Wednesday 19 March 2014

வேறுபாடு.


தட்டப்படுகிறது கதவுகள் அல்ல
எனது இதயம்
கைகளால் அல்ல
பெரும் கடப்பாறையினால்.
திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..
என் இதய நாளங்கள்.
அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.
அருகதை அற்ற சில மானிடத்தால்,,
பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்
வருத்தப்படுகிறது எனது மனது.
ஏன் எனில்
கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....
திருத்த முற்படும் போதெல்லாம்
திணறிக் கொள்கின்றேன்
பொருத்தமற்ற போக்குகளினால்......

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.
என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............
நேற்றுவரை நான் நினைக்கவில்லை
என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.
நின்முகத்தைக் கண்டவுடன்
நினைவிழந்தேன் மறுகணமே.
காதல் இல்லை காமம் இல்லை - என்
கனவிலிலும் நீ இல்லை - ஆனால்
கண் இமைக்கும் பொழுதெல்லாம்
கண்மணியே எனக்குள் நீ.
சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி
நீ எனக்குள் என்று?
உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்
துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ
எறிந்து கொண்டிருக்கின்றேன்
ஏதேதோ எல்லாம் உணக்காக.
மீண்டும் எனக்குள் ஓர் வருடல்
அந்த மீறிய காலம் நோக்கி.
காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்
அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ
புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
இப்படிக்கு உனக்கு.

நிஜங்கள்.

வெறும் கனவுகளுடன் வாழ்ந்து
களைத்து விட்டவன் நான். - எப்படி
நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......
என் சென்ற காலத்தை -இனம்
புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.
ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்
இருந்து விட முடியவில்லை இப்போது.
ஏதோ ஒன்று எனக்குள்
நின்று இம்சை தருகிறது.
உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.
இனம் தெரியாத மவுனம்,
காலம் தெரியாத நேரம்,
கணக்கிட முடியாத காலம்,
இவைகளுடன் எப்படி- நான்
இணைந்து கொண்டேன்???
எனக்குத் தான் எத்தனை
சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி
என்னால் மீண்டும்- நிஜங்களுடன்
நிற்க முடிகிறது???
சிந்தித்துப் பார்க்க -எனக்குச்
சிரிப்பாக வருகிறது.
ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே
அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

உறவு.


என்றும் என் அன்பானவளுக்கு,
உனது அன்பான அந்த வருடல்
என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
எனது மனத்திடையே நீ இப்போ.
எப்படி உன்னால் இது இயன்றது????
காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு
மீண்டும் ஒரு கலர் கனவு.
சிரித்துக் கொள்கிறேன்....
தெரியவில்லை ஏன் என்று???
சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்
ஆனால் கண்ணீர் வருவதில்லை.
நினைத்துக்கொள்கின்றேன்
நீ இல்லாத அந்த நிமிடத்தை.
உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.
உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.
காதலித்துக்கொள்
என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.
அப்படியானால்
எப்படி இது சாத்தியமானது????
காதலித்துக் கொள்ளவில்லை.....????
கைகள் பட்டதில்லை.......????
கண்கள் கலக்கவில்லை........????
ஆனால் இது கனவும் இல்லை.
எம்மிடையே என்ன உறவு இது?????

மனம்.

மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........

பொய்


புதிய சந்திப்புக்கள்,
புதுமையான மனப்பகிர்வு,
இளமை அனுபவங்கள்,
இன்பக் கைகலப்பு,
காலத்தின் இணைப்பு,
காதலின் சிறப்பு,
இதயத்தின் வருடல்,
இன்பத்தின் வருகை,
தேடலின் முடிவு,
விடியலின் தொடக்கம்,
செப்பனிட்ட நட்பு,
தெவிட்டாத பேச்சு,
நேரத்தின் அழைப்பு,
நின்மதியின் கலைப்பு,
இதுவெல்லாம் என்ன
எம்முடைய இணைப்பு.
சிந்திக்கச் செய்கின்ற,
சின்னம் சிறிய நிமிடம்,
கண்கள் கலந்து கொள்ளும் போதும்
மனங்கள் ஒருமிக்கும் போதும்
நட்பு என்பது நகரத் தொடங்குகிறது.
கடவுளினால் இணைக்கப்பட்டது காதல் ஆகிறது.
காமத்தால் இணைக்கப்பட்டது
வெறும் குளிர் காய்தல் ஆகிறது.
நேற்றைய சந்திப்பு அது இன்றைய காதல்.
நாளை மீண்டும் என்னுமோர் புது நகர்வு.
நானும்+நீயும்=யாரோ ஆனோம்.

