரில்
ஓய்வாய் உழைக்கப் பயில்வாய் விழிப்பாவாய்!

கிழக்குச் சூரியன்


Image hosted by Photobucket.com

கோடானு கோடிஅணு குண்டுகளைச் சத்தமின்றிச்
சூடாகத் தூரத்தில் தூக்கிஒரே - போடாகப்
போட்டாற்போல் மீமீமீ போர்க்களமாய் வானம்!ஒளி
தோட்டாவாய்ப் பாய்கின்ற தோ!

யாரந்த வண்ணான்?ஏய்! யெளவனத்தில் முக்கிமுக்கி
தூரக் கிழக்கைத் துவைக்கின்றான்! - பாரடாடோய்!
தண்கதிர்நீர் தான்தெளிக்க தக்க வெளுப்போடு
விண்கொடியில் காயும் விதம்.

ஆடுகளம் ஆடுபவர் ஆரோ? சுழற்பந்தைப்
போடுகையில் பாய்ந்தடிக்க பூமிமேல் - ஓடி
விரிகடலில் சிக்சரென வீழ்கிறது! ஆகா
பரிதி கிரிக்கெட்டு பந்து!

ஊற்றாகி ஓடையாய் ஊர்ந்த ஒளித்தண்ணீர்
ஆற்றுள்ளும் காட்டாறாய் ஆர்ப்பரித்து - காற்றோடு
காற்றாய் விரிந்து கடலாகி விண்மீனாம்
நாற்றுகளை மூழ்கடிக்கும் நன்று!

வானவில்லைத் தன்வீட்டு வாளியிலே கரைத்து
கானக் கிழக்காம் கருந்தரையில் - மோனமகள்
அள்ளித் தெளித்துப்பின் ஆதவனாம் கோலமதால்
அள்ளுகிறாள்! கிள்ளுகிறாள்! ஆ!

விண்கோழி இட்ட வெகுவெப்ப முட்டையிலே
கண்விழித்த குஞ்சே கதிரவனா? - கோயிலிலே
நேற்று சுடச்சுட நின்றுபெற்ற வெண்பொங்கல்
சோற்றுருண்டை தானோ சுடர்!

மற்றுமொரு விடுமுறை நாள்


முன்னொரு காலத்தில் நாங்கள்
விவசாயிகளாக இருந்தோம்.
சேற்றில் இருந்த எம் கால்கள்
வரப்புகளுக்கு ஏறின.

வரப்பிலிருந்து மண்சாலைக்கும்
மண்ணிலிருந்து தார்ச்சாலைக்கும்
தாரிலிருந்து சிமெண்டுச் சாலைக்கும்
மொசைக் தளங்களுக்கும்
ஏறிவிட்டன எம் கால்கள்.

காலில் மண்படுவது
அழுக்குப் படுவதாய்
அர்த்தமாகிவிட்டது.
செருப்பும் ஷ¥வும் அணிந்தே
நடக்க வேண்டும் என்று
எம் குழந்தைகளை வளர்க்கிறோம்.

மண்வாசனை
துர்நாற்றமாகிவிட்டது எமக்கு.

மீசை, தாடிகள் கூட
இறக்குமதியாகின்றன.

எமது உடைகள்
எமது உணவுகள்
எமது பண்பாடு
யாவும் புதைந்துபோயின.

எமது மண்ணிலிருந்து
எம்மை அந்நியமாக்கிவிட்டது
நாகரிகம்.

பொங்கல் எமக்கு
மற்றுமொரு விடுமுறை நாள்.

பார்க்கிறான் பாரதி


காயவைத்த தானியத்தைக்
கொத்தவரும் குருவிகளை நோக்கி
நீளுகிறது ஒரு கழி.

வாழைப்பழத் தோலை
இந்தா என நீட்டி
அருகில் வரும் மாடுகளை
வகையாய் அடிக்கிறது நமது கம்பு.

சாப்பிட முடியாத அளவுக்குக்
கெட்டுப் போன பிறகே
ஞாபகம் வருகின்றன நாய்கள்.

காக்கைக்குச் சோறு வைத்துவிட்டு
வரும் காக்கைகளை
விரட்டுகிறோம்.
கொஞ்சம் பறந்து
மீண்டும் உட்கார வரும் அதனை
மீண்டும் மீண்டும் விரட்டி
விளையாட்டு காட்டுகிறோம் குழந்தைக்கு.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
குருவிகளுக்கு அரிசி தூவியபடி
பார்க்கிறான் பாரதி.

