Thursday, 24 May 2012

பரிணாமம், இந்துமதம், அலெக்ஸ்



அருமை நண்பர் பதிவர் சிறில் அலெக்ஸ் பதிவு ஒன்றில் இந்துமதம் பரிணாமம் குறித்து என்ன சொல்கிறது என்று கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் சொல்வது சிரமம். முதலில் இந்து மதம் ஒரே கொள்கை உடையதா ? என்று பார்க்கவேண்டும்.

இந்து மதம் ஒரே கொள்கை உடையது அல்ல. பாரதத்தில் வழங்கி வந்த பல சமயங்களை 18 நூற்றாண்டுவரை இந்துமதம் உள்வாங்கி வந்திருக்கிறது. அதற்கு முன்பு தனி மதமாக அடையாளம் காணப்படவில்லை. சனாதன தர்மம், சைவம், வைணவம், வேத மதம் போன்ற தனித் தனி சமயங்களாக இருந்து வந்தது அதுபோல் காலத்தின் கட்டாயத்தின் பேரில் புத்தமதக் கொள்கைகள் எதிர்க்கும் பலி இடுதல் போன்றவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. ஆங்கிலேயர்கள், மற்றும் முகலாயர் மன்னர்கள் மூலமாக பின்னாளில் இந்துமதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

எனவே ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பொதுவான வேத நூல்கள் இல்லை ! பகவத்கீதையை சைவர்கள் உயர்ந்த வேதமாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்துமதத்திற்கான வேதப் புத்தகம் கீதை என்று நீதிமன்றங்களில் பயன்படுத்தும் அளவுக்கு தான் பகவத் கீதை பொதுவானதாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய இந்துக்கள் பகவத் கீதையை வெறுக்கவே செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. புத்த மதத்திலும் ஹீனயானம் மகாயானம் என்ற இருபிரிவுகள் உண்டு.

எனவே இதுதான் பரிணாமத்தைப் பற்றி இந்து மதம் சொல்கிறது என்று எவரேனும் காட்டினால், இந்து மதத்தை சேர்ந்தவர்களே அதை மறுப்பார்கள். பிற்போக்கான மதப்பற்றாளர்கள் மட்டும் இந்து மதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று இந்துமதம் சொல்வதுதான் சரி என்று சொல்வார்கள். பெரும்பாலோனர் இந்து மதத்தில் பின்பற்றுவது குல தெய்வவழிபாடே. பகவத் கீதையையோ, சைவ சித்தாந்தங்களையோ, வேறு எதையோ யாரும் அளவுகோலாக எடுத்துக் கொண்டு மதத்தை பின்பற்றுவதில்லை.


பொதுவாக பெருவாரியான இந்துக்கள் சொல்வது கலியுக முடிவில் கல்கி அவதாரம் வரும். அத்துடன் உலகம் முடிவுக்கு வருவதில்லை. புதிய உலகம் பிறக்கும். அது சொர்க்கம் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. அது ஒரு பிரளையம் என்கிறார்கள் திரும்பவம் சத்திய (தங்கம்) யுகம், திரேத(வெள்ளி) யுகம், துவாபர (செம்பு) யுகம், கலி (இரும்பு)யுகம் என தொடங்கும், மறுபடியும் பிரளயம். உலகம் கெட்டுப் போகும் போது அதாவது கலியுகத்தில் கல்கி அவதாரம் வருமாம். அதைத் தான் சம்பவாமி யுகே யுகே ! யுகங்கள் தோறும் நான் பிறக்கிறேன் என்று கிருஷ்னர் பகவத் கீதையில் சொல்வதாக சொல்கிறார்கள். சிருஷ்டி இல்லை , படைப்பு இல்லை, பிரளயம் மட்டுமே நடக்கிறது என்பது தான் இதன் பொருள். இதில் பரிணாமம் இல்லை.


பரிணாமம் பற்றி சொல்லாமல் பிரபஞ்சம் பற்றி தமிழ் சித்தர்கள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று அனுக்கொள்கை, வான சாஸ்திரம் போன்ற வற்றை அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்.


திருவள்ளுவரும் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்க்றார்.

எங்கும் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்லவில்லை. வேதங்களில் மட்டுமே பிரம்மனிடமிருந்து மனிதன் தோற்றுவிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது சித்தர்கள் வாக்கிலிருந்து சிலவற்றை எடுத்து எழுதுகிறேன்.

உடல் உறுப்புகள் புனிதம் அடையுமா ?


வயிற்கு உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திட
துணியாமல்,
உதிரத்தை விற்ற உழவன்
ஒருவனின் உதிரம் புனிதம்
அடைந்தது !

ம்...
உதிரம் சென்றது உயர்ந்தவர்
உடலுக்குள் ஆயிற்றே !

மாநகர தொழிலாளி
மானத்துடன் வாழ்வதற்கு
அவனிடம் இருந்த
மற்றொரு கிட்னியை
மகிழ்வுடன் விற்றான் !
அதே கிட்னி, சேர்ந்த இடம்
உயர்ந்தவரிடம்,
உயர்ந்தவர் சிறுநீரையும்
நன்றாகவே சுத்தம் செய்கிறதாம் !

நம் வீட்டில் நமக்கு தெரியாதது !



நம் வீட்டில் நாம் இருக்கிறோம், நம்முடைய பொருள்கள் இருக்கிறது. கூடவே கரப்பான் பூச்சிகள், பல்லிகள் வசிக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் நாம் நம் வீட்டில் வசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

சில சமயம் நம் வீட்டில் உள்ளவர்களை (பொருட்கள்) உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நகையும், பணமும் வைத்திருக்கும் இடம் மட்டும் நன்றாக தெரிந்து இருக்கும். மற்றவைகள் இருக்கும் என்பது தெரியும் ஆனால் தேடினாலும் சமயத்திற்கு கிடைக்காது.

அவசரத்துக்கு தொலைபேசி எண் குறித்து வைக்க ஒரு பேனா தென்படுவதே பெரிய விசயம், மற்றவைகளை சொல்லவும் வேண்டுமா ?

சில பொருள்கள் வீட்டில் இருந்தாலும் அதன் இருப்பை அறியாமல் பாதுகாப்பாக எங்கோ இருப்பதால், இரண்டாவது முறையாக வாங்கி வரும் நிலைமை ஏற்பட்டுவிடுவது பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் நடப்பதே.

அந்த அந்த அறையில் இருக்க வேண்டிய பொருள்கள் பெரும்பாலும் இடம் மாறியே இருக்கும், சமையல் அறையில் இருக்கும் பாலித்தீன் பையை வெட்டும் கத்திரி என்றோ செய்தித் தாள் வெட்டச் சென்றது திரும்பாது. அடுத்த நாளோ வேறு நாளோ தேவைப்படும் போது தான் அதன் ஞாபகம் வரும். தேடி எடுப்பதில் நேரவிரயம், தேவையில்லாத டென்சன் இவைதான் மிஞ்சும்.

நம் வீடு நம்முடைய பொருள்களுக்கான இடம் ஆனால் இவைகள் எங்கு எங்கு இருக்கிறது என்று நமக்கே தெரியாமல் இருப்பது பெரும் கவனக் குறைவு. இவற்றை சரி செய்யமுடியும். வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்கு படுத்துவது / பராமரிப்பது நமக்கு பயன் தரும்.

எனக்கு தெரிந்த சில நடைமுறைகளை பட்டியல் இடுகிறேன்

1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம்.

2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம்.

3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும்.

4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன்.

5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும்.

6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது.

7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம்.

9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.

பின்குறிப்பு: வீட்டுக்குறிப்பு எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து எழுதிவிட்டேன். படிக்கும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த வீட்டு பராமரிப்பு குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

மெய் ஞானம் !

எல்லாவற்றிலும் எனக்கே
உரிமையுள்ளது,
நானே உயர்ந்தவன்,
என்று இறுமாப்பு
கொண்டு,
அடுத்தவரை
எள்ளி நகையாடி
எட்டி உதைக்கும் கால்களுக்கும்,
தள்ளிவிடும் கைகளுக்கும்,
சுட்டு உமிழும் நாவிற்கும்
ஏன் தெரியவில்லை ?
காலன் வந்து
கதைவை அடைத்துவிட்டால்,
தன் உடலை தான்
பயன்படுத்துவதற்கே
அடுத்து ஒருவிநாடி கூட
அவகாசம் கிடைக்காது
என்ற மெய்(உடல்) ஞானம் !

இவர்களே கோமாளிகள் !

அலெக்ஸ் அவர்கள் கொடுத்த கோமாளிகள் தலைப்புக்காக எழுதிய ஆக்கம் !

இவர்களே கோமாளிகள் ...!

ஆடுகள் கொம்புவைத்திருக்கும்
அகம்பாவத்தில் அடித்துக் கொள்கின்றன !
பலம் உள்ளவரை மோதிப்பார்பது
என்று ஆடுகள் முடிவெடுத்து
தர்ம அதர்ம யுத்தம் நடத்துவதாக
தனக்கு தானே சொல்லிக் கொள்கின்றன !

ஆடுகள் இரத்தத்தில் விரும்பிக்
குளித்துக் கொண்டு இருப்பதைப்
பார்த்து ஆடுகள் பாவம்
என்ற சமாதான தூதுவர்களை
ஆடுகள் புரிந்து கொள்ளுமா ?
அவற்றிற்கு தான் ஆறாவது
அறிவு கிடையாதே !

ஆடுகளுக்காக தூதுபோனவர்களின்
கெதி ?

அடித்துக் கொண்டு இரத்தம் சொட்டும்
ஆடுகளை வேடிக்கைப் பார்கிறவர்கள்
மெளனமாக சிரிக்கின்றனர் ஆனால்
ஆடுகளைப் பார்த்து அல்ல !
ஆடுகளுக்காக தூதுபோனவர்களைப்
பார்த்து, ஆடு நினைவதைப் பார்த்து
அழும் ஓநாய்கள் என்று !

ஆடுகள் கோமாளிகள் அல்ல !
வேடிக்கைப் பார்பவர்களும்
கோமாளிகள் அல்ல !
ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் !

இருள் !





ஏதுமற்ற இருண்ட வானத்தை
ஒரு நாள் அண்ணாந்து பார்த்து,
இவ்வளவு பெரிய வானமாக இருந்தும்,
எல்லாம் சூனியமே என்று நினைத்தபோது
என் நீண்ட நினைவை கலைப்பது போல்
தோன்றியது அங்கே பிறைநிலவு !