வாழ்க்கை.



வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.
இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.
பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.
வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.
நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???
வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??
பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.
காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.
ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.
அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.
எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????
பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.
வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

கடவுள்.



கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.
ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.
நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது
என்பது உண்மை என்றதை அறிவாய்.
மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.
கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.
ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.
உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.
ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????
இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???
ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.
ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.
கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு
ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.

தேவதை மட்டும்


நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்
குடைசாய்கிறது
என் மனசு.

எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்

பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

குடைக்குள் காளான்


உன்னோடு
மழையில்
நனைந்த சமயங்களில்தான்

குடைக்குள்
பூத்த காளான்கள்
போலே

என்னுள்ளே
மழைபொழிந்த
மௌனங்களை
உணர்ந்தேன்.

தேவதையின் காடு


விடியாத இரவெல்லாம்
உன் கண்விழியில்
வைத்தாய்

விடிந்த வானம்
தேடும் நிலவாக
என்னை செய்தாய்

மின்சார பூவின் மின்னல்
மனதோடு உரசும் தென்றல்
ஏன் தந்தாய்? நீ ஏன் வந்தாய்?

கனவோடு கண்கள் தொலைத்து
இரவெல்லாம் உன்னை தேடும்
என் தூக்கம்?

மாறன் காண மல்லிகையே
மனதில் தந்தாய் மலையினையே
ஏன் பெண்ணே?

ஓடாத நதிஒன்று
கடல் சேர்ந்த மாயம் என்ன?
தேடாத பொருளொன்று
கைசேர்ந்த அர்த்தம் என்ன?

என்னை சுற்றும் உலகம் மட்டும்
உன்னை சுற்றும் காரணம் என்ன?
கடவுள் காண கண்கள் இன்று
உன்னை கண்டு கடவுளானதென்ன?

நில்லடி!
சொல்லடி! இல்லை
கொல்லடி….

நிலவாக நீ வருவாய் என்று



உனக்கு தெரியாது
என்பதுபோல் என்
காலை உனது கால்
உரசிக்கொண்டு
நாம் பேசியிருக்க


நீலவான வீதியில்
நான் கட்டிய
உனக்கான வீட்டில்
நான் மட்டும் தனியே
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்

நீல வானில் நீ வருகையில்
வின்மீன்கள் குத்தும் என்று
என் கைகள் சிவக்க
அப்புறப்படுத்தி
நீ முத்தமிட்டு
எனை சிவக்க செய்த
அந்த மழைக்கால
உன் கடைசி பிரிதலின்
நினைவுகளின் ஆருதலுடன்


நிலவாக நீ
வருவாய் என்று.

மாலை மழையில்


மறந்தும் குடை
எடுத்துச் செல்வதில்லை
நான்

மார்கழி மாத
மாலை மழையில் நீ
நனைந்து மழைக்கு
காய்ச்சல் தந்த

அந்த
எதார்த்த நிகழ்ச்சியிலிருந்து…

அதே கண்கள்

சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்
இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

Monday 10 March 2014

கடவுள் வாழ்க




நீதான்
நீ மட்டும்தான் பே ரழகு
பிறகே சொன்னார்கள்
நீங்கள் ரெட்டைப் பிறவியாமே!
இன்னோர் பேரழகா!
கடவுள் வாழ்க
ஓவியத்தின் நிறைவில் சொக்கி
இன்னொரு பிரதி எடுத்துக்கொண்ட
ஓவியன் போலோ அவன்!
நீயேதான் அவளும்
எனினும்
இன்னோர் உன்னையும்
காண ஆவல்...
ஏன்?
மரகதப்புறா
ஒன்று பார்த்தால் போதாதா?
பிழையாக எண்ணாதே
தாயின்
இருமுலைகளையும்
கேட்டு அழும் பிள்ளை நான்
நான் கண்டதேயில்லை
ஒரே காலத்தில்
இரண்டு வசந்தங்கள்
இரண்டு முழு நிலாக்கள்
ஒரே வானில்
கிழக்கில் பிறந்துகொண்டிருக்கும்
இரண்டு சூரியன்கள்

நான் காணவேண்டும்!