ஒவ்வோர் எறும்புப் புற்றிலும்
அடிக்கடி நடக்கிறது
ஜாலியன்வாலாபாக்.

வாலைப் பிடித்து முடிந்தவரை
தூக்கி எறிகிறோம் எலிகளை.
கரப்பான்களைக் கொல்ல ஒரு தெளிப்பான்.

கொசுக்களுக்கும்
ஈக்களுக்கும் வெவ்வேறு தெளிப்பான்கள்.
தன் வீட்டோடு தானும் அழிகிறது
எட்டுக்கால் பூச்சி.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
கழுதையைக் கொஞ்சியபடி
பார்க்கிறான் பாரதி.

ஊரிலிருந்து கணவன்
தன் மனைவிக்குக்
காதல் பறவைகளை அனுப்பினான்.
அடுத்த கடிதத்தில் கேட்டான்:
'பறவைகள் எப்படி இருக்கின்றன?'
அதற்கு மனைவி எழுதினாள்:
'பறவைகள் சுவையாய் இருந்தன'.
இது ஒரு கதை.
ஆனால்,
உலகைக் காட்டும் கண்ணாடி.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
யானைக்குப் பழம் கொடுத்தபடி
பார்க்கிறான் பாரதி.

நமக்காகக்
காவல் காக்கிறது நாய்.
பால் கொடுக்கின்றன
பசுவும் எருமையும்.
உழுகிறது காளை.
இழுத்துச் செல்கிறது குதிரை.

நமது சுயநலத்துக்காக
இவற்றை உயிரோடு விட்டுள்ளோம்.
எப்போது தேவையோ
அப்போது கொல்வதற்காக
வளர்க்கிறோம்
ஆடுகள், கோழிகள், மீன்கள்...
இன்னும் நிறைய உயிர்கள்.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
குயில் பாட்டுப் பாடியபடி
பார்க்கிறான் பாரதி.

தீபத் துளிகள்


ஒண்டி நிற்கும் நாய் வெடவெடக்கிறது.
ஓரக் கூரையிலிருந்து அசைகின்றன
நீர்விழுதுகள்.
காற்று அவற்றைப் பிடித்துக்கொண்டு
குரங்குபோல் ஆடுகிறது.

பிச்சையெடுக்கப் போயிருக்கும் லெச்சுமி
இன்னும் திரும்பவில்லை.
குப்பை பொறுக்கும் கோயிந்துவுக்குக்
கோணி கனியவில்லை.

சோன்பப்டி, பழவண்டி, கீரைக்கூடை
எதற்கும் வழியில்லை.
தெருவோரக் கடைகளுக்குக்
கட்டாய விடுமுறை.
வியாபாரிகளுக்கு இந்த முறை
வேட்டையில்லை.

நமுத்த பட்டாசுகள் வீசி எறியப்படுகின்றன
நடு வீதியில்.
நடைபாதைச் சிறுவர்கள்
அவற்றையும் தம் உதடுகளையும்
பிதுக்குகிறார்கள்.

சேறு அடிக்குமென அஞ்சியபடி
புத்தாடைகள்.
இனிப்புகளை ஆசையோடு பார்க்கும்
நீரிழிவுக்காரர்கள்.

தீபத் திருநாள் வந்தென்ன?
வீட்டுக்குள் ஒளிந்துள்ளன
தீபங்கள்.

அனைவரும் அண்ணாந்து பார்க்கிறார்கள்.
மழை ஒன்றுதான்.
துளிகளோ பல்லாயிரம்.

இலங்கையில் உலவும் கொடிய விலங்கு

ராஜ்பட்சா
நீ
ஒரு கொடிய விலங்கு
ஆ அய்யோ
தவறாக கூறிவிட்டேனே
ஆம் தவறாகதான்
கூறி விட்டேன்
விலங்குகளே
என்னை மன்னியுங்கள்
எந்த விலங்கும்
தன் இனத்தை
தானே அழிப்பதில்லையே!
நீ
அதைவிட
கொடிய விலங்கு

இலங்கையில் அனகொண்டா


மனதிடமுள்ளவர்கள், பயப்பட விருப்பமுள்ளவர்கள் இதைப் படிக்கலாம்

இலங்கையின் முதல் அனகொன்டா என வர்ணிக்கப்படுமளவிற்குப் பெரியதொரு மலைப்பாம்பு இலங்கை, அநுராதபுரத்தில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படங்களைக் கீழே காணலாம்.

