Sunday 8 April 2012

Life is Good

விலக்கப்பட்ட கனியைப் போல
அந்தரத்தில் தொங்குகிறது பூமி.
தேசங்களின் வரைபடங்களின் மீது
கள்ளத்தனமாய் ஊர்கிறது
கரும்புகை சர்ப்பமொன்று.
பச்சைக்கண்கள் மினுமினுக்க
காலத்தைப் போலவே அசையும்
பாம்பின் வயிறு
நூற்றாண்டுக்கால இரை விழுங்கி
புடைத்திருக்கிறது.
சமயங்களில் அதன் தாகம் தணிக்க
கடல் எழுந்துவந்து
நாவை நக்கிச் செல்கிறது.
கொலைவாள் போல
சுற்றிச்சுழலும்
பாம்பின் நாக்கு
சூரியனை விழுங்குவதற்கான எத்தனத்திற்கானது.
இப்போது ஏதேனும் தேச வரைபடத்தை உருவி
நம் நிர்வாணம் மறைக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் இது முதல் பாவமல்ல.

       


நாயகர்களின் வருகை

அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
தெருப்புழுதி பறக்க தேர்கள் விரைகின்றன.
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.
தேர்க்கால்களில் கன்றுகள்
அடிபடுவதுபற்றி கவலையில்லை.
108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.
கடல் விழுங்கி
வாமனர்களின் நகரங்கள் அழியுமொரு நாளில்
தொடங்கி விட்டன
நகரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை மேசையில்
கிடத்தப்பட்டிருப்பது நீங்களும் நானும்தான்.
இரண்டாம், மூன்றாம், எட்டாம், பதினான்காம்
மன்னர்களின் மகுடங்களை அளவிடும்
வாய்ப்பு வரலாறு அழைக்கிறது.
மகுடங்களின் அளவு ஏறக்குறைய
சவப்பெட்டிகளின் அளவுகளை ஒத்திருப்பது
தற்செயலானது என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
தூரதேசங்களின் கிளர்ச்சி
உங்கள் செவிகளை எட்டாதிருக்கட்டும்.
கண்கள் விறைத்த பிணங்களை முன்னிட்டு
முறையீடு செய்பவர்களின் பக்கம்
உங்கள் கவனம் திரும்பாதிருப்பது இன்னமும் நல்லது.
நேற்று ஆண்குழந்தை பிறந்த
நண்பனின் குறுஞ்செய்தியை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
வரலாறு பள்ளங்களை நிரப்பும்.
அரசர் வருகிறார்! அரசி வருகிறார்!
இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்!
நம்புங்கள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம்.

மதியம் புதன், செப்டம்பர் 29, 2010

ஒற்றைத்துளியில் உறையும் கடல்

மாலைக்கும் அதிகாலைக்கும் இடையில்
இரவு ஒரு பறவையைப் போல கடக்கிறது.
அந்த கரியநிறப் பறவை
நம் தலைமீதுதான் பயணிக்கிறது
என்பதை வேண்டுமானால் நாமறியாதிருக்கலாம்.
ஆதிவாசி வனாந்திர மய்யத்தில்
கனன்றெரியும் நெருப்பில் ஒழுகும்
மாம்சத்துளி போலவே
உருகி வழிகிறது காலம்.
ஆம், அவன் வளர்ந்திருக்கிறான்.
முன்பு அவன் ஒரு சொல்லைப் போல இருந்தான்.
இப்போது சொல்லாகியிருக்கிறான்.
ஒரு நாளை நான்காய் எட்டாய் மடித்து
அனாயசமாய்க் கிழித்தெறிகிறான்.
அந்த குதூகலம் நம்மிடமில்லை
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சகல ஆண்களிலும் பெண்களிலும்
குழந்தைமையைப் பறித்த குற்றவுணர்வோடு
அவனருகே மண்டியிடுபவரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
இனி அவரது கோப்பை
அவனது சிறுநீர்ச்சூட்டால் நிரப்பப்படட்டும்.
கடவுள் ஆசிர்வதிக்கப்படட்டும்.

(எதிர்வரும் 30.09.10 அன்று முதல் பிறந்தநாளைச் சந்திக்கவிருக்கும் என் மகன் கத்தார் நவீன்சித்தார்த்திற்கு.)