பச்சைக்குள்ளொரு பச்சை


குழந்தை தத்தித் தத்தி
தன் முதல் அடிகளை எடுத்து வைப்பதாகவேயிருந்தது
நீ
உன் சம்மதத்தைச் சொன்னது.
நெல்வயலில் புகுந்த காற்று
பச்சைக்குள் இன்னொரு பச்சையாய்
சுழித்து நெளிந்து ஓடுகிறது…
மிதிவண்டியில் செல்லும் சிறுவன்
கைக்கம்பியிலிருந்து விடுவித்த கைகளை
உயர்த்தி வானை வருடிக்கொண்டே
உற்சாகமானதொரு பாடலை
உரக்கப்பாடியபடியே செல்ல
மிதிவண்டியே விமானம் ஆகிறது…
சிறகுகளுக்கு ஓய்வளித்து இறக்கும் சுமையை
கால்களுக்கு மாற்றி அமரும் கணத்தில்
சின்னானின் சிறிய தோகை
விசிறியாக விரிந்திருக்கிறது…
புத்தம்புதிய காற்றில்
என் கையிலிருந்த புத்தகத்தின் தாள்கள்
அப்படி படபடத்தது
எல்லாம் சரி!
இப்பொழுது உன் சம்மதத்தினால்
என் மனம் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை
நடித்துக்காட்டச் சொல்லி
இவைகளுக்கு ஆணையிட்டது யார்?



எச்சரிக்கைச் சிவப்பு விளக்கின் ஆணைக்குப் பணிந்து
நின்று சாலையில் தளும்பின ஊர்திகள்
இந்த ஊர்தியிலிருக்கும் இளைஞன்
அந்த ஊர்தியிலிருக்கும் பெண்ணை
பார்வைத் தீவிரத்தால் தீண்டினான்
காலாதிகாலமான உள்ளுணர்வின் தீண்டலில் திரும்பியவள்
இவன் கண்களொடு கலந்தாலும் முறைத்தாள்
ஊர்திகள் உருண்டு பார்வைகளை மறைத்தன
கொஞ்சம் மீண்டும் நகர்ந்ததும்
மங்கல மஞ்சள் விளக்கு எரிந்து
பார்வைகள் கைகோர்த்தன
இருவருக்கும் இடையிலான கானல் வரிகள்
நேராய் நிமிர்ந்த வானவில் நிறங்களாலானது
அவள் பார்வையில் வெம்மை தணிந்தது
இவன் பார்வையில் வேறு வெம்மையேறியது
காதுகளில் அணிந்த பண்பலை வானொலியில்
இருவரும் ஒரே அலை வரிசைக்கு மாறியிருந்தனர்
உள்ளங்களால் புன்னகைத்தனர்
மீண்டும் சேரவே அரிதான வெவ்வேறு பாதைகளில்
இருவரின் திசைகளையும் பிரிததது
கொடிய பச்சை விளக்கு
பச்சை என்றால் சம்மதமல்ல
கடந்து செல்லுதல்

பூமிப் பந்து விளையாட்டு

பூமிப் பந்து விளையாட்டு

1.

இந்த பூமிப்பரப்பில்

ஒரு மீச்சிறு புள்ளியை

விலை கொடுத்து வாங்கிவிட்டேன்

என்னிடம் விற்றது

எப்போதுமிருக்கும்

பூமியல்ல

கடவுளும் அல்ல

எனக்கு அதை

ஒரு மனிதன்தான் விற்றான்

2.

பூமிப்பந்து

தலைமை ஆசிரியரின் அறை

மேசையில் மட்டுமே இருக்கும்

அடிக்கடிச் செல்வது

அவ்வளவு எளிதா என்ன?

அத்தனை ஆண்டுகளில்

இரண்டுமுறைதான் சென்றிருப்பேன்

ஒரு பூமிப்பந்தை

விலைக்கு வாங்கும் வசதியில்லை

மேசையுமில்லை

இப்போது வாங்கிக் கொள்ள முடியும்

ஆனால், எப்போதாவது மட்டுமே

சுழற்றி, உற்றுப் பார்க்கவேண்டியதை

ஏன் வாங்கி எப்போதும் வைத்திருக்கவேண்டும்?