என்ன நீங்கள் ராஜபட்சேவோட புகைப்படம் வருமென எதிர்பார்த்தீர்களா?

ராஜபட்சே இதை விட கொடுமையான விலங்கு.







மனிதம் வளர்ப்போம்


வீட்டுக்கொரு மரம் வளர்த்தால்
வேருக்கே நீரின்றி வீணாகிறது…
வீதியிலே மரம் வளர்த்தால்
வெட்டிச்சாய்க்கிறார்கள் சாலைபோட…
மரங்களை நேசிக்காத
மனிதர்களிடம் எங்கே
மனிதநேயத்தைத் தேடுவது?

வீட்டுக்கொரு மனிதம் வளர்ப்போம்
விழிக்கட்டும் மனித சமுதாயம்!

அரசமரம்




இது கடன்வாங்கிய கவிதை

அரசமரப் பிள்ளையாரை கண்டால்
வணங்காமல் போனதில்லை

விநாயகர் வினை தீர்ப்பார் என்பதற்கல்ல...
அரசமரத்தை காப்பதொடு மட்டுமல்லாமல்,
அதை சுற்றிவந்து நீர் ஊற்ற வைத்தாரே!!!

இல்லை என்றால்
அது என்றோ விறகாகவோ...
வீட்டு முற்றமாகவோ மாறி இருக்ககும்

விநாயகரின் அருளால்...
அரசமரமும் ஆனது கடவுளாக!!!

சுற்றி வந்தால் பிள்ளை வரம் கொடுக்குமாம்
அரசமரம்...!!!

வழக்கொழிந்த பழமொழி


1,அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
2,எலி அழுதால் பூனை விடுமா?
3,எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
4,எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
5,எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
6,எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
7,எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
8,சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
9,சாண் ஏற முழம் சறுக்கிறது.
10,சாது மிரண்டால் காடு கொள்ளாது.
11,சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

Sunday, 3 June 2012

வழக்கொழிந்த தமிழ்ச் சொல்

வழக்கொழிந்த தமிழ்ச் சொல் தொடர் இப்ப வலையுலகில் மிக பிரபலமாகியுள்ளது. இதுல வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களின பட்டியலைத் தரணும். இதுல கடைசியா யாரையாவது மாட்டிவிட்டிருவாங்க. அந்த வகையில் எம்மை மாட்டிவிட்ட பெருந்தகைகள் கலாட்டா அம்மணியும், இயற்கையும். சரி என்ன எழுதலாம்னு கொஞ்சம் என் குட்டிபிரைனை போட்டு கசக்கி பிழிந்து எடுத்திருக்கிறேன். குறை இருப்பின் பொறுத்தருள்க.

1, அகம் - உள்ளம்
2, அல் - இரவு
3, முகில் - வானம்
4, உண்டி - உணவு
5, கயல் - மீன்
6, தண்மை - குளிர்ச்சி
7, வெம்மை - வெப்பம்
8, துயில் - தூக்கம்
9, கலாபம் - அழகான ஆண்மயில்
10, கபாலம் - மண்டை ஓடு

வ‌ர‌ம்


தேவ‌தை வ‌ந்து வ‌ர‌ம் கேட்டால் ம‌ன்னிக்க‌வும் சிறு குழ‌ப்ப‌ம் தேவ‌தைக்கிட்ட நான் 10 வ‌ர‌ம் கேட்டால் என்னென்ன‌ கேட்பேன் என்று வியா எழுத‌ச் சொன்னாங்க‌...

முத‌ல் வ‌ர‌ம் : ஐ. ஐ. எம் ல‌ ஒரு சீட் கேட்பேன். என‌க்காக‌ தேவ‌தை தான் போய் எக்ஸாம் எழுத‌ணும்.( அங்க‌ இருக்க‌ற‌ ஒரு நாற்காலிய‌க் கொண்டுவ‌ந்து கொடுக்க‌க் கூடாது)


இர‌ண்டாவ‌து வ‌ர‌ம்: உங்க‌ கைல‌ இருக்க‌ரா ஸ்டிக் மாதிரி என‌க்கு ஒன்னு வேணும்னு கேட்பேன்.

மூன்றாவ‌து வ‌ர‌ம்: எல்லோரும் ம‌கிழ்ச்சியா இருக்க‌ணும்னு கேட்பேன்.