நம்பிக்கை இன்மைக்கு என்ற கார்
இருளுக்குப் பின் எப்போதும்
இரவில் ஒரு அமாவாசை நிலவு போல
நம்பிக்கை மறைந்துதான் இருக்கிறது.

நம்மை சூழ்ந்த இருள் என்பது
ஒரு தற்காலிகம் என்று நம்பிக்கை வைத்து
உணர்ந்து கொள்ளும் போது
பிறை நிலாவாய் நம்பிக்கை
துளிர்விட்டு நம்பிக்கை
ஒளி வளர்ந்து பரவுகிறது !

ஆத்திகமும் நாத்திகமும் !


ஆடையின்றி பிறந்தது போல்
ஆத்திகராக பிறக்கவில்லை எவரும் !
பெயர் வைப்பதில் காதில்
ஓதி துடங்கிய மதபோதனையை
அறிவற்று இருந்த அந்த வயதில்
கேட்டவுடன் தொடங்குகிறது
ஒருவரிடம் ஆத்திகம் !

தேடலின்றி திருப்திப் பட்டு,
முடங்கி விடுகிறது
ஆத்திகம் !

தேடி அறிய துடித்து,
கேள்வியில் நிற்கிறது
நாத்திகம் !

நம்பிக்கை மீது கட்டப்பட்டுள்ள
எந்த கொள்கையும்,
கேள்விக்கும் உரியது
கேலிக்கும் உரியது !

உண்மையான ஆத்திகன் என்பவன்
நாத்திகனே !
அவனே மெய்யையும் (உடல்)
மெய்யையும் (உண்மை) உணர்ந்தவன் !

உண்மையான நாத்திகன் என்பவன்
ஆத்திகனே !
அவனே தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன் !

தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ?









தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ?
ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது
ஆரவார தீபாவளி !

புத்தாடை மத்தாப்பு மட்டுமின்றி
மகிழ்வைக்கிறது தீபாவளி !

எந்த ஆண்டாக இருந்தாலும்
ஏதோ ஒருவிதத்தில் கொண்டாட்டம் !

சிலருக்கு சிறப்பாக இருவருக்கும்
ஒன்றாக ஆகிவிடும் தலைதீபாவளி !

புதிதாய் பெற்றோரானவர்களுக்கு புதிய
உறவுடன் பிறந்திடும் தீபாவளி !

வளரும் குழந்தைகளுக்கும் தம் புதிய
உடன்பிறப்புடன் பிறந்திடும் தீபாவளி !

புதிதாய் நண்பர்கள் கிடைத்திட்ட அனைவரின்
நட்பை மலரவைக்கும் புது தீபாவளி !

தீபாவளி ஒரு தத்துவம் என்கிறர் சிலர் !
தீபாவளி ஒரு பக்தி வரலாறு என்கிறர் சிலர் !
தீபாவளி தமிழரருக்கு தேவையில்லை என்கிறர் சிலர் !

தீபாவளியின் புராணங்கள் எதுவாக
இருந்தால் என்ன ?

கொண்டாடுபவரை வாழ்த்தவும்,
கொண்டாடுபவர்கள் மகிழவும்,
மற்றொமொரு ஆங்கில புத்தாண்டு போல்
அனைவரும் சேர்ந்து மகிழ ஒரு
இந்திய பண்டிகை நம் தீபாவளி !

விடை !

நான் பதிவுலகில் நுழைந்து ஓராண்டுக்கு மேல் ஆனாலும், பதிவு எழுத துடங்கியது ஏப்ரல் முதலே ! குறிப்பிட்டு எதுவும் எழுதவேண்டும் என்று நுழையவில்லை. மேம்போக்காக எல்லாவற்றையும் தொட்டு மட்டும் எழுதினேன். இதுவரை காலம் பதிவில் 132 பதிவுகளும், காலங்கள் பதிவில் 80 பதிவுகளுக்கும் மேல் எழுதியாகிவிட்டது. எழுதிய சிலவற்றை ஏற்றவில்லை. எழுதியவரை திருப்தி இருந்தது.

பெற்றது ?
பெற்றது பெரிதாக ஒன்றும் இல்லை, தமிழோடு நெருங்கி உறவாட முடிந்தது. அதுதான் பெரியது. பல நல்ல பதிவர்களின் கருத்துக்களை அறிய முடிந்தது. சில நண்பர்கள் கிடைத்தார்கள் போனார்கள். தொடர்ந்து தட்டச்சியதில் இடதுதோள் வலி, விரல்வலி இவைகள்.

இழந்தது ?
நேரங்கள் தான் ! நிறைய நேரங்களை செலவிட்டு இருக்கிறேன். தூக்கம் கெட்டு இருக்கிறது. உணவு வேளை தப்பியிருக்கிறது. வேண்டாத பலவற்றை மனது உள்வாங்கியிருக்கிறது. அதிலிருந்து மீள சில காலம் ஆகும். குறிப்பாக சார்ந்த தொழில் பற்றி படிக்க நேரமும், கவனமும் இல்லாமல் போனதை நினைத்துப் பார்க்கிறேன். இனி சுய முன்னேற்றத்திற்காக படிப்பதற்கு கவனம் செலுத்த நினைத்துள்ளேன். வாரத்துக்கு ஐந்து பதிவுகள் எழுதி குறி சொற்களில் கோவி.கண்ணன் என்று எப்போதும் தமிழ்மணத்தில் தெரிவது, இனிவரும் வாரங்களில் இருக்காது.

குட் பை :
இதுவரை எனது பதிவுகளை படித்தும் பாராட்டியும், குட்டியும், தட்டியும் ஆதரவு கொடுத்த பதிவர் நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் படித்த அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி பதிவுகளை தொடர்ந்து படிப்பேன், கருத்துக்களுக்கு பின்னூட்டம் இடுவேன். பார்வையாளனாக தொடர்வேன் ! அத்தியும் எப்போதாவது பூக்கும் !

எனது பதிவுகளை உள்ளிட அனுமதித்த தமிழ்மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகத்தினருக்கும் நன்றி !

எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் குட் பை !

எல்லோரும் மகிழ்வுடன் இன்புற்று இருக்க வேண்டும் !

நன்றி !

அழகுக்கு மறுபெயர் மெளனம் !



அழகுக்கு மறுபெயர் மெளனம் !
ஆர்பரித்தலை விட மெளனம்
அழகாகப்படுகிறது எனக்கு !
தீண்டும் தென்றல்,
மழலையின் சிரிப்பு,
பொன்னிற விடியல்,
மஞ்சள்நிற மாலை,
அமைதியான நீரோடை,
மெலிதாக தழையசைத்து
தலையசைக்கும் பசுமை,
மரத்தடியில் உதிர்ந்து
இரைந்த பூக்கள், பூ
இதழ்மேல் பட்டாம்பூச்சி,
பகலில் பைங்கிளி,
இரவில் மின்மினி,
வண்ணம் கலைந்து
மறைந்து கொண்டிருக்கும் வானவில்,
அமைதியாக நகர்ந்து செல்லும் மேகங்கள்,
வயல்வெளிகளில் ஒற்றையடிப் பாதை,
இன்னும் எத்தனையோ
அழகு அத்தனைக்கும்
மறுபெயர் மெளனம் !

கவிஞனின் காதல் கரு !





என் கருவுக்கு நீதான் உரு...!
கவிதை எழுதி எழுதி
உருவன காதல்
அவள் கருவானதும்,

கவிதையும் கவிஞனும்
காணாமல் போனது !

பொறுப்பு !



காதை செவிடாக்கும் பெரும் வெடிச்சத்தம்,
கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள்,
இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி,
இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள்,
உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி,
இரத்தத்தில் நினைந்த நயிந்த மேலாடைகள்,
வெட்டி தூக்கி எறியப்பட்டதுபோல்
எட்டடி தாண்டி விழுந்த கால்கள்,
வெளியுலகை சரிந்தபடி,
எட்டிபார்க்கும் பெருங்குடல்கள்,
பாதி எரிந்து,
இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள்,
சிதறிய காலணிகள் !
பிளந்து விரிந்த மார்பின் வழியாக
இயற்கை காற்றை சுவாசிக்க முனைந்து
தோற்ற இதயங்கள் !
கடைசியாய் உலகை கேள்வியுடன்,
கேலியாய் பார்த்தபடி அடங்கிய கண்கள் !
இந்த பரபரப்புகள் அடங்குமுன்,
பூமியில் இரத்தம் காயும்முன்,
அங்க அடையாளம் காணும்முன்,
துப்பு துலங்கவில்லை என்று கூறி
பாதுகாப்புத்துறை கைவிறித்து விடக்கூடாது,
என்பதில் அக்கறைகொண்டு,
இப்பொழுதெல்லாம், பொறுப்புடன்
நடந்து கொள்கிறார்கள்,
தீவிரவாதக் குழுக்கள் !
சலனப்படாமல், சத்தமாக உடனே
சொல்லி விடுகிறார்கள்,
தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் !

பூக்களின் மவுனம்...


இலவச உதவி எவரிடமும் கேட்காதே ...
இயற்கைச் சொல்லித்தரும் பாடம்,

கனியில் சுவை இல்லாது போனால் ?
அசையாது இருக்கும் மரம் செடிகள்
அகிலம் முழுவதும் பரவ, அவற்றின்
விதைப்பரவல் என்பது சாத்தியமா ?
கனியின் சுவையால் மரம் செடி கண்ட பலன்
எதுவுமில்லை, மறைமுகமாக
என் வித்தை விதைக்கும் உனக்கு என்
கைமாறு இதோ என் கனிகள் !
கைகண்ட பலன் விதைப்பரவலே.

வண்ணமும் மணமும் பெற்றுக் கொள்,
அருகில் வந்தால் இன்னும் கூட
பரிசு...!
தேனையும் உரிஞ்சலாம்,
தேன் ஈயே...!
இவற்றிற்கு உன் கால்மாறு
என் (மகரந்த) சேர்க்கைக்கு உதவுவது.

"உனக்கு உதவி தேவைப்படும் முன்
உதவுபவர்களுக்கு விருந்தை
தயாராக வை...!"

மென்மைப் பூக்களின் மேன்மை
அழகிலும் மணத்திலும் மயங்கி
வண்ண இதழ்களின் ஊடே
தேன் துளியைச் சுவைத்துக் கொண்டே
வண்டுகள் பாடும் ரீங்காரம்...
பூக்களின் மெளன மொழியை
புரிந்து கொள்பவர்களுக்கென
மொழிப்பெயர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன...

எதற்கு காத்திருக்கிறேன் ?