எப்போதாவது சந்தேகம் எழுகிற வேளைகளில்

கை விரல்களை குவித்து

உருண்டையாக்கிக் கொள்வேன்

சூரியனை சற்று உயரத்தில் தள்ளி நிற்க வைப்பேன்

பூமிப்பந்தை இப்படியும் அப்படியுமாக சுழற்றுவேன்

சந்திரகிரகணங்களையும் சூரிய கிரகணங்களையும்

இடைவேளையின்றி நிகழ்த்துவேன்

என் வீடு இருக்குமிடம்

நிச்சயமானதாகத் தெரியாததால்

இடம் மாற்றி மாற்றி வைப்பேன்

முப்பரிமாண சந்தேகங்கள்

தெளிந்த உற்சாகத்தில்

மீண்டும் பூமிக்கு வந்து

என் மனித உடலில் புகுந்துகொள்வேன்


கோட்டும், சூட்டும் அணிந்த அதிகாரம்

என் கழுத்தை

கத்தரிக்கோலால் துண்டுபோட முயன்றது

கத்திகளை கைகளால் விலக்கித் தள்ளிவிட்டு

தப்பியோடினேன்


அதிகாரத்தின் ஏவல்கள்

என்னை விரட்டுகின்றன

கொடூரக் கொலையிலிருந்து

எளிய மரணத்திற்கு தப்பியோட

நானொரு கிணற்றில் குதித்தேன்

அதில் தண்ணீருமில்லை ஆழமுமில்லை



துர்நாறும் சாக்கடையில் குதித்தேன்

அது விரட்டுபவர்களின் வீடுகளுக்கே

கொண்டு சேர்த்தது

ஓடிப்போய் உச்சிமலையில் நின்று வெளியே குதித்தேன்

அடிவாரத்தில் வலைவிரித்துக் காத்திருந்தார்கள்

பூமியில் எங்கிருந்து குதித்தாலும்

பூமிக்கே திரும்புவது கொடுமையில் கொடுமை

தப்பியோடிக்கொண்டிருக்கிறேன்

இந்த வீதியின் நுனியிலிருக்கும் பூமியின் இறுதிக்கு

அங்கிருந்து பிரபஞ்சப் பள்ளத்திற்குள் குதிப்பதற்கு

தீர்ப்பு



எண்ணிலடங்காத் துளிகலாலான
ஒற்றை நதி
நடக்கிறது
எண்ணிலடங்களடங்காக் கால்களால்
படைவீரர்களின் அணிவகுப்பாய்
தடைகளை உடைக்கிறது
வறட்சியை நனைத்து பசுமையாக்குகிறது
பாதைகளை உருவாக்குகிறது
எல்லைகளை அழிக்கிறது
தாவரங்களின் வேர் நாவுகளுக்கும்
விலங்குகளின் நாக்குவேர்களுக்கும்
ஊர்கள் ஊர்களாய் தேடிச் சென்று
நடமாடும் தண்ணீர்ப் பந்தலாய்
தாகச்சூடு தணிக்கிறது
வீழும் அருவியில்
வானத்துப் புள்ளினங்களாவது அருந்தவியலுமா?
மீனினங்களாவது நீந்த முடியுமா?
ஒற்றைக்காலும் வானம் பார்க்க
தலைக்குப்புற விழுகிற அருவி
நீரின் வீழ்ச்சிதான்.

விலக்கப்பட்ட கனி

எங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்
ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறது
இன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதும்
இடையில் ஒருவன் அதை களவாட முயன்றதும்தான்
என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறது
இப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறது
காப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்
கண்களுக்குள் நிறங்களோடு நின்றாடுகிறது
கடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்
அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்
மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன்
வனம் வனமாய் அலைந்து
திராட்சைப் பழங்கள் முதல்
பலாப்பழங்கள் வரை பறித்து
எனது பசியின் அறையில் நிரப்புகிறேன்
ருசி கொஞ்சம் ஆறியது போலிருக்கிறது
பசி தணிந்தது போல்தானிருக்கிறது
பல தேசத்துப் பழங்களாலும் நிரப்பப்பட்ட
எனது பசியின் அறை
நடுவில் ஒரு சிறிய வெற்றிடத்தை
விட்டுவைத்திருக்கிறது
எனக்கு விலக்கப்பட்ட கனியின்
அளவிலேயே, உருவிலேயேயிருக்கிறது அவ்விடம்

நிர்வாண நீர்

அம்மணம்
அசிங்கமாகிடாத
குழந்தை
நீரை
வாளியிலிருந்து
அள்ளியள்ளி
உச்சந்தலைக்கு மேல் வீசி வீசி
கைகொட்டிச் சிரிக்கிறது
கரைகள், கலன்கள் அணிவித்திருந்த
ஆடைகளைத் துறந்த நீர்
அந்தரத்தில் அம்மணமாய்
களியாட்டம் போட்டுவிட்டு
குழந்தையின் அம்மணத்தின் மேல்
நிர்வாணம் மறைக்க விரும்பா
நிர்வாண ஆடையாய் சரிகிறது

எஸ்.பி.பி மேல் சத்தியம்

வடக்கிலிருந்து

திரும்பிக்கொண்டிருந்தேன்

எஸ்.பி.பி இந்தியில்

பாடிக்கொண்டிருந்தார்

கர்னாடகாவில் கன்னடத்தில்

ஆந்திராவில் தெலுங்கில்

கேரளாவில் மலையாளத்தில்

உலகம் முழுக்க காற்றலைகளில்

விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்

எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.


சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்

பல பெயர்களின் கும்பலில்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்

ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது

தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்

எனினும் பொறித்தது

எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல

இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்





பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?


நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?

உறுபசி


சலிப்படைந்த உணவை


வெறுத்து
தூங்கிப்போனான்
வைராக்கியத்தோடு
உறங்காமல் பசி விழித்திருக்க
நள்ளிரவில்
தூக்கம் களைந்து
புரண்டு புரண்டு படுத்தும்
பசி துரத்த
தாளாமல் எழுந்து
பழைய சோற்றை
ஆவேசத்துடன் புசிக்கும்போது
பழைய சோற்றுக்கு
கண்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர்
உதட்டோரங்களில்
கூர்வாளாய் மின்னும் கேலிப்புன்னகை

நிலா என்றுதான்


நிலா என்றுதான் சொல்லிக்கொடுத்திருந்தோம்
நான் செலுத்திக்கொண்டிருக்கும்
இருசக்கர வாகனத்தில் முன்னே அமர்ந்து
’நிஷா என் கூடவே வருது’ என்கிறான்
வானத்தை அண்ணாந்து, கை நீட்டி
வேறு ஏதாவது பெயரைச் சொல்லியிருந்திருக்கலாம்
நான் அண்ணாந்து பார்க்காமலேயே இப்போது
என் கூடவும் வருகிறது ஒரு நிலா.

காலம் அவ்வப்போது



காலம்
அவ்வப்போது
அற்பம் என
நான் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கும்
என் பார்வைக்கும்
இடையில்
பூதக்கண்ணாடிகளை வைக்கத்
தவறுவதேயில்லை

நான் சாகிறேனே


நான் சாகிறேனே
என்பது கூட அல்ல
என் கவலை
எனக்காக உழைத்திட்ட
இந்த என் உடலை
அப்படியே விட்டுவிட்டுப்
போகிறேனே...

எதன் பொருட்டெல்லாம்

எதன் பொருட்டெல்லாம்
பூக்கின்றனவோ பூக்கள்?
அவற்றுள்
அன்றாடம் அலுக்காமல்
நான் கண்டு உறும்
என் களிப்பின் நிமித்தமும்
அடங்கியிருக்கிறதோ?

நாகரிகமில்லாத மைசூர்பா


மாலை வேளைகளில்

ஷூக்களையும்,சீருடைகளையும் எறிந்துவிட்டு

மடித்துக்கட்டிய லுங்கியோடு ஊர் சுற்றி

பீடி வலித்துக்கொண்டு

டாஸ்மாக் சென்றுவரும்

வேடியப்பன்

கேண்டீனில் மைசூர்பா-வை கையிலேயே வாங்கி

நடந்துகொண்டே

அப்படியே கடித்துத் தின்கிறார்

இருப்பதிலேயே

சுவைமிகுந்த அந்த மைசூர்பா-வை

நமது நாற்காலி மேசைகளிலமர்ந்து

எச்சில் ஊற நாம்

பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்

வளர்ச்சியின் வீழ்ச்சி


போக்கிடம் நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்….

சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ள டேனிஷ்பேட்டை ( புனைப்பெயர்தான்) கிராமத்தில், மாக்னஸைட் கிடைப்பதால், அந்த ஊரையே அரசு கையகப்படுத்திக்கொள்கிறது. ஊர் மக்களுக்கு இழப்பீடாக பணமும், வேறு ஊரில் நிலமும் அளிக்கிறது. சிற்றூர் நகரியமாக மாறுகிறது. அதன் தாக்கங்களை பேசுகிறது நாவல்.



