Astrology

ஆயுர்வேதமும் - ஜோதிடமும்
மனித குலம் தோன்றியதிலிருந்து தொடர்ந்து போராடிவரும் ஒரு விஷயம் நோய்தடுப்பு. உடல் ஆரோக்கியம் பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். புதிய வியாதிகளுக்கு மருந்து கண்டறிந்ததும் , மேலும் பல புதிய வியாதிகள் தோன்றி சவாலாக இருப்பதையும், கண்கூடாக காண்கிறோம். மனிதன் ஆயுளை வளர்க்கும் எண்ணத்தில் களைப்படையாமல் தொடர்ந்து போராடி வருகிறான் என்பது உண்மை.

நவீன மருத்துவத்துறை தற்சமயத்தில் அறிவியல் சார்ந்து பல வளர்ச்சியை கண்டிருக்கிறது. மேலும் பல புதிய ஆராய்சிகள் நடை பெற்றுவருகிறது. நவீன மருத்துவத்தில் உடல் உறுப்புகளை காட்டிலும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் அதிகம் எனலாம். மருத்துவதுறையின் சேவைகள் முடிவற்றது, வளர்ச்சி அடையக்கூடிய ஓர் துறை. மனிதனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மருத்துவத்தால் குணமாக்கும் மருத்துவர் தெய்வத்திற்கு நிகராக கருதப்படுகிறார். மனித உடம்பை இயந்திரமாக பாவித்து வாகனத்தை பழுது பார்ப்பதைப் போல உதிரிபாகங்களை பழுது பார்க்கும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், எனினும் நல்லவர் ஒருவர் இருந்தாலும் உலகில் மழை பொழியும் எனும் சான்றோர் வாக்கினைப்போல பல மனித நேய மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

நமது பாரத கலாச்சாரம் அனைத்து துறையிலும் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்திருந்தது. கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நிலையை அடைந்த பொற்காலம் உண்டு. இந்திய தேசத்தை காண வந்த வெளிநாட்டினர்களின் பயணக்குறிப்பை கண்டால் இந்தியாவின் உயர்வை உணர முடியும். 750 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பயணித்த பயணியின் குறிப்பேட்டில் ஓர் அதிசயிக்கத்தக்க விஷயம் இருந்தது. இந்தியாவில் சிலருக்கு நெற்றிப்பகுதியில் முக்கோணமாக தழும்பு இருப்பதைக் கண்டார்கள். அந்த காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக மூக்கு பகுதியை துண்டிக்கச் செய்தார்கள். இதனால் மருத்துவர் புருவ மத்தியிலிருந்து தலைகீழாக முக்கோண வடிவில் தோலை எடுத்து மூக்கு பகுதியை உருவாகினார்கள்.

வெளிநாட்டினரின் பயணகுறிப்பில் எழுதப்பட்ட இந்த தகவல் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வித்தாக அமைந்தது. நமது வேதங்களின் பிற சேர்க்கையாக இருப்பது உப வேதங்கள் என்கிறோம். இதில் தர்ம சாஸ்திரம், தனுர் வேதம் [போர்கலை ] மற்றும் ஆயுர்வேதம் என பல உப பகுதிகள் உண்டு. ஆயுர்வேதம் எனும் இந்த மருத்துவ பிரிவு, 100 பிரிவுகளையும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் கொண்டது. ஆயுளை கூட்டும் வேத மந்திரம் என்பதால் இதை ஆயுர்வேதம் என்கிறோம். சரகர், ஸுஸ்ருதர், வாக்பாதர் மற்றும் சாரங்கதாரர் எனும் ரிஷிகள் பலர் மருத்துவ துறையில் புகழ்பெற்று அயுர்வேத மருத்துவ துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்கள். சரகர் என்பவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராவார்.

இவர் பயன்படுத்திய கருவிகளை கண்டு தற்கால அறுவைசிகிச்சை மருத்துவர்கள் வியப்படைந்தார்கள், இவர் வழியில் வந்த மாணவர்கள் தான் வெளிநாட்டினர் கண்ட மூக்கு அறுவை சிகிச்சையை செய்தவர்கள். மேற்கண்ட ரிஷியிகளின் குறிப்பிலிருந்து நவீன மருத்துவர்கள் பல விஷயங்களை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். மருந்து தயாரித்தல், அறுவை சிகிச்சை வியாதியை ஆராய்தல் என ஆயுர்வேதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். மனித உடல் மூன்று அம்சங்கள் கொண்டது என ஆயுர்வேதம் வரையறுக்கிறது. 'தோஷ தாது மல மூலம் ஹி சரீரம் ' என்பது ஆயுர்வேத கூற்று. மூன்று தோஷம், எழு தாதுக்கள், மும்மலங்கள் உடலை உருப்பெற செய்கிறது என்பதே இதன் விளக்கம்.

