Monday 4 June 2012

"உதவாக்கரை.
உதையேன் வளர்க்கிறாய் 
உள் வீட்டில்."
புறுபுறுத் தாங்கவில்லை!
"அப்பாவி போலப் பால் வெள்ளை
அதெல்லாம் வெளிவேசம்.
உள்ளெல்லாம் பெரு நஞ்சு.
குடல் பிரட்டும்
பெரு நாத்தம்
புடுங்யெறி வெளியாலை"




பொக்கையால்
எச்சில் பறக்கப்
பொரிகின்றாள்.
கேட்க மனம் பதறுகிறது
தெரியாது அவளுக்கு
இதன் பெருமை.
குறுஞ்செடியாய் பரந்திருந்து
பால்நிறமும் ஊதாவுமாய்
மலர் சொரிந்தது
என் வீட்டு முற்றத்தில்.
சிறுவயதில் அளைந்ததில்
என்னுடலும் உரமாயிற்று
நோய்நெடி அணுகாது.



பீநாறி, சுடுகாட்டு மல்லியென
இழித்தாலும்
நித்திய கல்யாணியென
மங்களமாயும் விழிப்பர்;
மலையாளச் சோதரர்கள்.
பயனுள்ள சிறு செடி
ஒளிந்திருந்து உயிர் காவும்
மறைநோயாம் குருதிப் புற்றுக்கு
இதன் சாற்றில் பொடித்தெடுத்த
வின்கிரிஸ்டின் அருமருந்தாம்
வெளிநாட்டார் கண்டறிந்தார்.
நீரிழிவுக்கு சொன்ன மருந்தென
எம்மூர்ப் பரியாரியும்
பகருகிறார்.


என்னளவில் என்றென்றும்
பட்டிப்பூ
அழித்தொழிக்கவொண்ணாது.
பட்டி தொட்டியெங்கும்
பரப்ப வேண்டிய
சிறப்பான மூலிகைதான்.

No comments:

Post a Comment

Thank You...