புள்ளிக்குள் அடங்கியாக புள்ளியாக மாறி
புள்ளையாய் மாற எப்போது காத்திருந்தேன் ?
கனநேரத்தில் காத்திருப்பின்
கனம் உடைந்து அப்பன்
உடலுக்குள் உயிராய் வந்த
தருணங்கள் என்று வந்தது?
விடையேதும் அறியாமல் சிந்துத்து
காத்திருந்திருக்கிறேன் !

கருவில் உருவாகி, ஒருவழி உலக வாசல்
ஒன்றில் இருந்து உதிக்கும் நேரம்
எதுவென்று தெரியாமல்
இருப்பை உணர்த்தி
உதைத்துக் கொண்டு காத்திருந்தேன் !

எந்த ஊர், எந்த நாட்டில்
என்று நான் புறப்பட்ட இடத்திற்கு
மீண்டு(ம்) செல்வேன் என்று
அறியாமல் காத்திருக்கிறேன்.

கனங்கள் எல்லாமே காத்திருப்பின்
கனங்களாகவே இருக்கிறது !
என்றிங்கு வாழ்ந்தேன் ?
எல்லா நேரமும் காத்திருக்கிறேன்.

எனக்கே என் காத்திருப்பின்
காலமும் நோக்கமும் தெரியாத போது,
எதற்காக காத்திருக்கிறேன்
என்று நினைக்கும் போது ?
எனக்காக காத்திருப்பவர்
என்று எவரும் இருக்க முடியுமா ?

கடக்கும் 'காலங்களைத்' தவிர
யாருக்காவும் யாரும், எதுவும்
காத்திருப்பதில்லை !

----

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !




கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் !

நீ(ர்) ஊற்றாமல் வாடுகிறது
பூச்செடிகள்,

அணைக்க மறந்து போட்ட
விளக்குகள்,
போட மறந்த விளக்குகள்
எல்லாம் தன்னிலை
மறந்த நிலையில்.

முன்பெல்லாம்
அடிக்கடி பூ உதிர்க்கும்
சாமி படங்களும் பயத்துடன்
என்னை நினைத்து
அமைதி காக்கின்றன !

காயவைத்த காய்ந்துபோன
துணிகள், துவைக்கப்போட்டு
காய வைக்காமல் இருக்கும்
துணிகள் இன்னும் இடம்
மாறாமல் இருக்கிறது.

அமைதியாக பேசும்
தொலைக்காட்சி அணையா
விளக்காக ஆரவராம்
பண்ணிக் கொண்டிருக்கிறது

பழைய சோற்றை
பல ஆண்டுகளுக்கு
பிறகு தின்று பார்க்கிறேன் !

கழட்டிப் போட்ட
துணிகள் கவனம் பெறாமல்
குவிந்திருக்கிறது.

துடைப்பம் இருக்குமிடம்
மட்டும் தூசி இல்லாமல்
இருக்கிறது.

பாத்திரங்கள் விளக்கப்படாமலேயே
பல் இளிக்கிறது.
குளிர்சாதனப் பெட்டியில்
எல்லாம் 'உறைந்தே' இருக்கின்றன.

நீ இல்லாத உன்
இரண்டுவாரப் பயணத்தின்
முதல் மூன்றே நாளில் கண்டு
கொண்டேன்.

உன் தற்காலிக பிரிவால்,
வருந்தி இருக்கும் எனக்கு
தூக்கம் வரவேண்டுமே அதற்காக
மட்டும் அளவாக கொஞ்சம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அடிக்கடி தொலை பேசு !

திகட்டலின் ஏக்கம் !




நன்கு திகட்டிய உணவை
மற்றொரு நாள் சுவைக்க
எழும் ஏக்கத்தைபோல்,

புளித்துப் போனவை என்று
ஒதுக்கியவை கூட,
என்றோ ஒரு நாள் நினைவில்
இனிக்கத்தான் செய்கிறது !

இனி எதும் வேண்டாம் என்ற
வீராப்புகளை, உறுதிகளை
எடுக்கத் தூண்டுகின்ற உராய்வினால்
ஏற்பட்ட சிராய்ப்பின்,

குறுதி காய்ந்ததும்,
என்றோ ஒரு நாள் அதன் மேல்
அடிக்கும் மெல்லிய தென்றல்
காயங்களை வருடிவிட்டுச்
செல்கின்றன.

காயங்களின் அடையாளம் ?
வெறுப்பை மட்டுமா சுமக்கிறது ?
எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் !

காயத்தளும்புகளின் மேல் ஒவ்வொரு
மெல்லிய வருடலும்
காயமற்ற காலங்களையும்
கிளறி காட்டிவிட

அதன் சிலிர்பலையில்
அதே திகட்டிய உணவை
மீண்டும் சுவைக்க
ஏங்குகிறது எண்ணங்கள் !

ஓதுவார் ஆறுமுகசாமி தமிழை உள்ளே அழைத்துச் சென்றார்...நந்தனாரை அழைத்துச் செல்வது யார் ?

சமணமும் பவுத்தமும் முற்றிலும் துடைத்து ஒழித்த பிறகு... தீண்டாமை ஓங்கி இருந்த கிபி 12 ஆம் நூற்றாண்டில், அடியார்களை மெய்சிலிர்க்க வைக்க பெறவும் உடனடி(அவசர) தேவையாகவும் சைவ சமயம் வளர்க்கவும் பக்தி பரவசக் கதைகள் தேவைப்பட்டது. அதற்கு பேருதவி புரிந்தவர் சேக்கிழார் என்னும் பெருமகனார். திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் எழுதப்பட்ட பெரிய புராணம் என்னும் சைவ சமய இலக்கியத்தை இயற்றினார். அதன்படி 63 நாயன்மார்கள் கதை புனையப்பட்டது, தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் அந்த ஊரின் தொடர்பில் புனைவுக் கதைகளாக நாயன்மாரில் ஒருவர் வாழ்ந்ததாக 63 கதைகளில் நாயன்மார்கள் பற்றி பெரிய புராணத்தில் எழுதினார் சேக்கிழார்.

கண்ணப்பநாயனார், காரைக்கால் அம்மையார் என 63 அடியார்கள் வாழ்ந்ததாக எழுதி இருக்கிறார். அதில் ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சேர்ந்த நந்தனார் என்னும் அடியார். நந்தனாரை கதைக்காக பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்பற்றிய பின்னனி எதையும் சொல்லாமல் குறிப்பாக நந்தனார் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட புலைப்பாடியைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் சேக்கிழாருக்கு புலையர்வாழ்வு எத்தகையது என்று தெரியவில்லை என்றும், அதற்க்கான காரணம் புலையர் வாழும் ஊர்களை சேக்கிழார் போன்ற பிரமனர் அல்லாத உயர்வகுப்பினரும் எட்டிப்பார்த்ததில்லை என்றும், தில்லைப் போன்ற ஆலயம் அமைந்த ஊர்களை சேக்கிழார் நோக்கத்தின் காரணமாக அளவுக்கு அதிகமாக புகழ்ந்திருக்கிறார் என்றும் பெரியபுராணம் பற்றி ஆய்ந்தவர்கள் எழுதி இருக்கிறார்கள். பதிவின் மையம் தொட்ட கருத்து அல்ல இது.

நந்தனார் வரலாறு பற்றி அனைவரும் அறிந்தது தான், மேலும் நந்தனார் எரிக்கப்பட்டு இறைவனுடன் இரண்டர கலந்ததாகச் சொல்லப்பட்ட கதைகளை பலரும் அறிந்தது தான் அதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள படி சிவன் கோவிலக்ளி 63 நாயன்மார்களை கோவில் சுற்றில்(பிரகாரம்) வைப்பது ஆகாமவிதிகளில் ஒன்று. நந்தனார் கதை தில்லையில் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளதால் நந்தனாருக்கென்றே சிறப்பு சிலையும் வழிபாடும் பாரதி / உவேசாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக குறிப்பு இருக்கிறது.

நந்தனார் சிலையை தில்லைவால்(எழுத்து பிழையன்று) அந்தணர்கள் எப்பொழுது அகற்றினார்கள் என்று தெரியவில்லை. கடந்த 65 ஆண்டுகளாக நந்தனாரின் திருவுருவ சிலை தில்லையில் இல்லை. வலைப்பதிவில் இதுபற்றி எவருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். அண்மையில் தின்னை கட்டுரையைப் படிக்கும் போது அண்ணன் (ஆர்.எஸ்).எஸ் அரவிந்தன் நிலகண்டன் மிகவும் மனம் வருந்தி நந்தனார் (தில்லைவால் அந்தணர்களால்) அகற்றப்பட்டதைக் குறிப்பிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், நந்தனார் சிலை இருந்ததற்கான ஆதார அணிவகுப்பையும் கட்டுரையில் வைத்து இருந்தார், பின்பு அதுபற்றி விழிப்புணர்வு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை தின்னையில் அந்த கட்டுரையை காணவில்லை. ஆனால் அதே போன்ற கட்டுரை ஒன்றை மலர்மன்னன் எழுதி முன்பு இருக்கிறார்.

அதில் நந்தனார் சிலை அகற்றப்பட்ட ஆதாரம் தொட்டு குறிப்பிட்டுள்ளவையில் ஒன்று மிகவும் மனம் பாதித்தது

"மகாதேவன் மீண்டும் 1943ல் சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்கிறார். இப்பொழுது அங்கு

நந்தனாரைக் காணவில்லை! இதுபற்றி மகாதேவன் மனம் நொந்து எழுதுகிறார்:

நந்தனார் சிலையுருவில் நின்றிருந்த இடம் கால்களால் மிதிபடும் இடமாகிவிட்டிருந்தது."

***

சிலைகளிலும் தீண்டமை பார்த்து அதை அகற்றிய தில்லைவால் அந்தணர்களின் செயலை என்னவென்று சொல்வது, அவர்களும் தமிழ்பேசுகிறார்கள், தமிழர்கள் அனைவரையும் வேறுபாடு பார்க்காமல் விசி திருமாவளவனுக்கும் மாலை மரியாதை செய்தார்கள் என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டுகள் தானே. திருமாவளவனுக்கு மாலை மரியாதைச் செய்தது அவருக்கு பின்னால் நிற்கும் மக்கள் சக்தியை நினைத்தும், பெரும்பான்மை தலித் பெருமக்கள் வாழும் தில்லையில் அவ்வாறு செய்யவில்லை பிழைப்புக்கே வேட்டு என்ற பயம் தானே காரணம் ?