மதியம் திங்கள், ஜூன் 14, 2010

முகாம்தேசம்



















இரண்டு கவிதைகளை
உன் வலைக்குள் திணிக்க முயன்றாய்.
இப்போது உன் விதைப்பைக்குள்
இரண்டு பறவைகள்.
-----------
அவன் தன் மனைவிக்கு உதவுவதற்காகத்தான்
சமையலறைக்குள் நுழைந்தான்.
அவளை விடவும்
அழகான ஒரு தோசையைச் சுடுவதே
அவனது நோக்கமாயிருந்தது.
முதல் கரண்டி மாவிலேயே
தோசை என்பது
மையத்திலிருந்து விளிம்புக்குப் பரவும் அதிகாரம்
என்பதைக் கண்டுபிடித்தான்.
சில தோசைகள்
பிய்ந்தும் கருகியும் வர ஆரம்பித்தபோது
அவன் தன் கோட்பாடுகளைக் கைவிட்டான்.
ஒரேயொரு தனித்துவமான தோசையை
சுட்டே தீருவதென்ற ஆவலில்
சமையலறையிலிருந்த
மிக்சர், ஜீனி, கடலை மற்றும்
கரப்பான்பூச்சிகளின் செதில்களைத்
தூவத்தொடங்கினான்.
இருந்தபோதிலும் 
தோசையின் எல்லைகளில்
தூவப்படும் எண்ணெய்
சாளரங்களற்ற சமையலறையில்
புழுங்கித் தவிக்கும் மனைவியின்
வியர்வை வாசனையை விடவும்
மேலானதில்லை என்பதை உணர்ந்தபோது
அவன் தன் கைவிரல்களைத்
துண்டாக்கித் தூவினான்.
இப்போது தோசை முழுமையடைந்திருந்தது.
--------------
ஆகச்சிறந்த படைப்புகள் எழுதி
ஆகச்சிறந்த புத்தகங்களாக்கி அவன்
ஆகச்சிறந்த எழுத்தாளர் ஆகியிருந்தான். 
பின்னும் அவன்
ஆகச்சிறந்த மனிதர்கள் மீது
ஆகச்சிறந்த அவதூறுகளைச் 
சொல்லத் துவங்கினான்.
ஆகச்சிறந்த மரணங்கள் மீது
ஆகச்சிறந்த பொய்களைப்
பரப்பவும் செய்தான்.
ஆகச்சிறந்த வாசகர்கள் அவனுக்கு
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினர்.
அல்லது ஆகச்சிறந்த வாசகர்களைப் போல
ஆகச்சிறந்த கடிதங்களை எழுதினான்.
ஏற்கனவே தோல்வியின்
புழுக்கத்திலிருந்த கடவுள் அவனுக்கு
ஆகச்சிறந்த ஆசிர்வாதங்களை அனுப்பியிருந்தார்.
பூமிக்குத் தாமதாய் வந்த
கடவுளின் ஆசிர்வாதங்கள்
ஒரு அழகிய பழத்தின் வாசனையைப் போலிருந்தது.
கடவுள் விட்டதிலேயே
ஆகச்சிறந்த குசு இதுதான் என்று சொல்லிக்கொண்டான்.
--------------
ஒரு தேசத்தின் வரைபடத்தை
வரைவதற்காக அவர்கள் கூடியிருந்தார்கள்.
முதலில் மலைகளையும் காடுகளையும்
நதிகளையும் வரைபடத்த்லிருந்து
நீக்கிவிடுவதென்று தீர்மானித்திருந்தனர்.
அவை இப்போது 
அயல்தேச நிறுவனங்களின் உடைமைகளாயிருந்தன.
பின்னுமிருந்த விலங்குகளிலும் மனிதர்களிலும்
விலங்குகளை மருந்துகளின் உற்பத்திக்காகவும்
மனிதர்களை மருந்துகளின் விற்பனைக்காகவும்
ஒதுக்கிவைத்தனர்.
ஆட்சியாளர்கள், போலீஸ்வீரர்கள், ராணுவத்தியாகிகளை
எந்த வகையினத்தில் சேர்ப்பதென்ற 
குழப்பம் நீடித்தது. 
அதற்குள் அண்டைநாட்டொன்றின் 
வரைபடம் புகழ்பெற்றிருந்தது.
இனிவரும் தேசங்களின்
வரைபட மாதிரி அதுவே என புகழப்பட்டது.
அது முதலில் ஒரு
சதுரங்கப்பலகையைப் போலிருந்தது.
ஒரு துப்பாக்கி வைத்தால்
பல மரணங்கள் விளைந்தன.
ஒரு பேச்சுவார்த்தை வைத்தால்
பல கூடாரங்கள் முளைத்தன.
ஒரு பதுங்குகுழி வெட்டினால்
சதுரங்கப்பலகையிலிருந்து
குண்டுகளைப் பொழிந்தபடி
விமானங்கள் பறந்தன.
முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள்
இருதரப்பிலும் வெட்டும் காயகளாகப் பயனாகினர்.
இறுதியில் சதுரங்கப்பலகை
முகாம்களின் வடிவத்தில் மாறியது. 
முகாம்களைப் போல் தேசத்தின் 
வரைபடத்தை அமைப்பதென்றும்
தேசத்தை முகாம்களைப் போல்
அமைப்பதென்றும் அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