வாதம் - பித்தம் - கபம் என்பது மூன்று தோஷங்கள். இவை சம நிலை தவறும் பொழுது உடல் நோய் ஏற்படும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். ரசா, இரத்தம், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்லம், சதை [மாமிசம்] என்பவை சப்த தாதுக்கள் எனவும், வியர்வை, மலம், சிறுநீர் என்பவை மும்மலம் எனவும் பிரிக்கப்படுகிறது. மூன்று தோஷத்தின் பாதிப்பு சப்த தாதுக்களிலும் ' மும்மலத்திலும் எதிரொலிக்கும் என்பது ஆயுர்வேத விளக்கம். இந்த தெய்வீக மருத்துவ முறை உப வேதத்தில் இருப்பதற்கு காரணம், மனித உடல் நோயினால் பாதிப்பு அடைவதற்கு கர்ம வினை காரணம் என உறுதியாக கூறுகிறது. வேதத்தின் சாரம் என அழைக்கப்படும் வேதாந்தங்களின் உண்மை இதில் பளிச்சிடுவதை நாம் உணர வேண்டும்.

சாத்வ, தமோ, ரஜோ குணங்கள் கொண்டு ஆயுர்வேதத்தில் மூன்று தோஷங்கள் பிரிக்கப்படுகிறது. சாத்வ குணம் கொண்டது பித்தம், தமோ குணம் கொண்டது கபம், ரஜோ குணம் கொண்டது வாதம் என கூறலாம். இவை சம நிலையில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமும், சமநிலை தவறி எந்த தோசம் ஆளுமை செலுத்துகிறதோ அதன் அடிப்படையில் உடல் செயல் அமையும். உதாரணமாக கபம் அதிகரித்தவர்கள் தமோ குணத்திற்கு ஏற்ப மந்த தன்மையையும் செயலில் பின்னடைவும் ஏற்படுவதை உணரலாம்.

உடலின் விஞ்ஞானம் மட்டுமல்லாமல், சூழ்நிலையின் விஞ்ஞான உண்மைகளையும் ஆயுர்வேதம் விளக்குகிறது. வருடத்திற்கு ஆறு பருவ காலங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு காலத்திற்கும் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும், என்ன பொருளை உணவாக உட்கொண்டால் பருவ காலங்களில் உடல் ஆரோக்கியம் பெறலாம் என ஆயுர்வேதம் நீண்ட பட்டியலை தருகிறது. வேதத்தின் அங்கம் ' வேதாங்கம்' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வேத பிரிவுகளும் [அங்கங்களும்] பிற அங்கங்களுடன் தொடர்புடையது. ஆயுர்வேதம் எனும் இந்த தெய்வீக மருத்துவ முறை, ஜோதிடம் எனும் மற்றொரு வேத அங்கத்துடன் இணைந்து சக்தி மிக்கதாக செயல்பட்டு வந்தது. தற்சமயத்தில் ஆயுர்வேத மருத்துவர்கள் ஜோதிட அறிவுடன் செயல்படுவது குறைவே. கர்ம வினையை கருவாக கொண்ட இரு பரிமாணங்கள் தான் ஜோதிடமும், ஆயுர்வேதமும். ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவரின் நோய் தன்மையை ஆராய்ந்து மருத்துவம் செய்வதில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் ஒருவருக்கு குணமாகாது என ஜோதிடத்தில் உணர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும் என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைபாடுடன் வந்தால், முதலில் அவர்களின் ஜாதகத்தை கொண்டு குழந்தை பாக்கியம் உண்டா என ஆராய்ந்த பின் மருந்து கொடுக்க வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் செயல்முறை.

இந்த முறையில் செயல்படாத பட்சத்தில் மருத்துவருக்கும், ஆயுர்வேதத்திற்கும் களங்கம் ஏற்படும் என்பதே இதற்கு பின்னால் உள்ள உண்மை. ஜோதிடம், வேத கால மருத்துவ முறையில் சோதனை களமாக இருந்தது. தற்கால இரத்த பரிசோதனை, எக்ஸ் - ரே என்பதற்கு பதிலாக செலவில்லாத சோதனை களமாக பயன்பட்டது.