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தில்லைக் கூத்தனுக்கு தமிழை மீட்டுத்தந்தார் ஒரு ஓதுவார் ஆறுமுகசாமி, அந்த போராட்டத்தில் தில்லைவால் அந்தணர்களின் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு கண்ணை இழந்து கண்ணப்பநாயனாராக ஆகியும், உறுதி குறையாமல் இறுதியில் அவரது உண்மையான இறைவேட்கை அவருக்கும் சிவனுக்கும் வெற்றியைத் தேடித்தந்தது, சிற்றம்பலமும் தமிழும் சங்கமம் கொள்ள வைத்தது அவரது தொடர் போராட்டம். நந்தன் சிலையாக எங்காவது மறைவாக திருமுறைகளைப் போல் மறைத்துவைக்கட்டு இருக்கிறானா ? அல்லது எதோ ஒரு தில்லைவால் அந்தணரின் வாயில் படிக்கட்டுக்கு கீழ் கால்மிதியில் நசுங்குன்றானா ? தில்லையம்பலனுக்கே வெளிச்சம்.

சைவ சமயத்தில் மட்டும் தான் தீண்டப்படாத வகுப்பினன் என்று நந்தன் ஒதுக்கப்பட்டது ?ஆழ்வார் சிலைகள் கூட பெருமாள் அருகில் நிற்பதற்கு மறுக்க்கப்பட நிகழ்வுகள் வைணத்திலும் நடந்தேறி இருக்கிறது.

நந்தனார் சிலை உள்ளே அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். தில்லையில் மீண்டும் சிலைத்தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படவேண்டும். வரட்டு ஆன்மிகம் பேசினால் மட்டும் போதுமா? நாத்திகனுக்கு கவலை வேண்டாம் என்று சொல்லும் ஆத்திகர்கள், நாத்திகன் துணை இல்லாமல் இதை சாதிப்பார்களா ?

தன்மதிப்பும் மற்றும் அடுத்தவரைப் பற்றிய மதிப்பும் !

பெரியார் சொல்லும் சுயமரியாதைப் பற்றியது அல்ல. அது வேறு தன்மானம் தாக்கப்படுவதைப் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியது அது. எனக்கு பெரியார் சொல்லும் சுயமரியாதையில் அந்த அளவுக்கு ஈர்ப்பு கிடையாது. பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களிடம் மரியாதையை சூழல் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கும் மாறாக தெரியாத ஒருவர் நம்மைப் பற்றி மிகவும் ஆபாசமாக பேசிவிட்டால் அவருடன் எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றால் சட்டை செய்யாமல் சென்று விடுவதே நல்லது. எதிர்வினை ஆற்றுவதால் பயனில்லை.

எனக்கிருக்கும் பழக்கம் நண்பர்களுடன் நெருக்கமானால் அழைப்பை ஒருமைக்கு மாற்றிக் கொள்வது, அவர்களிடம் விண்ணப்பம் வைத்துவிட்டுதான் அதைச் செய்வேன், முன்பு சென்னையில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றியவர் நால்வர், அவர்கள் நால்வரும் என் வயதில் 1 அதிகம் அல்லது 1 குறைவாகவே இருந்தார்கள், அவர்களுடன் பழகிய 10 நாட்களுக்கும் அவர்களை ஒருமையில் 'வாடா..போடா' என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர்களும் என்னை அவ்வாறே அழைத்தார்கள். இதில் கவனிக்கதக்கது என்னவேன்றால் அந்த நால்வரும் என்னைத் தவிர அவர்களுக்குள் ஒருமை விளிப்பை செய்யவில்லை, பெயரைச் சொல்லி 'என்னங்க' 'சொல்லுங்க' என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஒத்தவயதினர். நானும் கேட்டுப்பார்த்தேன், எல்லோருமே நெருக்கமாகத்தான் உணருகிறோம், இருந்தாலும் ஒருமை விளிப்பு கூச்சமாகவே இருக்கிறது என்றார்கள்.

ஒருமை விளிப்பு மதிப்பு கொடுக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு நாம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது, நன்கு தெரிந்தவர்கள் நம்மை ஒருமையில் அழைக்கும் போது இருவருக்கிடையேயான உரிமை, பிணைப்பு என்று தானே அதைச் சொல்ல முடியும், தெரியாத ஒருவர் அல்லது வேண்டுமென்றே நம்மை ஒருமையில் அழைத்தால் அது அங்கே மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது, அழைக்கும் முறை ஒன்றுதான், அழைக்கப்படும் நபர்களின் நோக்கம், நெருக்கம் பொருத்தே ஒருமை விளிப்புகள் பொருள் கொள்ளப்படுகின்றன. உள்நோக்கத்தோடு அவ்வாறு அழைப்பவர்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. பதிலுக்கு பதில் நாமும் அவ்வாறு செய்தால் அவர்கள் சொல்லுவதை நாம் மறைமுகமாக ஏற்கிறோம் என்றே பொருள்.

சிறுவயதில் என் பெற்றோர்கள் குறிப்பாக அம்மா என்னை வா போ என்று தான் அழைப்பார்கள், பிறகு 'வாப்பா' 'போப்பா' என்று மாற்றிக் கொண்டார்கள், பிடிக்கவில்லை, வா போ என்றே அழையுங்கள் என்று சொன்னேன். எங்கள் இல்லத்தில் அம்மா அப்பா தவிர அனைவரையும் எங்களுக்குள் உடன்பிறந்தோரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதுதான் வழக்கம், அண்ணன் என்றால் வா போ ஆனால் வாடா போடா வுக்கு பழகிக் கொள்ளவில்லை, இளைய உடன்பிறப்புகளிடம் கூடவே வாடா போடா என்ற டாவும் இருக்கும், சகோதரிகளை வா போ என்று அழைப்போம் ஆனால் அவள் இவள் வாடி போடி என்று சொன்னது கிடையாது, பெண் குழந்தைகளை எங்களின் உறவினர்களில் அப்பாக்கள் கூட அவள் இவள் டி போட்டு என்று அழைக்க தயக்கம் காட்டுவார்கள், பெண் குழந்தைகளை வாம்மா போம்மா என்பார்கள், மகன்களுக்கு வாடா போடா உண்டு. நான் என் மகளை அழைக்கும் போது வாடி போடி என்று சொல்வதுண்டு, வா போ என்று அஃறிணையில் பெண்குழந்தையை சொல்வதைவிட 'டி' போட்டு அழைப்பது சரியென்றே படுகிறது.

இல்ல உறவுகளைத் தாண்டி நண்பர் வட்டத்தில் மிகவும் நெருக்கமானவர்களை உறவின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்துவிடுவேன். அப்பா வயதுடைய நண்பர்களின் அப்பாக்களை அப்பா என்று தான் அழைத்தே வந்திருக்கிறேன். தமிழ் சமூகத்தில் அம்மா வயதுடைய எந்த பெண்ணையும் அம்மா என்று தயங்காமல் அழைப்பது போன்று அப்பாக்களுக்கு அந்த மரியாதைக் கிடைப்பதில்லை. காரணம் எவருடைய குழந்தைக்கும் பால் சுரக்கும் அம்மாவால் பாலுட்ட முடியும், அந்த ஒரு உணர்வு பூர்வ அடிப்படை தகுதி அப்பாக்களுக்கு கிடையாது, அப்படியும் நெருங்கிய ஒருவரை அப்பாவென்று அழைக்க முடியாமல் போவதற்கு காரணம், தனது தாயுடன் தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்கும் கிழான மனநிலையே காரணம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்கள் அனைவருமே அடுத்தவரின் அப்பாவை அப்பா என்றே தயங்காமல் அழைத்தனர். அம்மா அப்பாவின் வயதை ஒத்தவர்களை தாரளமாக அதே உறவின் பெயரில் அழைக்கலாம், நம் அம்மாவின் வயது ஒத்த பெண்களை அம்மா என்று அழைப்பதற்குத் தயக்கம் காட்டாத பலரும், நம் தந்தையின் வயதுடைய ஆண்களை அப்படி அழைப்பதற்கு ஏனோ தயங்குகிறார்கள், ஆண்களை அவ்வாறு 'அப்பா' என்று அழைக்கத் தயங்குவதற்கு, யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்காலாம், ஆனால் அப்பா என்று அழைத்தால் அது பிறப்புடன் தொடர்புடையர் மட்டுமே என்று நினைப்பது ஆண்களை உயர்வுபடுத்துவதாக பொருளா ? பிறரால் அம்மா என்று அழைக்கப்படும் போது எந்த பெண்ணும் அதை உயர்வாகவே நினைக்கிறாள், சமூக பொதுச் சிந்தனையால் ஆண்களுக்கு அத்தகைய உயர்வு கிடைக்காமல் போனது இல்லாதது குறைதான். அவ்வாறில்லாமல் பிறரால் அப்பா என்று அழைக்கப்படும் ஆண்கள் அதை தனது குணநலனுக்கு கிடைத்த உயர்வாக நினைத்து மகிழ்கிறார்கள் என்பது பலருக்கு தெரியவில்லை

வலைப்பதிவு நண்பர்களிடம் நட்பு என்பதைத் தாண்டிய நெருக்கமாக நினைத்து ஒரு சில பதிவர்களை உறவின் பெயராலே அழைக்கிறேன். எனது பின்னூட்டங்களைப் படிக்கும் பதிவர்கள், நான் யார் யாரை அவ்வாறு அழைக்கிறேன் என்று தெரிந்திருக்கும். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுபோல் வேறு சிலர் அவர்களாகவே உறவின் பெயர் சொல்லி அழைத்தார்கள், பிறகு விலக்கிக் கொண்டார்கள், நான் அவ்வாறு செய்யச் சொல்லிக் கேட்கவில்லை என்பதால் அவர்கள் முறை மாற்றும் போது 'தன்னால் வந்தது தன்னால் போனது' நட்டமில்லை என்றே நினைத்துக் கொண்டேன்.

நண்பரின் மனைவி நம்மைவிட 10 வயது குறைவாக இருந்தாலும் நண்பரை அழைப்பது போல் நண்பரின் மனைவியையும் ஒருமையில் அழைக்கும் உரிமையை நாமாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். நான் இதுவரை எந்த நண்பரின் மனைவியையும் அவர் எவ்வளவு இளையராக இருந்தாலும் 'ங்கள்' விகுதி இன்றி அழைத்தது இல்லை.

மதிப்பு குறித்து எழுதத் தொடங்கி நட்பு உறவென்று நீண்டுவிட்டது.

