Friday 13 April 2012

வெற்றிதானா?






ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியா?

சுவரொட்டிகளுக்குத் தமிழ்க் கலாசாரத்தில் தனியொரு இடம் உண்டு. அதாவது அரசியல் கலாசாரத்தில். தற்புகழ்ச்சி, தன்னைத்தானே வியந்துகொள்ளும் ‘நார்சிசம்’ பேனைப் பெருமாளுக்கும் மிகைப்படுத்தல் இவையெல்லாம் இடம் பெறாத அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை தமிழகச் சுவர்கள் இதுவரையில் கண்டதில்லை.

கடந்த வாரம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இந்திய அரசை வற்புறுத்தி வெற்றி கண்ட திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்து திமுக இளைஞர் அணியால் ஒட்டப்பட்ட ஓரு நீண்ட சுவரொட்டி நகரில் ஆங்காங்கே காணப்பட்டது. தான் தொடர்ந்து பிரதமருக்கு எழுதிய கடிதங்களின் காரணமாகத்தான் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்ற ரீதியில் ஜெயலலிதா அறிக்கை விட்டதும் ‘அம்மா’வை வாழ்த்தி சுவரொட்டிகளும் ஃபிளக்ஸ் போர்டுகளும் முளைத்தன.

உண்மையிலேயே இது வெற்றிதானா? இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்கு நன்மை கிடைக்குமா? இலங்கையைக் குறித்த இந்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இனியாவது இலங்கை திருந்துமா?

உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு நடந்தவற்றைக் கூர்ந்து ஆராய்பவர்களுக்கு ஓர் உண்மை புலனாகும். அது இந்தியா, இலங்கை தன் பொறுப்புகளிலிருந்து நழுவிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறதே தவிர இலங்கையை நிர்பந்திக்கும் நிலையை ஏற்படுத்திவிடவில்லை.

இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த ‘போரிலிருந்து பாடம் கற்றல் மற்றும் நல்லிணக்கக் குழு’வின் (LLRC) பரிந்துரைகள் எவ்விதம் அமலாகிறது என்பதை இலங்கை அரசின் ஆலோசனையோடும் சம்மதத்தோடும்தான் ஐநா மேற்பார்வையிட முடியும் என்கிறது இந்தத் தீர்மானத்தின் மூன்றாவது பிரிவு. இதில் இலங்கை அரசின் ஆலோசனையோடும் சம்மதத்தோடும் என்கிற திருத்தம் இந்தியா சொல்லிய யோசனை.

இலங்கை சில பரிந்துரைகளை மேம்போக்காக அமல்படுத்திவிட்டு எல்லாவற்றையும் சரி செய்து விட்டோம் என்று சொன்னால் அது சொல்வது சரிதானா என்பதை உலக நாடுகள் எளிதில் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்து விடமுடியாது. அப்படி ஆராய்வதற்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். சம்மதிக்குமா?

போர் முடிந்த பின்பு மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை விசாரிக்க ஐநா அவையின் பொதுச் செயலாளர் மூவர் குழு ஒன்றை அமைத்தார். ஐநாவின் பொதுச் செயலாளரே நியமித்திருந்தாலும் அது அதிகாரபூர்வமான குழு அல்ல. அந்தக் குழு அமைக்கப்பட்டபோதே இலங்கை கடும் ஆட்சேபம் தெரிவித்தது.கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தின்முன் ராஜபக்ஷே அரசில் உள்ள அமைச்சர் ஒருவரே ஆர்ப்பாட்டம் நடத்தினார், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது நடந்த சம்பவங்களைக் கண்ட ஐநா அந்தக் குழுவின் அறிக்கையை கொழும்பில் வெளியிடும்முன் தனது பணியாளர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தியது. நிலைமை அந்த அளவு மோசமாக இருந்தது. அறிக்கை கடந்த மார்ச் மாதமே தயாராகிவிட்ட போதும் அதை உடனே வெளியிடாமல், சிங்கள-தமிழ்ப் புத்தாண்டுகள் வந்த ஏப்ரல் மாதத்தில் அதை வெளியிட்டது. அந்த அறிக்கையைக் கடுமையாகச் சாடி இலங்கை வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இப்போதும் இந்த அறிக்கையை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமானது எனச் சொல்லி முழுமனதோடு ஏற்கவில்லை. அது எப்படி பரிந்துரைகளின் அமலாக்கத்தை மேற்பார்வையிட சம்மதிக்கும்?