நான்காவ‌து வ‌ர‌ம்: உங்க‌ கூட‌ நானும் வ‌ரேன். என‌க்கும் ஒரு ஒயிட் டிரெஸ் கொடுங்க‌னு கேட்பேன்.


ஐந்தாவ‌து வ‌ர‌ம்: இல‌ங்கையில‌ இருக்க‌ற‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு எதாவ‌து ந‌ல்ல‌து செய்ய‌ச் சொல்லிக் கேட்பேன்.

மீதி 5 வ‌ர‌ங்க‌ள் என்ன‌ கேட்க‌ற‌துன்னு தெரிய‌ல‌. அத‌னால‌ நீங்க‌ளாப் பார்த்து எதாவ‌து கொடுத்திட்டுப் போங்க‌ன்னு கேட்பேன்.

இது ஒரு ப‌ல்பே ப‌ல்பு வாங்கிய‌ க‌தை.



நான் 8th ப‌டிக்கும் போது ந‌ட‌ந்த‌து. என‌க்கு அது என்ன‌மோ தெரியாது. க‌ர‌ண்ட் இருக்கும் போது எல்லாம் ப‌டிக்க‌ பிடிக்காது. ப‌வ‌ர் க‌ட் ஆன‌தும் டார்ச் லைட் வ‌ச்சு ப‌டிச்சுக்கிட்டு எல்லோரையும் டார்ச்ச‌ர் ப‌ண்ணுவேன். என் அம்மா இந்த‌ வெளிச்ச‌த்துல‌ எல்லாம் ப‌டிக்காத‌ க‌ண்ணு கெட்டுப் போயிடும்னு சொல்லுவாங்க‌. அதெல்லாம் முடியாது நான் ப‌டிக்க‌ணும் இல்ல‌னா எங்க‌ மிஸ் திட்டுவாங்க‌ன்னு ப‌டிப்பாளி மாதிரி ஒரு ஸீன் வுடுவுவேன்.
என் அம்மா ப‌டிக்க‌ வேண்டாம்னு கெஞ்சுவாங்க‌. ப‌ர‌வால்ல‌ உங்க‌ மிஸ்ட‌ நான் வ‌ந்து சொல்றேன்னு சொன்னாங்க‌. மார்க் க‌ம்மியாகிடும் நான் ப‌டிக்க‌ப் போறேன்னு சொல்வேன். ப‌ர‌வால்ல‌ன்னு என் அம்மா சொல்வாங்க‌. என் அப்பா இத‌ தான‌ நீ எதிர்பார்த்த‌ ஒழுங்கு ம‌ரியாதையா போய் புக்க‌ வைனு சொல்வாங்க‌. நானும் ச‌ரிம்மா ஆனா மார்க் க‌ம்மியாச்சுனா என‌க்கு தெரியாது அதுக்கு நீங்க‌ தான் பொறுப்புன்னு அப்டியே ப‌ழிய‌ தூக்கி அம்மா மேல‌ போட்டுட்டு ஹாயா வாச‌ல்ல‌ வ‌ந்து உட்கார்ந்திடுவேன். இது எப்ப‌வுமே எங்க‌ வீட்ல‌ அன்றாட‌ம் ந‌ட‌க்கும் நிக‌ழ்வு.