தலைப்பின் மையக் கருத்து இதுதான்,

நீங்கள் நன்கு தெரிந்த ஒருவரை, உங்களுக்கு நெருக்கமான ஒருவரை பொதுவில் திடிரென்று எதோ காரணங்களுக்காக ஒருமையில் தூற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது 'எதிர்காலத்தில் இது தனக்கும் நடக்கலாம்' என்றே உங்களுக்கு நெருக்கமான பிறர் உங்கள் மதிப்பை உடனடியாக குறைத்துவிடுவார்கள். அது தவிர்க்கவும் முடியாது. மீறியும் நமக்கு நெருக்கமான ஒருவர் தூற்றிவிட்டால் கொஞ்சம் பொறுமையாக அவர்களுக்கு விளக்கலாம், அவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் அவர்களை விட்டு விலகலாம். அப்படி இல்லாமல் நாமும் எதிர்வினை ஆற்றினால் நாம் அவர்கள் மீது இதுநாள் வரை கோபமாக இருந்ததாக அது வெளிக்காட்டிவிடும், பொது இடத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களிடம் எதிர்வினை ஆற்றாது நடந்து கொள்வது கோழைத்தனம் அல்ல.
தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக 'நினைத்துக்' கொண்ட ஒருவர் நம்மைச் சீண்டுவதற்காகவே தாயைத் தரம் தாழ்த்தித் தூற்றுகிறார் என்றால்,அவர் இழிசொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைப்பார்க்கலாம். இதில் இரண்டு அம்மாக்களின் கண்ணியம் காக்கப்படுகிறது


பிறரிடம் நாம் மரியாதையாக நடந்து கொள்வது, நம்மைப் பற்றிய மதிப்பை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்துவதுதான். 'இவர் நம்மை மதிப்பதால் இவர் நம் மரியாதைக்குரியவர்' என்றே நினைக்க வைக்கும் அதாவது பிறருக்கு நாம் செய்யும் மரியாதையில் சம அளவு தன் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்காக அமைந்துவிடுகிறது. மதிப்பு மரியாதை என்பது கொடுத்து (பின்)வாங்குவதல்ல, 'மரியாதை செய்வது' என்பது பிறர்குறித்த மரியாதை தொடர்புடையது மட்டுமல்ல, தன்மரியாதையும் சேர்த்தே அதில் அடங்கி இருக்கிறது.

தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை காத்துக் கொள்வதில் பெரும்பங்கு நம்மிடையே தான் இருக்கிறது

கண்ணாடியின் கறை !





கண்ணாடியின் கறை !

பரண் மேல்,
ஒரு கால் உடைந்த நாற்காலி,
தூசிபடிந்த பழைய புத்தகங்கள்,
காய்ந்த மாலையுடன்
பொட்டு வைக்கப்பட்ட அம்மாவின்
கருப்பு வெள்ளை புகைப்படம்
ரிடையர்ட் ஆன அப்பாவின்
வழியனுப்பு புகைப்படம்,
நான் பட்டம் வாங்கியதும்
பெற்றோர்களுடன் ஆசி வாங்கிய படம்
என என்னைச் சூழ்ந்துள்ள,
பழமைகள் என்றுமே இனிமை
கலந்த
பசுமை நினைவுகள் தான் !

- செந்தூரன்

இதோ இந்த
வார இதழில் பாருங்கள்,
என் பையன்
உயிரோட்டத்துடன் அழகாக
கவிதைகள் எழுத
ஆரம்பித்துவிட்டான்,
பெருமையாகக் கூறிக் கொண்டு
இருந்தார் முதியோர்
இல்லத்தில் இன்னொரு பெரியவரிடம்
ஒரு பெரியவர் !

இரவின் மடியில் ... (கவிதை) !





இரவின் மடியில் ... (கவிதை) !

பகலிரவு இரண்டில் இரவையே
நேசிக்கின்றேன் நான் !

இருள் பற்றிய பயம் எனக்கில்லை,
முதன் முதலில் நான் பயந்தது அழுதது
இருட்டைப் பார்த்து அல்ல,
வெளிச்சத்தைப் பார்த்துதான் !

இருள் சூழ் கருவறையில் உறங்கிப்
பிறந்ததன் நினைவோ,
கார்முகிலின் இருளைப் பார்க்கும்
போது கருவறையில் குடியிருந்ததன்
குளுமையை உணர்கிறேன் !

கண்களைக் கவரும்
வெளிச்சத்தின் பகட்டை விட
கலப்பில்லா காரிருளின்
அமைதி மேன்மையானதென்பேன் !

என்னை மறந்து உறங்கும் நேரங்களையும்,
இன்பங்களையும்,
தருவதில் இரவுக்கு சமன் எது ?

எனக்கே எனக்காக பயன்படுத்திக் கொள்ளும்
நேரமென்றால் அது இனிய இரவுதான்.

நான் மட்டுமா ? உயிருள்ளவை
அனைத்தும் உறக்கமும், அமைதியும், ஓய்வும்
பெறுவது இரவின் மடியில் தானே ?

தாயின் மடிபோல் தான் இருளும், ஆடிய
ஆட்டத்தில் அலுப்புடன், உறங்கப் போகும்
என் விழிகள் என்றோ ஒரு நாள்,
இருள் சூழ்ந்து... கண்களை,
அப்படியே ஆசையாக தழுவி அணைத்து,
உறக்கத்தில் ஆழ்த்தி தன் மடியில் கிடத்த,
அமைதி கொள்ளவாய், என
நான் கரைந்து போவதும் அந்த இருளில் தான் !

பூவின் மவுனம் !




பூவின் வாசமோ, வண்ணமோ
எதோ ஒரு ஈர்ப்பில்
பார்த்துக் கொண்டு இருந்த
என்னை அழைத்தது அருகில்,

எல்லாப் பூக்களைப் போலத்தான்
இந்த பூவும் நன்றாக இருக்கிறதே
ஒட்டி உறவாடினேன்
அந்த ரோஜாவுடன் !

நெருங்கிப் பழகியதாலோ என்னவோ
உரிமை எடுத்துக் கொண்டு,
என்னிடம் பழகும் நீ
ஏன் காட்டுப்பூக்களிடம்
பழகுகுறாய் என்று கடிந்து
கொண்டது ரோஜா.

பூவெல்லாமே எனக்கு ஒன்றுதான் !
நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும்,
என்னைவிட அந்தபூக்கள்
என்ன உயர்வு உனக்கு ?
கடிந்து கொண்டது ரோஜா !

மீண்டும் சொன்னேன்,
பூக்களெல்லாமே பூக்களே
எந்த பூவும் என்னிடம் பேசினால்
நானும் பேசுவேன் !

நீ பூவென்று நினைப்பது பூவல்ல
பூநாகம், நீ தொடர்ந்து
பழகினால், உன் கூடா ஒழுக்கமாக
உன்னை வெறுப்பதைத் தவிர எனக்கு
வழி இல்லை என்று சொன்னதுமின்றி
முட்களால் என்னைத் தீண்டிவிட்டு மவுனமானது !

வருடிக் கொடுக்கும்
என் விரலில் தீண்டினாலும்
இதயத்தில் தீண்டியதாகவே உணர்ந்தேன்.
நீ மட்டும் என்ன ? நீயும் முட்களால் தீண்டி
காட்டு ரோஜாதான் என காட்டிவிட்டாயே !

அன்பு ரோஜாவே,
பூவில் பூநாகம் இருப்பதெல்லாம் எனக்கு
தெரியாது, என்னைப் பொருத்து
அது நாகலிங்கப் பூதான்,
அந்த பூமட்டுமல்ல,
எந்த பூவும் என்னுடன் பழகினால்
நான் பழகுவேன் !
உன்னுடன் மட்டும் பழகி,
நீ சொல்வதை மட்டும் கேட்கவேண்டும் ?
நீ நினைப்பதை என்னால் நிறைவேற்ற முடியாது !

உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை,
என்னைத் தீண்டியதில் உதிர்ந்துவிட்ட
உன்முட்களால் ஏற்பட்ட காயம்
உனக்கு வலிக்குமே...
அதற்க்காக நானும் கூட வருந்துகிறேன்.

என்றோ ஒருநாள்,
பூந்தோட்டத்தில் எல்லாப்பூக்களுடன்
நீயும் இருக்க வேண்டும்,
அன்று என்னுடன்
மீண்டும் பேசுவாய் என்றே எதிர்பார்த்து இருப்பேன்,
அன்றுவரை உன்மவுனம் எனக்கு
சம்மதமே !

தமிழ்பேச்சுக் கவிஞர்கள் !




வறுமைகள் கூட இவர்கள் வரிகளின் பொற்காசுகள் !
சிறுமைகள் கூட இவர்களின் கவிதை அலங்காரங்கள் !

துன்பவேளையை கவிதை யாழாக இசைப்பவர்கள்,
இன்ப வேளையை கவிதையில் ஏளனம் செய்பவர்கள் !

நாட்டுப்பற்றும் இவர்களால் நக்கல் செய்யப்படும் !
வீட்டுப்பற்றும் இவர்களால் சிக்கல் ஆகிவிடும் !

சோற்றுக்கு வழிதேடாமல் தூற்றலால் பசியாறுவார்கள் !
மாற்றுக்கு துணியில்லாவிட்டாலும் காற்றுக்கு ஆடை தைப்பார்கள் !

நெருப்பு சுடுவதுதான் இயற்கையா ? எங்கள் சொற்களின்,
வெறுப்பு சுடாவிட்டால் நீர் இயற்கை எய்தியவர் என்பர் !

வெடிகுண்டு வெடித்துவிட்டால் வெகுண்டெழு(த) - வரி
அடிகொண்டே அனைத்தையும் அடக்கிவிட நினைப்பர் !

பொடிபோட காசு இல்லை என்றால், தேசம்
அடியோடு வறுமையால் வாடுவதென்பர் !

அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டர் என்பர், சோம்பியிருந்தே
அரிசிகூட இவர்கள் கவிதையால் வெந்துவிடுமென்பர் !

வரிகளை வரிசை மாற்றிப் போட்டுவிட்டு, போற்றிக் கொடுக்கும்
பரிசுக்கு என் கவிதை பெற வாய்ப்பில்லை என்பர் !

கற்கண்டு இனிப்பதெல்லாம் இனிப்பா ? என்
சொற்கண்டால் அவை வெறும் இளிப்பே என்பர் !

சமூக அவலம் இவர்களின் எழுத்துக்கு தீனி, அதைப் போக்கி
சுமூகமாக்க இவர்கள் இறங்கியிருக்கிறார்களா நானி ?


பின்குறிப்பு : கவிஞர் நெல்லக் கண்ணன் நடத்தும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சுக்கும் இந்த கவிதைக்கும் தொடர்ப்பு இல்லை :)

கருமையின் நிறம் !



ஆரவாரமற்ற இருட்டில்
தனிமை சூழ்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி
முற்றும் துறந்த மனதுடன்
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.