   நன்றி : லும்பினி

மதியம் சனி, பிப்ரவரி 13, 2010

முலைகளின் ஆல்பம்















பேருந்து படிக்கட்டு விளிம்பில்
நின்றுகொண்டிருந்த நான்
சடாரென்று கோணம் மாற்றினேன்
எனக்கும் மேலே
கைதூக்கி நின்ற பெண்களின்
மார்புகளை ரசிப்பதற்காய்.

சற்றுநாள் முன்னரே
மணமாகித் தாய்வீடு வந்திருந்த
எதிர்வீட்டுப்பெண்ணின்
மார்பு ரசித்தேன்
மாசமாயிருப்பாளோ என்னும்
உறுத்தலோடேயே.

கல்லூரியில் கண்ட
கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய
கொழுத்த முலைகள்
இன்றைய இரவை
ஈரப்படுத்தக்கூடும்.
திரைகளெங்கும் நாயகிகள்
முலைகளாய் உணரப்படுகிறார்கள்.

அடிக்கடி ஆடைகளைச்
சரிசெய்துகொள்வது வேறு
நம் கனவுகளின் பரப்பை
அகலப்படுத்துகின்றன.
மார்புகள் இல்லாது போனால்
எல்லாப் பெண்களோடும்
உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.

எப்போதேனும் தட்டுப்படும்
மார்புகளின் ஸ்பரிசம்
கிளர்ச்சியூட்டும் வேளையில்.
இப்படி எண்ணத்தோன்றும்
வெறித்து நோக்கும்
ஆண்களின் கண்களே
முலைக்காம்புகள் ஆயினவோ.

                                                   (நன்றி : கருப்பு 2002)

மதியம் சனி, டிசம்பர் 19, 2009

காமன்மேன்களின் கவனத்திற்கு...













அதுவொரு கொண்டாடப்பட வேண்டிய காதலர்தினம்தான்
பிப்ரவரி 14,1998.
நானும்கூட கல்லூரியின் இரண்டாமாண்டில்
கொண்டாடிக்கொண்டுதானிருந்தேன்.
அதேநாளில்தான்
அயோத்தியிலிருந்து கோவைக்கு
மரணத்தை அழைத்து வந்திருந்தார் அத்வானி.
மரண வெடிப்பில்
சதைத்துணுக்குகள் சிதறிக்கிடந்தன.
குண்டுவெடித்ததாய்க்
கைது செய்யப்பட்டோரில்
22 பேரின் ஆயுள்தண்டனையை
நேற்றுதான் ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
இந்தியாவில் பொதுவாக ஆயுள்தண்டனை 14 ஆண்டுகள்.
22 பேர் சிறையில் இருந்ததோ 11 ஆண்டுகள்.
இழந்துபோன காலத்தை
தலைமுறைக்கு மாற்றப்பட்ட கொலைப்பழியை
இன்னமும் கண்களில் மிச்சமாய்
உறைந்திருக்கும் அவநம்பிக்கையை
யார் சரிப்படுத்தப்போவது
நீங்கள் அல்லது நான்?
உங்களது அல்லது எனது குழந்தை?
அத்வானி அல்லது பாரதமாதா?
மன்னிக்கவும் இது கவிதையாய் வரவில்லை.
நான் கவிதை எழுதவும் வரவில்லை.
அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது.
அவர்களிடம் போலீஸ் இருக்கிறது.
அவர்களிடம் அரசு இருக்கிறது.
அவர்களிடம் செய்திகள் இருக்கின்றன.
மன்னிக்கவும் மீண்டும் மீண்டும்
ஒரே வார்த்தையை உளறிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது.
என்னிடம் என்ன இருக்கிறது?
வார்த்தை...
கவிதையாய்க் கூட மாறமுடியாத வார்த்தை.
நல்லது கனவான்களே.
அந்த 22 பேரையும் வேனில் ஏற்றி
பொட்டல்காட்டில் இறக்கிவிடுங்கள்.
இந்த கவிதை எழுதியதற்காய்
23வதாய் என்னையும்.
ஒருநிமிடம், இந்த கவிதையை
யாரேனும் ஆதரிக்கக்கூடும்.
24வது...
25வது...
................
............
கண்களைக் கட்டி சுடத்துவங்குங்கள்.
இப்போது உங்கள் கவுண்ட் டவுன் தொடங்கட்டும்.
10
9
7
8
6
.
.
.
.