விட்டல்ராவின் புனைவு எழுத்தில் நான் படிக்கும் முதல் நூல் இதுதான். எந்தவித அறிமுகமும், எதிர்பார்ப்புமில்லாமல் படித்தேன். இந்தளவுக்கு என்னைக் கவரும் என்று எதிர்பார்க்கவில்லை. 1977 ல் முதற்பதிப்பு வந்திருக்கிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 2013 ல் படிக்கிறேன். ஆனாலும், சமகால வாசிப்புச் சுவையோடு உள்ளது. இந்த நாவலின் சிறப்பாக முதன்மையாக நான் வலியுறுத்துவது, அது கையாண்டிருக்கும் நிலமும், மனிதர்களும்தான். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத பகுதி. இன்றைக்கு ஆதவன்தீட்சண்யா, மு,ஹரிகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இன்றளவும் இடம்பெறவில்லை எனலாம். அம் மக்களின் வட்டார வழக்கு சொல்லாடல்கள் இலக்கியத்திலோ, சினிமாவிலோ பதிவாகவில்லை.

எனக்குத் தெரிந்த கிராமம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். என் தாய்வழி உறவுகள் இன்றும் வசித்துவரும் கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையிலும், தர்மபுரி மாவட்டத்தின் எல்லையிலும் அமைந்த ஒரு கிராமம். அங்கும்கூட நான் நிறைய காலம் வாழ்ந்ததில்லை. ஒரு விளையாட்டுப் பையனாக, என் பதின்வயதில் பள்ளி விடுமுறைகளில் சென்று தங்கி முழு நாட்களையும் கழித்திருக்கிறேன். ஆண்டின் இரண்டு பருவங்களில் வாழ்ந்திருக்கிறேன். அவை, கோடைக்காலம் மற்றும் அரையாண்டு பரீட்சை விடுமுறை வரும் காலம். அரையாண்டு விடுமுறையின்போது கிணறுகள் நிரம்பிவழியும். கோடையில் தண்ணீர் குறைவாகவே இருக்கும். அங்குதான் நீச்சல் கற்றேன். அந்த ஊரின் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் முகம் அறிவேன். பெயர்கள் தெரியும். சிறுவர்கள் எல்லோரும் நண்பர்களாயிருந்தனர். அந்த வயதில் நான் பார்த்த ரஜினி, கமல் படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் வரிக்குவரி இன்றளவும் எவ்வளவு ஆழமாக நினைவில் இருக்கிறதோ அதேபோல் அந்த வாழ்க்கையும் நினைவில் இருக்கிறது. பேசிப்பேசி , நினைவுகூர்ந்து ஆழமாகப் பதிந்துபோனவை அவை. பருவராகம் படம் ரிலீசான காலகட்டத்தில், அந்தப் படத்தை வீடியோவில் கருப்பு வெள்ளை டிவி யில் அங்கேதான் பார்த்தேன். சந்தை, நுங்குவண்டி, இரவில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், கிராமபோன் ஆகியவை அப்போதுதான் அறிமுகம். பகல்தூக்கமும் அங்கேதான் அறிமுகம். எதுவும் வேலையில்லாமல் ஒருமுறை பகலில் தூங்கி, எழுந்து பொழுது விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு பல்துலக்கும்போது பரிகாசத்திற்கு ஆளானேன். தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியேவந்த மானின் கறியை மனதில் கழிவிரக்கத்தோடு ஓரிரு துண்டுகள் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். சிறுவர்கள்கூட சுதந்திரமாக கெட்டக்கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். நானும் உற்சாகமாகி பேசுவேன். அந்தச் சிறுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள். படிப்பில் மட்டும்தான் என்னைவிட அல்லது நகரத்து மனிதர்களை விட பின் தங்கியிருப்பார்கள்.ஆனால், பெரிய மனிதர்களுக்கு இணையாக முதிர்ச்சியும், ஈடுபாடுகளும் கொண்டவர்கள். கட்டற்றவர்கள். என்னைவிட நல்ல பணப்புழக்கம் கொண்டவர்கள். வரப்பில் சுமையோடு சைக்கிள் ஓட்டும் தீரர்கள். நான் அங்கே பார்த்த துவக்கப் பள்ளிக்கூடத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கும்.பிள்ளைகள் தன்னிசையாக எழுந்து வெளியில் ஓடுவார்கள். திரும்ப வருவார்கள்.