காய்ந்த மனதில்,
பொறுக்கி வைத்த சுள்ளிகளாக
கடந்து போன நினைவுகளின்
தீப் பிடித்து எரிந்து மீந்த சாம்பலாக
கடந்த காலம்

பாழடைந்த கிணற்றின்
சிதலமடைந்த சுவற்றின் விழாத நம்பிக்கையில்
பெருந்துளையில் வளர்ந்து கொண்டிருந்த
ஆல விருட்ச எண்ணங்கள்

மழை நேரத்தில் கரைந்தொழுகும்
புற்றின் ஈரமணலில் நெளிந்து துடிக்கும்
கரையான்களின் கடைசி நேர முயற்சியாக
துடித்துக் கொண்டிருந்த என் மனதில்

இதற்கும் மேல் பின் நவீனத்துவக் கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று தெரியாததால்
வெயில் காலத்து ஆற்று நடுமுதுகின் பதிந்த மணல்களை
பேய்காற்று பீய்த்தெரிந்து வரண்ட திட்டாக்கும் திட்டத்துடன்
ஒவ்வொரு முடிகளாக பிய்த்துக் கொண்டிடிருந்தது
விரல்கள் !

- இது கவிஜையான்னு கேட்கிறவங்க...முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க... தலைப்புக்கும் கவிஜைக்கும் என்ன தொடர்ப்புன்னு சொல்லுங்க...எனக்கு தெரியவில்லை :)

நண்பர்கள் நன்னாள் கவித!

 


நன்றாகப் படிக்கிறேன் கவலைப்படாதிங்க,

சீக்கிரம் வேலை கிடைச்சிடும் கவலைப்படாதிங்க,

உடம்புக்கு ஒண்ணும் இல்லை அனத்தாதீர்கள்,

என்றெல்லாம் உறவுகளிடம் சொன்னாலும்

படிக்கவே பிடிக்கவில்லை,

வேலைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,

மனசும் சரி இல்லை,

உடம்பும் சரி இல்லை

என்ற உண்மைகளுடன்,

பருவச் சீற்றத்தின் தணிப்புக்காக

அங்கு சென்று வந்ததிலிருந்து

"அங்கு" எரிகிறது என்று நண்பனிடம் தான் சொல்லமுடிகிறது.

- அன்புடன்
கோவியார்.

பின்குறிப்பு : யூசுப் பால்ராஜ் ஐயங்கார், கீழ்கண்ட படத்துடன் கவிஜையை மொக்கை மின் அஞ்சலில் அனுப்ப, எனக்குள்ள தூங்கிக்கொண்டு இருந்த கவிஜன் விழித்துக் கொண்டான்.

தாய்மை !


அப்பாவுக்கு மகிழ்வுடன்
"டாடா" காட்டும்
எந்த ஒரு குழந்தையும்,
அம்மாவுக்கு
"டாடா" காட்டும் போது
மட்டுமே அழுகின்றது.

பிறப்பும் இறப்பும் !




குறை,
அறுவை,
வலி,
சுகம்,
தாயின் மகப்பேறு போலவே
மரண வேளைகள்,
நோய்,
விபத்து,
வலி,
ஓய்வு என்பதாக
நிகழ்ந்து கொண்டிருக்கிறது !

பெரியார் தாசன் ஆனதென்ன அப்துல்லா !



நாத்திகன்

ஆத்திகன் ஆனான்

முதலில்

புத்தனாக, பின்

இஸ்லாமியனாக, இந்(து)த

ஆத்திகர்கள் மகிழ்ந்ததாகத்

தெரியவில்லை.

பிறகு ஏன் நாத்திகன் மீதான வெறுப்பு ?

இங்கே

கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்

வெறும் மதமும், மதம் சார்ந்த

நம்பிக்கைகள் மட்டுமே...

என்பதற்கு மற்றொரு சான்று

பெரியார் தாசன் !

ஹைகூ......வுங்க !



சிறகுகளின் பசை !

எண்ணைப் பசை இருந்தும் தண்ணீர் மூழ்கி
எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பறவைகள் !



மரம் வளர்ப்போம் !

அழிந்த மரங்களின் காகித் கூழ்களில்
அழகான வாசகம் 'மரம் வளர்ப்போம்.....மனிதம் காப்போம்'

குக்கர் விசில் !

குயில் கறி வெந்த குக்கரும்
இனிமையாக விசலடிதது வெந்ததை அறிவிக்க !

அக்டோபர் இரண்டு !

அந்த நாளிலும் டாஸ்மாக் கதவு இடுக்கு வழியாக
கள்ளத்தனமாக நுழைந்தது காந்திப்படம்

அணையும் விளக்கு !

இறப்பின் நொடிகளை துடிப்புகளாக அறிவித்துக்
கொண்டிருந்தது ஒரு சாலை விளக்கு !

சில்லரைத் தனம் !

பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது !

காணமல் போன சொற்கள் !



நம் உரையாடல்கள் அனைத்தையும்
அலைபேசிகள் தின்று தீர்ந்துப் போனபின்
நம் திருமணம் நடந்ததா ?

இன்றும் தான் பேசுகிறோம்
'சரி' என்ற ஒற்றைச் சொற்களால்
முடிந்துவிடுகிறதே நம் உரையாடல்கள் !

நான் நம்பிக்கையாளன், ஆத்திகன் !


சக்தியுள்ள கடவுள் எது ? லாபம் தரும் கடவுள் எது ?
என்கிற எனது "கடவுள்" நம்பிக்கையில்
அவர்களது "கடவுள்" நம்பிக்கைகளை
நான் சேர்த்துக் கொள்வது கிடையாது
நான் என்னை "கடவுள்" நம்பிக்கையாளன் என்று
வெட்கமில்லாமல் கூறிக் கொள்வதில்
பெருமை படுகிறேன்.

நான் ஒரு கிறித்துவனாக இருந்தால்
மசூதிகள், கோவில்களின் கடவுளரை புறக்கணிப்பேன்

நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தால்
தேவாலயங்களும் கோவில்களும் சிலை வணங்கிகளின்
அபத்தங்கள் என்பேன்

நான் ஒரு இந்துவாக இருந்தால் என் நம்பிக்கைக்குரிய
ஆயிரம் சாமிகளில் அல்லாவும், ஜொஹோவாவிற்கும்
இடமில்லை என்பேன்

"எல்லாம் அவன் செயல்" "அவனே அனைத்தும் அறிவான்"
என்ற எனது திடமான நம்பிக்கைகளுள்
மாற்று மதங்களுக்கும், அவர்கள் தம் கடவுளரும்
அடங்காது. ஆனால் அவர்களையும்
எனது கடவுளே ஆளுமை செலுத்துகிறார், அழிக்க விரும்புகிறார்
என்ற என் நம்பிக்கையில் மாற்றமே இல்லை.

நம்புங்கள் நான் ஆத்திகன்... ஆத்திகன்
என்னுடைய கொள்கை சார்ந்த "கடவுள்" மட்டுமே
உண்டு என்பேன். கூடவே
"கடவுள்" நம்பிக்கையற்றவர்களை
நக்கல் அடிப்பவன் நான்.

"கடவுள் இல்லை" என்பவன் சிந்திக்க மறுப்பவன் அவன்
"நரக நெருப்பில் வாடுபவன்",
"உண்டு" என்று கடவுள் புகழ்பாடும் நான் "ஆசிர்வதிக்கப்பட்டவன், சொர்கவாசி
ஆகப்போகிறவன்"



**********

போங்கைய்யா நீங்களும் உங்க போங்கு ஆட்டமும்

அன்புடன் கோவியார்

கூடங்குளம் !


மயானங்கள் மனிதர்களுக்காக
மனிதர்களால் கட்டப்படுபவை தானே !

மின்சாரப் பஞ்சம் இனி இல்லவே இல்லையாம்,
மயானங்களுக்கு மட்டுமல்ல,
மனிதர்களுக்கும் சேர்த்தே,
திறக்கப்படும் மாபெரும் மின்சார சுடுகாடு !

புண்ணாக்கு, வெளக்கெண்ணை, பருப்பு, வெங்காயம்

போடா புண்ணாக்கு, டேய் வெளக்கெண்ணை, இன்னா, நீ பெரிய பருப்பா, போடா வெண்ணை, டேய் வெங்காயம், ஆமா இவுரு பெரிய பன்னு, சுத்த பழம் மாதிரி இருக்காண்டா, அவன் ஒரு தயிர் வடைடா,

இப்படி எல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வெச்சு கூப்பிடறதை கேட்டிருப்பீங்க, அதுக்கு உண்மையிலயே இன்னா மீனிங்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்ப……….,,,,,,,

புண்ணாக்கு : எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசறவன், ஆனா உண்மையில ஒரு சரக்கும் இருக்காது. சந்திராயன் எரிபொருள் என்னாங்கறதுல இருந்து சந்திரமுகி படத்தின் கேமரா ஏங்கிள் வரை எல்லாத்தையும் மணிக்கணக்கா பேசுவான்.

வெளக்கெண்ணை : எதப் பத்தி பேசறமோ அதத் தவிர மத்ததெல்லாம் பேசறவன். கண்ணுல தூசி விழுந்துடுச்சுடான்னா கால் வலிக்கு மருந்து சொல்றவன்.

பருப்பு : எதுக்கெடுத்தாலும் ஓவரா சீன் காட்டறவன். எங்கிட்ட மட்டும் அவன் இந்த வார்த்தையை சொல்லீருந்தா, நடக்கறதே வேறன்னு டயலாக் உடறவன். ஆனா உண்மையிலயே இவருக்கு பேஸ்மெண்ட் வீக்.

வெண்ணை : எப்ப பார்த்தாலும் பெரிய நடுநிலைவாதி மாதிரி, நீதி, நேர்மை நியாயம்னு பேசறவன். என்ன இருந்தாலும் ஒசாமா பின் லேடனும் ஒரு மனிதன் தானே, அவரை எப்படி ஒரு ஓநாய் போலவெல்லாம் கார்ட்டூன் போடலாம்னு பேசுவான்.

பன்னு : ரொம்ப மென்மையானவனாகவும், இளகிய மனசுள்ளவனாகவும் காமிச்சுக்கறவன். ஏண்டா, ஒரு பொண்ண இப்பிடி எல்லாமா கலாய்ப்பாங்க, பாவண்டா, அது அழுதுறுமோன்னு பயந்துட்டேன்னு சொல்வான், ஆனா மனசுல மட்டும் என்னடா இதோட நிறுத்திட்டீங்களேன்னு சலிச்சுக்குவான்.