அதே மாதிரி வெளியில‌ எங்க‌யாவ‌து கிள‌ம்பும் போதும் நான் ஸ்கூல் புக்ஸ் எடுத்துட்டுப் போவேன். என் அப்பா எதுக்குன்னு கேட்டா ப‌ஸ் கிள‌ம்ப‌ற‌ அந்த‌ 2 ம‌ணி நேர‌த்த‌ வேஸ்ட் ப‌ண்ண‌க் கூடாதுல‌னு சொல்லுவேன். என் அப்பாக்கு கோப‌ம் கோப‌மா வ‌ரும். அதுவும் ஒரு புக்ஸ‌ எடுத்திட்டு வ‌ர‌ மாட்டேன் . ச‌யின்ஸ் புக் எடுப்பேன் அப்போ திடிர்ன்னு ந‌ம‌க்கு ஹிஸ்ட்ரி ப‌டிக்க‌ணும்னு ஆசை வ‌ந்தா என்ன‌ ப‌ண்ற‌துன்னு ஹிஸ்ட்ரி புக்கையும் எடுப்பேன். ஒரு வேளை ந‌ம‌க்கு க‌ண‌க்கு மேல‌ ஆர்வ‌ம் வ‌ந்திடுச்சுன்னா என்ன‌ ப‌ண்ற‌துன்னு மேக்ஸ் புக்கையும் எடுப்பேன். இப்டியே எல்லா புக்கையும் எடுத்திடுவேன். என் அப்பா க‌டுப்பாகி எல்லா புக்ஸையும் வக்கிரியா என்ன‌ன்னு ச‌த்த‌ம் போடுவாங்க‌. நான் எல்லா புக்ஸையும் அப்பா முன்னாடி வ‌ச்சிட்டு எதாவ‌து ஒரு புக்க‌ அப்பாக்கு தெரியாம‌ பேக்ல‌ ஒளிச்சு வ‌ச்சுடுவேன். அப்ற‌ம் ப‌ஸ்ல‌ போகும் போது அந்த‌ புக்க‌ எடுத்து வ‌ச்சு ரொம்ப‌ சீரிய‌ஸாப் ப‌டிப்பேன். இதுவும் எங்க‌ வீட்ல‌ வ‌ழ‌க்க‌மா ந‌ட‌க்குற‌ ஒன்னு. நான் ப‌ஸ்ல‌ ப‌டிக்க‌ற‌த‌ பார்த்திட்டு அங்க‌ இருக்க‌ற‌ பேர‌ண்ட்ஸ் எல்லாம் அவ‌ங்க‌ பிள்ளைங்க‌கிட்ட‌ அந்த‌ பொண்ண‌ப் பாரு ப‌ஸ்ல‌ கூட‌ டைம் வேஸ்ட் பண்ணாம ப‌டிக்குது நீயும் தான் இருக்கியேன்னு திட்டிட்டுப் போவாங்க‌. என் அப்பா அப்ப‌வும் இத‌ தான நீ எதிர் பார்த்த‌ இப்ப‌யாவ‌து அந்த‌ புக்க‌ மூடி வைன்னு சொல்லுவாங்க‌.


அப்டி தான் ஒரு நாள் ப‌ஸ்ல‌ கிள‌ம்பி ஒரு ஹாஸ்பிட்ட‌லுக்குப் போனோம். அங்க‌ உட்கார்ந்திருக்கும் போது டைம் வேஸ்ட் ப‌ண்ண‌க் கூடாதுன்னு நானும் மேக்ஸ் புக்க‌ எடுத்து க‌ண‌க்கு போட்டுக்கிட்டு இருந்தேன். போற‌ வ‌ர்ற‌வ‌ங்க‌ எல்லாம் பாரு அந்த‌ப் பொண்ண‌ எப்டி ப‌டிக்கிதுன்னு சொல்லிட்டே போனாங்க‌. நானும் அதெல்லாம் கேட்டுக்கிட்டே மேக்ஸ் போட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு ஒரு அம்மா என் ப‌க்க‌த்துல‌ வ‌ந்து உட்கார்ந்தாங்க‌. என்ன‌மா ப‌ண்ற‌ன்னு கேட்டாங்க‌. நானும் மேக்ஸ் போடுறேன் ஆன்டினு சொன்னேன். என்ன‌ கிளாஸ் ப‌டிக்க‌ற‌ன்னு கேட்டாங்க‌ சொன்னேன். ஓ அப்டியா நானும் மேக்ஸ் டீச்ச‌ர் தான்னு திடீர்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க‌. நான் அத‌க் கேட்டு அதிச்சியாகி மேக்ஸ் புக்க‌ வ‌ச்சிட்டு ச‌ய‌ன்ஸ் புக்க‌ எடுக்க‌லாம்னு டிரை ப‌ண்ணேன். அதுக்குள்ள‌ அவ‌ங்க‌ புக்க‌ கொடும்மான்னு வாங்கிக்கிட்டாங்க‌. ச‌ரி நான் ஒரு க‌ண‌க்கு போடுறேன் நீ செய்றியானு கேட்டாங்க‌.என் அப்பாவுக்கு ஒரே ச‌ந்தோஸ‌ம். நான் மாட்டிக்கிட்ட‌துல‌. நானும் வேற‌ வ‌ழி இல்லாம‌ ச‌ரின்னு சொன்னேன். அப்டியே என் அம்மாகிட்ட‌ இந்த‌ க‌ண‌க்க‌ உங்க‌ பொண்ணு போடுற‌த‌ வ‌ச்சே 10thல‌ என்ன‌ மார்க் எடுக்கும்னு சொல்லிடுவேன்னு சொல்லி ஒரு 10 க‌ண‌க்கு போட்டாங்க‌. நானும் யோசிச்சு யோசிச்சு ஒரு 2 ம‌ணி நேர‌ம் உட்கார்ந்து செய்து முடிச்சேன். உங்க‌ பொண்ணு சுமாரா தான் மார்க் எடுக்கும்னு சொல்லுட்டாங்க.
ந‌வோத‌யா ப‌ள்ளி இந்தியாவில் எல்லா மாநில‌த்துல‌யும் இருக்கு. த‌மிழ்நாட்டுல‌ ம‌ட்டும் இல்ல‌. இது வ‌ந்தால் ஏக‌ப்ப‌ட்ட‌ ஏழை எளிய‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ன் பெற‌ முடியும்...