அப்படி நான் வாழ்ந்து பார்த்த என் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு நாளாக, அனுபவங்களாக நினைவுகளைக் கிளறும் வகையில் அமைந்திருக்கிறது விட்டல்ராவின் எழுத்து. மீண்டும் அதே ஊருக்கு நான் சென்றால் மட்டுமே அந்தளவுக்கு நினைவுகள் பெருக்கெடுக்கும். ஏதாவது ஒரு கிராமத்திலோ அல்லது அதே கிராமத்திலோ மீண்டும் இப்போது கொஞ்ச நாட்கள் வாழ்ந்துபார்க்க வேண்டும் என்ற ஆசை குன்றாமலிருக்கிறது. ஆனால், நான் மீண்டும் அங்கே செல்வதையோ, சென்று தங்கி வாழ்வதையோ இப்போது விரும்பவில்லை. ஏனெனில், பொதுவாக வெள்ளந்தியாக கருதப்படும் கிராமத்தார்கள் எல்லோருமே வெள்ளந்திகள் இல்லை. எனக்கு இப்போது அவர்களில் பலரும் வெறுப்புக்கு ஆளானவர்கள். வேறு ஏதாவது கிராமங்களில் வாய்ப்பு கிடைக்குபோது பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்.


நாவலில் வரும் பையப்பன் காலத்தையும்விட வயதில் சிறியவன் என்பதால், நான் பார்த்த கிராமம் , விட்டல்ராவ் எழுதியிருக்கும் காலத்திற்கும் பிந்தைய கிராமம். நாவலில் வரும் காலம் , ரேடியோ அறிமுகமாகும் காலம் . நான் பார்த்தது டேப்ரெக்கார்டர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம்.


வெறும் தகவல்களாக அல்லாமல் கதையோடு சேர்ந்த காட்சிகளாக காட்டையும், சந்தையையும் , வயல்களையும் கலாபூர்வமாக மாற்றி சுற்றிக் காட்டுகிறார் விட்டல்ராவ். எவத்த, இவத்த, பொறைக்கி, எருமுட்டை போன்ற சொற்கள் நான் கேட்டு அறிந்தவை. பொறைக்கி என்பதற்கு இரவு என்று குறிப்பு கொடுத்திருக்கிறார். பிறகு என்பதே பொறைக்கி என்று சொல்லப்பட்டது என்பது என் அனுமானம். ஆனால், பெரும்பாலும் பகல் வேளைகளில் மட்டுமே சொல்லப்படும் பொறைக்கிக்கு , பிறகான வேளையான இரவு என்ற அர்த்தமும் வந்துவிடும். புங்க மரத்தைப் பற்றி சொல்லும்போது புன்னை என்றும் சொல்கிறார். நானறிந்தவரையில் இரண்டும் வெவ்வெறு மரங்கள்.


சில நூறு குடும்பங்கள் கொண்ட கிராமம். அந்தக் குடும்பங்கள் அனைவருமே பொதுவாக உறவினர்களாகவே இருப்பார்கள். உறவினர்களாகாத, மற்ற சாதியினரும் தொழில் தேவைகளின் அடிப்படையில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். ஊரைத்தாண்டினால், விரிந்துகிடக்கும் வயல்கள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் உரியதாக நீண்டுகொண்டே போகும். சிலர் வயல்வெளிகளிலேயே வீடு கட்டிக்கொண்டு தங்கிவிடுவது உண்டு.கொல்லி அல்லது கொல்லை என்பார்கள். என்னைவிட வயதில் மூத்தவர்களான கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்களுடனும் சுற்றியிருக்கிறேன். அப்போதுதான் நான் நிறையக் கெட்டுப்போனேன் அல்லது கற்றுக்கொண்டேன். காமம் பொதுவாக, கட்டற்றதாகவே இருக்கும். அதற்கான வாய்ப்புகள் நகரச்சூழலைக் காட்டிலும் கிராமங்களில் மிக அதிகம். எண்ணங்களை வேறுவகைகளில் மடைமாற்றிக்கொள்ளும் ஈடுபாடுகள் அவர்களுக்கு கிடையாது. பேச்சியின் வாழ்வு அப்படியான ஒன்றுதான்.