பழம் : வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பது போல் காமிச்சுக்கறவன். டேய், அங்க பாரேன், காத்து அடிக்கும்போது அந்த குல்மோஹர் பூவெல்லாம் என்ன அருமையா தலை ஆட்டுதுன்னு பாரேன்னு சொல்லுவான், ஆனா, உண்மையில அந்த குல்மோஹர் பூவுக்கு பின்னால இருக்கற பால்கனியில துணி காயப் போடற ஆண்ட்டிய லுக் உட்டுட்டிருப்பான்.

தயிர்வடை : எப்பவுமே எதாவது ஒரு பிரச்சனையில இருப்பதாகவே கற்பனை பண்ணிக்கறவன். ரயில் டிரைவர் தூங்காம வண்டி ஓட்டி அவரு கண்ணு ஒரு மாதிரி இருக்கறத பார்த்துட்டு, டேய் எனக்கு இஞ்சினுக்கு அடுத்த கோச்சுடா, அந்தாளு கண்ணப் பாரேன், ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்காண்டா, ஒழுக்கமா ரயில ஓட்டுவானான்னு கவலைப் படுவான்.

ஆனா பாருங்க, இந்த எல்லா பட்டப் பெயர்களுமே ஒரு சாப்பிடற பொருளை மையமா வெச்சுத்தான் உருவாக்கியிருக்காய்ங்க, அது ஏன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

இது இன்னாண்ணா, A லிருந்து Z வரைக்கும்னு.....,


இப்பிடித்தான் சும்மா போலி விவகாரம், ஆண்டாள் என்ன பாடுனார்? ஈரத்துல தண்ணி எவ்வளவு ? பட்டறைல ஈ யாரு? இன்னைக்கு யாரு யார கும்முறாங்கன்னு படிச்சுகிட்டு நல்ல புள்ளையாட்டம் இருந்த என்னை, இந்த வம்புல நையாண்டி நைனா அண்ணன் மாட்டி விட்டுட்டாரு, ஆனா அதுக்குண்ணு நாங்க சும்மா விடுவமா, நாங்களும் நாலு பேர கோத்து விட்டிருக்கம்ல.....,

வாங்க வந்து படிச்சு தொலையுங்க.


சில விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..



இனி மேட்டருக்கு வருவோம்.


1. A – Avatar (Blogger) Name / Original Name : தராசு/ அட, பேருல என்னங்க ஒரிஜினலு அப்புறம் டூப்ளிகெட்டுன்னுட்டு,

2. B – Best friend? : நண்பர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் தான். அதுல பெஸ்ட் பிரண்டுன்னு ஒரு தனி அவார்டெல்லாம் எனக்கு புடிக்காது.

3. C – Cake or Pie? : இது அமெரிக்கா காரனுக்கான கேள்விங்கறது என்னோட ஐப்பிராயம், “பை” ன்னா அது இன்னா, நம்மூரு சமோசா மாதிரியானா ஐட்டமா?????, அப்ப நாங்க சமோசாகாரங்க தான்.

4. D – Drink of choice? : தண்ணி, ஹலோ குடிக்கற தண்ணீங்க, நீங்க பாட்டுக்கு கோக்கு மாக்கா எதையும் யோசிக்க கூடாது.

5. E – Essential item you use every day? : தேவையில்லாதத எதுக்காக பயன்படுத்தணும், அப்டீன்னா தேவையிருக்கும்போது தேவையில்லாத பயன் படுத்தறதும், தேவையில்லாத போது தேவையுள்ளத பயன் படுத்தறதும் முட்டாள் தனம் தான, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ண கட்டுதே……

6. F – Favorite color? வெள்ளை கலரு சிங்குச்சா, ஏன்னெல்லாம் கேக்கப் படாது, இருந்தாலும் சொல்லீற்றேன், ஏன்னா எனக்கு மனசுக்கு புடிச்ச கலர் வெள்ளை, ஏன்னா நம்ம மனசே வெள்ளை.

7. G – Gummy Bears Or Worm? : வேணாம் எனக்கு கோபம் வராது, இதெல்லாம் அசலூர்காரன கேக்க வேண்டிய கேள்வி. எங்கூர்ல கிடைக்கறத கேளுங்கப்பா.

8. H – Hometown? கொஞ்சும் தமிழ் பேசும் கொங்குநாடு.

9. I – Indulgence? படிக்கறது, எதுன்னாலும் படிக்கறது.

10. J – January or February? பிப்ரவரிதான், நாலு வருசத்துக்கு ஒரு தரம் சரியா மாறிகினே இருக்கற இந்த மாசம் எனக்கு புடிக்கும். ஏன்னாக்கா காதலுக்கு சிறப்பே இந்த மாசத்தில தான….

11. K – Kids & their names? இங்கு ஒருமைதான், பன்மை கிடையாது, பேருன்னு எடுத்துகிட்டா பிரியம்னு வெச்சுக்கோங்களேன்.

12. L – Life is incomplete without? கண்ணா நீ என்னதான் பெரிய ஆளாயிருந்தாலும், நீ ஒரு பாதிதான், மறுபாதியில்லனா நீ வெறும் பாதிதான்.

13. M – Marriage date? வாழ்க்கையில ஒரு மனுஷன் சந்தோஷமா இருந்த கடைசி நாளை தெரிஞ்சுக்கறதுல எவ்வளவு ஆசை பாரு.

14. N – Number of siblings? கண்ணே கண்ணு.

15. O – Oranges or Apples? ஒரு நாளைக்கு ஒண்ணை தின்னா டாக்டரே வேண்டாமாமே, அதான், அதான், அதேதான்.

16. P – Phobias/Fears? முதுகுல நச்சுனு ஒரு குத்துவாங்களே, அந்த ஆளுங்கள பாத்துத்தான் பயம்.

17. Q – Quote for today? உன்னை நீ நம்பு, உலகமே உன்னை நம்பும்.

18. R – Reason to smile? இதுக்கெல்லமா காரணம் சொல்லுவாங்க, புன்னகை என்னும் நகை எனக்கு எப்பொழுதுமே அழகு சேர்ப்பதால்.

19. S – Season? வசந்த காலம்.

20. T – Tag 4 People?-அன்புத்தம்பி டக்ளஸூ என்கிற ராஜூ என்கிற ராமராஜூ,
சும்மா சும்மா ஒளிஞ்சு வெளையாடிகிட்டிருக்கற அன்பு அண்ணன் அப்துல்லா.இது வரைக்கும் அதிகம் எழுதாமல் , அதிகம் வாசிக்கும் அண்ணன் நாஞ்சில் நாதம்,நடந்தே சலிக்கற பாதசாரி என்கிற வெங்கிராஜா


21. U – Unknown fact about me?: நான் ஒரு டெரராக்கும்.

22. V – Vegetable you don't like? ஏட்டுச் சுரைக்காய்.

23. W – Worst habit? அப்பிடி எதுவும் இருக்கற மாதிரி தெரியலயே.

24. X – X-rays you've had? அதுக்கெல்லாம் அவசியம் இது வரைக்கும் வரல.

25. Y – Your favorite food? அசைவம்.

26. Z – Zodiac sign? புற்று நோய்.

நல்ல நண்பன் இல்லைன்னா நீ மனுசனேயில்ல.

சீறத் தெரியலைன்னா அது சிங்கமில்ல,

பாயத் தெரியலைன்னா அது புலியுமில்ல,

பாடத் தெரியலைன்னா அது குயிலுமில்ல,

ஆடத் தெரியலைன்னா அது மயிலுமில்ல,

நீந்தத் தெரியலைன்ன அது மீனுமில்ல,

ங்கொய்யால,

நல்ல நண்பன் இல்லைன்னா நீ மனுசனேயில்ல.

குவாலியர் – கோட்டைகளின் நகரம்


புழுதி பறக்க விரையும் குதிரைகளின் குழம்பொலி, உருவிய வாள், முறுக்கிய மீசை, நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், வாரிசு சண்டைகள், உருண்டு ஓடிய தலைகளிலிருந்து பிரிந்து சிதறிய மகுடங்கள், பொன்னாசை பிடித்த ஆப்கானியர்களின் ஊடுருவல்கள் என எப்பொழுதும் ஒரு அரசியல் சூறாவளிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்த ஒரு நகரம். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், முகலாயச் சக்கரவர்த்தியின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் இங்கு வந்தும் போவதுமாக இருந்ததால், இசையும், நாட்டியமும் இன்ன பிற கலைகளும் கூட அதன் போக்கில் தன் பல பரிமாணங்களை இந்த நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

முதன்முதலில் இந்த மலை நகரத்தை கண்ணெடுத்து பார்த்து அதை ஆக்ரமித்து தனதாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், சூரியவம்சத்தை சேர்ந்த பத்குஜ்ஜர் ராஜபுத்திர வம்சத்தின் குல விளக்குகள் தான். எந்தப் போரிலும் முன்னணியில் நின்று நெஞ்சை நிமிர்த்தி போரிடும் வீரமும், துணிவும், பெருமையும் கொண்ட குஜ்ஜர் எனப்படும் இந்த ராஜபுத்திர வம்சம், அரசியல் சூழ்நிலையில் அடிபட்டு இன்று தங்களது இருப்பியல் வசதிகளுக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்பது வேதனைதான். இந்த வம்சத்து மக்கள் இங்கு கோட்டை கட்டப் போய், அதன் பிறகு வந்தவர்கள், இங்கு பல கோட்டைகளைக் கட்டி இந்த நகரத்துக்கு கோட்டைகளின் நகரம் என பெயர் கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்து விட்டார்கள்.

தோமர் வம்சத்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜா மான்சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்ட குவாலியர் கோட்டையானது இன்றளவும் பிரசித்தமானது. இதை சுற்றிப் பார்ப்பதற்கே பல நாட்களாகும். இதற்குப் பின் இந்த நகரம், கச்வாஹா ராஜ புத்திரர்கள், அடிமை வம்சத்து அரசனான குத்புதின் ஐபெக், அதற்குப்பின் மராட்டிய வீரரான மாதவ்ராவ்ஜி ஷிண்டே என பலரது கைக்கு மாறி, சிப்பாக் கலகத்தில் பெரும்பங்கெடுத்து, பின் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்த சிந்தியா மகாராஜாக்களின் கைகளில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்திருக்கிறது.

குவாலியர் கோட்டையின் அழகையும் பெருமையையும் கண்ட முகலாய மன்னர் பாபர், இதில் லயித்துப் போய் இந்தியர்களால் கட்டப்பட்ட மாளிகைச் சரங்களில் இது ஒரு விலைமதிக்க முடியாத முத்து என்றாராம்.