பாண்டிசேரியில் மிக‌ சிற‌ப்பாக‌ ந‌ட‌க்குது இந்த‌ இல‌வ‌ச‌ப‌ள்ளி. இந்த‌ வ‌ருட‌ம் 100% தேர்ச்சி.

சில‌ர்

சில‌ர் நவோத‌யா ப‌ள்ளி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்துட‌க்கூடாது த‌மிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க‌...

இப்ப‌டி சொல்ப‌வ‌ர்க‌ளில் எத்த‌னை பேர் டிவி நிக‌ழ்ச்சியில‌ பிற‌ மொழி இருந்தால் அதை பார்க்க‌வே மாட்டேன்னு சொல்றாங்க‌...

த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் த‌மிழ் வார்த்தையை த‌விர‌ வேற‌ எதாவ‌து ஒரு வார்த்தை இருந்தா கூட‌ அந்த‌ ப‌ட‌த்தையே நான் பார்க்க‌ மாட்டேன்னு சொல்லுறாங்க‌.

த‌மிழ் பாட்டுல‌ த‌மிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்க‌வே மாட்டோம்..ரேடியோவ‌ ஆஃப் ப‌ண்ணிடுவோம்னு சொல்லுறாங்க‌.

ம்ஹீம் இதுவ‌ரை சொன்ன‌து இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க‌, கேட்க‌ ந‌மக்கு பிடிக்கும். இதுல‌ எல்லாம் ந‌ம் த‌மிழ் ப‌ற்றை காட்ட‌வே மாட்டோம்.

ஆனால் ஒரு ஏழைக்கு இல‌வ‌ச‌ ப‌ள்ளி, ந‌ல்ல‌ த‌ர‌மான‌ க‌ல்வி, ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ம், உண‌வு, உடை கொடுக்க‌றேன்னு நவோத‌யா இய‌க்க‌ம் வ‌ந்துடுச்சினா ம‌ட்டும் ந‌ம்ம‌ த‌மிழ் ப‌ற்ற‌ காட்டுறோம்... க‌டும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

நாம‌ தான் எவ்வ‌ள‌வு சுய‌ந‌லவாதிக‌ள் பாருங்க‌ள்... ஏழைக‌ளின் வ‌யிற்றில் அடித்து தான் ந‌ம் த‌மிழ் ப‌ற்றை காட்டுவோம்.

ந‌வோத‌யா ப‌ள்ளி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்து விட‌க் கூடாதுன்னு சொல்லுற‌ நாம இதுவ‌ரை எத்த‌னை ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ க‌ல்வி கொடுத்து இருக்கோம்...

நாமும் அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ மாட்டோம். உத‌வி செய்ற‌வ‌ங்க‌ளையும் செய்ய‌ விட‌ மாட்டோம்.

இலவச இயற்கை வேளாண்மை பயிற்சி

இலவச இயற்கை வேளாண்மை பயிற்சி

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வழி நடத்தும் இயற்கை வழி வேளாண்மை - நிரந்தர வேளாண்மை பயிற்சி, நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 5-நாட்கள் கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள “வானகம்”- நம்மாழ்வார் உயிர்ச்சூழலியல் நடுவத்தில் நடைபெற உள்ளது. தங்குமிடமும் உணவும் வழங்கப்படும். 5 நாட்களும் தங்கி பயிலுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வழி உழவாண்மையின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்த வாரீர். முன்பதிவு அவசியம். தேதி: 15.06.2012 முதல் 19.06.2012 தொடர்புக்கு:9952324855, 9488055546.