’வெள்ளாள கவுண்டர்களில்தான் விதவைகள் வெள்ளைப் புடவை கட்டிக்கொள்வார்கள் . நாங்கள் அப்படியில்லை’ என்று பேச்சி ஓரிடத்தில் சொல்வாள். வெள்ளைப் புடவை கட்டிய வெள்ளாளர் வீட்டுக் கிழவிகளை பார்த்து, ’வெள்ளைப்புடவை கட்டியிருப்பதால்தான் வெள்ளாளர்கள் ‘என்கிறார்களோ என்று அப்போது நினைத்திருக்கிறேன். எனில், இந்தக் கவுண்டர்கள் வன்னியர்கள். வன்னியர்களும், கொங்கு வெள்ளாளர்களும் கலந்துவாழும் தர்மபுரி போன்ற பகுதிகளில் வித்தியாசம் தெரிவதற்காக, வன்னியக் கவுண்டர்கள், வெள்ளாளக் கவுண்டர்கள் என்றே சொல்லிக்கொள்வார்கள். சந்தை நாட்களில் இலம்பாடிகள் எனப்படுவோர் எங்கிருந்தோ வந்துபோவார்கள். பழங்குடியினர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டேயிருக்கும். வண்ணவண்ண ஆடைகளில் கண்ணாடிகள் வட்ட வட்டமாகப் பதிந்திருக்கும். விட்டல்ராவ் எழுதிய கதையில் ஊரில் மற்ற சாதியினர்கள் இருப்பதாக எழுதவில்லை. ஊர்த்தலைவர் முதல் உழைக்கும் அடிமட்டத் தொழிலாளர்வரை ஒரே சாதிக்காரர்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்க்கைப் படி நிலையை காட்டும் சரியான அளவுகோல்தான் இது. ஆனால், நான் பார்த்த கிராமத்தில் தலித்துகள் உண்டு. அவர்களே பொதுவாக விவசாயக்கூலிகள். ஊர் குடியானவர்களும் விவசாயக்கூலி வேலைகள் செய்வதுண்டு.


ஊருக்குள் ரோடு ரோலர் நுழைவதன் அதிர்வை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். சுகவனம் வாத்தியாரின் மேசை கடகட வென ஆடும். அதேபோல், இன்னும் சில காட்சிப்படுத்தல்களை, கதைக்குப் பொருத்தமாக குறியீடாக அமைத்த விதம் நுட்பமானதும் கலாபூர்வமானதுமாகும். பேச்சியை மிரட்டி வற்புறுத்தி சுப்புரு உடலுறவு கொள்ளும்போது, ஆடு கட்டுப்படுத்துவாரின்றி, அத்துமீறி சுதந்திரமாக பேச்சியின் வயலில் மேயத்தொடங்கும். வயதான ஊர்த்தலைவர் மாரியப்ப கவுண்டருக்கு தொடுப்பாக வாழும் பேச்சி, தன் விருப்பம்போல் பீர் முகம்மதுவோடு ஓடிப்போகவிருக்கும் சூழலில், பையப்பனால் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்ட பொன்வண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியைத் திறந்துகொண்டு வெளியேறும். இதுபோல் அழகான குறியீட்டுத்தன்மையிலான காட்சிப்படுத்தல்கள். தான் ஆசிரியராக வேலைபார்த்த நிலப்பகுதியை எழுத்தில் பதியவேண்டுமென்ற வேட்கையுடனே எழுதியிருக்கிறார். அதற்காக, மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்கி சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். சேலம் ஜில்லா என் ஜில்லா என்கிறார் விட்டல்ராவ். மகிழ்ச்சியாயிருந்தது.


நாவலைப் படித்துமுடித்துவிட்டு இணையத்தில் கொஞ்சம் தேடியபோதுதான் தெரிந்தது, போக்கிடம் நாவல் என் கருத்துக்கிணங்கவே, சிறந்த நாவலாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்பது. ஆனால், நாவல் பற்றிய வாசிப்பு அனுபவமோ, மதிப்புரைகளோ எனக்குத் தென்படவில்லை. எனவேதான், நான் இங்கே எழுதி பதிவிடுகிறேன். அளவில் சிறியதான நாவல் என்பதால் விரைவில் படித்துவிடலாம். ஆனால் கனமான நாவல்.

கடைப் பெண்

நாள்தோறும் கல்யாணம்
தள்ளிப்போய்க் கொண்டேயிருக்கும்
துணிக்கடைப் பெண்ணுக்கு
கடை திறந்ததும்
பொம்மைகளுக்கு
நேற்றைய ஆடைகளை களைந்து
புதிய ஆடைகளை அணிவித்து
வாசலில் கொண்டு வந்து
நிறுத்தும் வேலை வாடிக்கையாளர்களுக்காக

யுவதி பொம்மைக்கு ஆடைகள் மாற்றும்போது
சரளமாய் நகரும் விரல்கள்
இளைஞன் பொம்மைக்கு மட்டும் தயங்கி ஊரும்


எப்போதும் இளைமையிலேயே இருக்கும் பொம்மைக்கு
அப்படித்தான் இன்று ஆடைகளை மாற்றி
வாசலில் நிறுத்தும்போது
துணிக்கடைப் பெண்ணின் கைவிரல்கள்
படக்கூடாத இடத்தில் பட்டுவிட
வரமுடியாத உணர்ச்சிகள் வந்துபோயின
பொம்மைக்கும் கூட