மதியம் திங்கள், டிசம்பர் 14, 2009

கடவுளைக் குதப்புணர்ச்சி செய்துகொண்டிருந்தபோது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகள்

எனக்கு கடவுள் கிடைப்பதற்குள்
சில நூற்றாண்டுகள் ஆகியிருந்தன.
ஏனெனில் கடவுளைப் புணர்வதற்காய்க்
காத்திருப்போர் பட்டியல் நீளமானது.
தெய்வீக லாவகத்தோடு
தன் புட்டங்களை உயர்த்திய கடவுள்
ஒட்டகத்தைப் போலிருந்தார்.
யுகங்களைத் துளைத்து
என் குறி கடவுளின் குதத்தைத் துளைத்தபோது
வலிதாங்காது கடவுளின் கன்னங்களில்
கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
கடவுளை அழவைக்கிறவனே பாக்கியவான்.
ஒரு சிறுகுழந்தையைப் போன்ற
அந்த மெல்லிய விசும்பல்
கடவுளை விட அழகானதும் உண்மையானதும்கூட.
முன்னும் பின்னுமாய் இயங்கி
கடவுள் மீதேறி
புணர்ச்சியின்வழியே நான்
திரேதாயுகத்தைக் கடந்துகொண்டிருந்தபோது
என் அலைபேசி அலறியது.
யூதக்குழந்தைகள், வியட்நாம் பெண்கள்,
ஈராக்யுவதிகள், ஈழத்துக்கொலைநிலம்,
ரத்தம், யோனி, மூர்க்கம், அத்துமீறல்,
நிர்வாணம், பீய்ச்சியடிக்கும் திரவங்கள் என
எம்.எம்.எஸ்கள்
என் புணர்ச்சியின் சமநிலையைக்
குலைத்துப்போட்டன.
கடவுள் பதற்றமடைந்தார்.
அனேகமாய் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட
எம்.எம்.எஸ் வந்தபோதுதான்
பெருவிரலை உயர்த்தி
தன் புட்டத்தை வாகாக கடவுள்தூக்கிக்கொடுத்தார்
என்று நினைக்கிறேன்.
கச்சினப்பள்ளி துடிமூயேயின்
தளர்ந்த மார்பகங்களைப்
பச்சைவேட்டைக் கரங்கள் அரிவதான
எம்.எம்.எஸ் வந்தபோது
என் அலைபேசியை
சைலண்ட் மற்றும் வைப்ரேஷன் மோடிற்கு
மாற்றும் முடிவுக்கு வந்தேன்.
அதற்குள் கடவுளின் குதத்தில்
நூற்றாண்டு சிலந்தி படிந்திருந்தது.
இந்த இடைவெளியில்
ஒபாமாவின் நோபல் குறித்த
குறுந்தகவல்கள் வராது தவறியிருக்கலாம்.
கடவுளின் குதம்விரித்து
கலியுகத்திற்குள் நுழைவதற்குள்
மீண்டும் அலைபேசி
வைப்ரேஷன் மோடிலேயே ஓசை எழுப்பியது.
அந்த ஓசை
முதன்முதல் கேட்ட
கடவுளின் விசும்பலைப் போல இருந்தது.


பச்சைவேட்டை - மத்திய இந்தியாவில் ‘மாவோயிஸ்ட்களை வேட்டையாடுவது’ என்ற பெயரில் பழங்குடி மக்களின் எதிர்ப்புணர்வை ஒழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை.

துடி மூயே (70) - சட்டீஸ்கரில் உள்ள கச்சான்பள்ளி என்னும் கிராமத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பச்சைவேட்டையின்போது துடிமேயே என்னும் 70 வயது பெண்ணைக் கொன்றது மட்டுமில்லாமல், அவர் பிணமான பிறகு அவரது மார்பகங்களை அறுத்து அகற்றியது பாதுகாப்புப்படை.

No comments:

Post a Comment

Thank You...