இந்தியா செய்த இன்னொரு திருத்தம் பரிந்துரைகளை அமல் செய்ய ஐநா அளிக்கும் உதவிகளை மதித்து ஏற்க வேண்டும் (respect the assistance) என்ற வார்த்தையை நீக்கியது.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதற்கு ஆதரவாகத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. திராவிடக் கட்சிகள் கொண்டாடுவதற்குரிய ‘வெற்றிதானா’ இது?

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று இந்தியா நடந்துகொண்டதை மார்ச் 19ம் தேதி ராஜபக்ஷேவிற்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கே குறிப்பிடுகிறார், ‘கட்டாயமாக ஏற்க வேண்டும், கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று மேலை நாடுகள் வற்புறுத்துவது நமக்கென எப்போதுமே பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இந்தியா அதை நீக்கும் வகையில் தீர்மானத்தின் மொழி நடை மாற்றப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தியது. அது மாற்றப்பட்டதும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்’ என்று பிரதமர் எழுதுகிறார்.

"இப்போது நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை மனப் பூர்வமாக கொண்டாடமுடியாது. காரணம், அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை உன்னிப்பாக படித்துப் பார்த்தால் பெருத்தஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அதிலும் கடைசிநேரத்தில், காலத்தின் கட்டாயத்தால் இந்தியா இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதுவும் அந்த நாட்டின் அனுமதியோடு விசாரணையை மேற்கொள்ளலாம் என்பது போன்ற சூழ்ச்சியான, இலங்கைக்கு ஆதரவான சில திருத்தங்களோடு அதற்கு ஒப்புதல் அளித்திருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார் ஈழப் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரித்து வரும் கவிஞர்  தாமரை.

ஆனால் இதுவரை இந்தியா பின்பற்றி வந்த இலங்கை தொடர்பான நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறார் பேராசிரியர் வி.சூரியநாராயணன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்வி மையத்தின் முன்னாள் இயக்குநரான இவர், இலங்கை தொடர்பான விஷயங்களில் வல்லுநர்.

"2009ல் ஐநா மனித உரிமை கவுன்சில்முன்,இலங்கை மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டிருக்கிறது என இதே போல், இலங்கையைக் கடிந்துகொள்ளும் ஒரு தீர்மானம் வந்தது. அப்போது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளோடு இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து தீர்மானத்தைத் தோற்கடித்தது. அது மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததற்காக இலங்கையைப் பாராட்டும் ஒரு தீர்மானமும் இந்தியாவின் ஆதரவோடு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒரு தேசத்தைக் குறிப்பிட்டுக் குறை சொல்லும் வகையில் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் கொண்டு வருவதை அப்போது இந்தியா எதிர்த்தது. இப்போது ஒரு தேசத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது" என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த மாற்றத்திற்குத் தமிழக அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றமும் ஒரு காரணம் எனப் பேராசிரியர் சூரியநாராயணன் கருதுகிறார். "இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வகைசெய்யும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்" என்கிறார் அவர். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண திஸ்ஸ விதரணக் குழு அளித்த அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்திருப்பதும் இலங்கை அரசு உண்மையாக ஒரு தீர்வை விரும்புகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அதுதான் அடிப்படையான கேள்வி. எந்த ஒரு தீர்வையும் தட்டிக் கழிக்கவே விரும்பும் இலங்கை அரசு எப்படி ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தைச் செயல்படுத்த முன் வரும்? அப்படி அது முன்வராத பட்சத்தில் அதை வற்புறுத்த இந்தத் தீர்மானத்தில் ஏதாவது வழி வகை செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் ஏதுமில்லை.

இத்தனைக்கும் நடுவில் கிடைத்திருக்கும் ஒரே ஓர் ஆறுதல், இலங்கை அரசு அமைத்த LLRCயின் அறிக்கை. ‘சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட புகார்களைக் கண்டுகொள்ளவில்லை’ என்ற ஒரு வரி. சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இந்த வரி உதவலாம்.

இப்போதைக்கு, இந்தியா தனக்கு எதிராக வாக்களித்ததைக் கண்டு இலங்கை கொதித்துப் போயிருக்கிறது. "விரும்பத் தகாத விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என இலங்கை அரசியல்வாதிகள் பேசத் துவங்கியிருக்கிறார்கள், காஷ்மீர் பிரச்சினையை முன்வைத்து இந்தியாவைச் சந்திக்கு இழுக்க வேண்டும் எனக் கறுவிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் தன்னுடைய தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டதால் அமெரிக்கா, இந்தியா குறித்து ஏமாற்றமடைந்திருக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி.

No comments:

Post a Comment

Thank You...