இன்னும் இந்நகரம் அமைந்திருக்கும் பிராந்தியமான புந்தேல்கண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற நடனங்களான ஆஹிரி, பரேதி, சஹரியா, லூர், லாங்கி, துல் துல் கோரி போன்ற நடனங்களின் எச்சத்தையும் மிச்சத்தையும், திருமணங்களிலும் விழாக்களிலும் காணலாம்.

இசை மேதை தான்சேனுக்கு வருடத்திற்கொருமுறை தான்சேன் இசைவிழா நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.

ஒரு முறையாவது இந்தக் கோட்டைகளை போய் பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டு விட்டு வாருங்கள்.

நகரம் – அமிர்தசரஸ் - தங்க நகரம்


சீக்கியர்களின் புனித பூமி, பொற்கோவில், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நகரம், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுக்கு பெயர் போன பூமி, மண்ணிலும் நீரிலும் மாத்திரமல்லா; காற்றிலும் வீரம் உலவும் பூமி, பிரிவினையின் போது பிரிய மனமில்லாது பிரிந்தவர்களின் துயர வடுக்கள் துடைக்கப் படாமல் இன்னும் புண்களாய் உள்ளது என சிறப்பும், சிறுமையும் ஒருங்கே உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே அம்ரிஸ்டர் எனப்படும் அமிர்த சரஸ் நகரம்.

துங் என்ற பழங்குடியினர் வசித்து வந்த இந்த பூமியை குரு ராம்தாஸ் ஜி என்பவர் கி.பி.1574 ல் 700 ரூபாய்க்கு வாங்கினார். பிறகு இங்கு இருந்த வளங்களைப் பார்த்து குளங்கள் வெட்டவும் மரங்கள் நட்டவும் என திருப் பணிகள் தொடங்கி, வளம் கொழிக்கும் பூமியானவுடன் அதற்கே உரிய சண்டைகளும் சச்சரவுகளும், உரிமைப் பிரச்சனைகளும், உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும் என அரசியல் ஆரம்பித்தவுடன் இங்கிருக்கும் உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு அடையாளம் தேடிக் கொண்டதுதான் சீக்கிய மார்க்கம். அதன் இன்னொரு பரிமாணமே கால்ஸா பிரிவு என்ற வீரர்கள் படை. இந்திய திருநாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் இந்த நகரைக் கடந்துதான் வர வேண்டுமென்பதாலும், நுழைந்தவுடன் கண்ணில் காணும் வளங்கள் அவர்களது நாவில் நீர் ஊற வைப்பதாலும், எப்பொழுதும் ஒரு எல்லை பாதுகாப்பு படையை போலவே இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானார்கள். ராஜஸ்தானிய ராஜ புத்திரர்களை புரட்டியெடுத்த ஆப்கானிய போர் வீரன் அப்தாலி, தன் கண்களை இந்த மண்மீதும் பதிக்க தவறவில்லை. வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், கண்ணைப் பறித்தது இங்குள்ள மங்கையர்களும் கூடத்தான். கோதுமை நிறத்தில் கூரிய நாசியும், நெடிதுயர்ந்த வனப்பும், அகன்ற தோள்களும், இடுப்பு வரை கூந்தலுமென இருக்கும அழகுப் பதுமைகளை கண்டு மனதை பறி கொடுத்த வந்தேறிகள் அநேகர். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கத்தானோ என்னவோ ஒவ்வொரு சீக்கிய பெண்ணும் கூட எப்பொழுதும் கத்தியும் கையுமாகவே இருந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13, 1939, எல்லோருக்கும் போலவே இந்நகரத்து வாசிகளுக்கும் ஒரு இனிய காலையாகத்தான் விடிந்தது. ஆனால் அன்று நிகழப் போகிற விபரீதம் தெரியாமலே, “வாஹே குரு”, என்ற கோஷங்களுடன் அமர்ந்திருந்த 1500 சொச்சம் பேரை தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கும்படியாக தனது துப்பாகிகளை திருப்பிய ஜெனரல் டயர் இங்குதான் தனது திருவிளையாடலை நடத்தினார். துப்பாக்கிகள் ஓய்ந்த பின் எண்ணிப்பார்த்தால் 329 பேர் கடைசி முறையாக “வாஹே குரு” என அழைத்திருந்தார்கள்.

அடுத்ததாக சுதந்திரமடைந்தோம் என்ற சந்தோஷ கீதம் காதில் படுவதற்கு முன்னே, வந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை தனது கோரக்கரங்களால் இன்னொரு முறை இந்நகர வீதிகளில் ரத்த ஆறை ஓடச்செய்து விட்டுப் போனது. டோம்னிக் லேப்பயர் மற்றும் லேரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய Freedom at Midnight என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். பிரிவினையின் போது இந்நகரமும் லாஹூரும் சந்தித்த அனைத்து வேதனைகளையும் வார்த்தைகளில் அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள்.

இன்று இந்த நகரம் புதுப் பொலிவுடன், பொற்கோவில் மற்றும் ஏனைய புராதனச் சின்னங்களின் சிறப்புகளுடன், மனித நேயமிக்க சீக்கிய மக்களுடன், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுடன் என இன்னும் எத்தனையோ சிறப்புடன் தனது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

அப்பாவும், ஈ மெயிலும்

இந்தாப்பா, உனக்கு புதுசா நோட்டுப்புத்தகம் வாங்கி வந்திருக்கேன். பத்திரமா கிழியாம வெச்சுக்கணும்.
அப்பா உங்களுக்குன்னு ஒரு ஈ மெயில் ஐடி ஓப்பன் பண்ணீட்டம்பா, பாஸ்வேர்ட கரெக்டா மறக்காம ஞாபகம் வெச்சுக்கோங்க.
நோட்டுப் புத்தகத்துல முதல் பக்கத்துல உன் பேரையும், வகுப்பையும் எழுதுடா.
முதல்ல ஜி மெயில் டாட் காம்னு டைப் பண்ணி என்டர்னு ஒரு பட்டன் இருக்குமே அத தட்டுங்கப்பா.
வலது கையில பேனாவை பிடிச்சு, நிப்பை அழுத்தாம மெல்லமா தேய்ச்ச மாதிரி எழுதுடா.
அப்பா, வலது கையில மௌஸ பிடிச்சுகிட்டு, ஆள்காட்டி விரல் இடது பட்டன்லயும், நடு விரல வலது பட்டன் மேலயும் வெச்சுக்கங்கப்பா
நோட்ட நேரா திருப்பி உங்கைக்கு வாகா வசதியா வெச்சுகிட்டு எழுதுப்பா, நோட்டு மேல படுத்த மாதிரி உக்காரத.
அப்பா, மானிட்டர்ல இருக்கற ஒவ்வொரு பட்டனயும் நல்லா பாருங்கப்பா, உங்களுக்கு கிட்டப் பார்வை இருக்கறதுன்னால சரியா தெரியலண்ணா கொஞ்சம் பின்னால தள்ளி உக்கார்ந்து பாருங்க.
முதல்ல நீ என்ன எழுதப் போறீங்கறதுக்கான தலைப்பை முதல் பக்கத்துல நடுவுல எழுது.
அப்பா, இப்ப மௌஸ தள்ளினீங்கண்ணா மானிட்டர்ல ஒரு அம்புக்குறி தெரியுமே, அத கம்போஸ் மெயில்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அது மேல வெச்சு, மௌஸோட இடது பட்டனை ஒரு தரம் அமுத்துங்கப்பா.
அனுப்புனர்னு முதல் வரில எழுதீட்டு, இரண்டாவது வரியிலிருந்து உன்னோட முகவரிய எழுதுப்பா.
இப்ப உங்க முன்னால ஒரு மெயில் ஓப்பன் ஆயிருக்கும் பாருங்கப்பா.
அனுப்புனர் முகவரிய எழுதி முடிச்சதுக்கப்புறம் கீழ ஒரு வரிய விட்டுட்டு பெறுநர்னு எழுதி, நீ யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதறயோ அவுங்க முகவரிய எழுது. எழுத்துப் பிழை இல்லாம சரியா எழுது. முகவரியோட ஒவ்வொரு வரிக்கும் கடைசியில கமா போட்டுட்டு, கடைசி வரியில முற்றுப் புள்ளி வை.
இப்ப To ஒரு வரி இருக்குமே அதுல நான் உங்களுக்கு நோட்டு புத்தகத்துல அக்காவோட மெயில் ஐடிய எழுதிக்குடுத்துருக்கன்ல, அத அப்படியே அடிங்கப்பா. கீ போர்டுல இருக்கற ஒவ்வொரு பட்டனா பாத்து தப்பில்லாம அடிங்க. அந்த @ எழுத்த அடிக்கறதுக்கு Shift னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க அதை அழுத்திகிட்டு 2 ம் நம்பர் பட்டனை அழுத்துங்க.
இப்ப ஒரு வரி விட்டுட்டு, இடது பக்கமிருந்து ஒரு வார்த்தையளவு இடைவெளி விட்டுட்டு பொருள் அப்படீன்னு எழுதி, ஒரு விகிதப் புள்ளி வெச்சுட்டு எங்கள் ஊர் திரு விழான்னு எழுதிட்டு பொருள்ல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் சேர்த்து அடியில் ஒரு கோடு போடு.
இப்ப அந்த To ங்கற லைனுக்கு கீழ CC ன்னு ஒரு லைன் இருக்கும், அத விட்டுடுங்க, அதுக்கும் கீழ Sub னு எழுதி ஒரு காலியிடம் இருக்கும் பாருங்க, அந்த இடத்துக்கு மௌஸ மூவ் பண்ணி அம்புக் குறிய கொண்டு வாங்கப்பா, இப்ப மௌஸுல இருக்கற இடது பக்க பட்டன தட்டுனீங்கன்னா ஒரு கோடு வந்து வந்து போகும், அங்க அப்பாவின் கடிதம்னு டைப் அடிங்க.
நல்லா பிழை இல்லாம பொறுத்து நிதானமா எழுதுப்பா, ஒவ்வொரு எழுத்தா எழுது, அந்த சுழி, கூட்டெழுத்தெல்லாம் தெளிவா இருக்கணும்.
நீங்க எப்படி தமிழ்ல எழுதுவீங்களோ அப்படியே டைப் அடிங்கப்பா, கஷ்டமா இருந்துதுன்னா, நான் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் சரியான ஆங்கில எழுத்தை எழுதி வெச்சிருக்கன்ல, அந்த நோட்டை பக்கத்துல வெச்சு பாத்து டைப் அடிங்க.
இப்ப அந்த பொருள்ங்கற வரிக்கு கீழ ஒரு வரி விட்டுட்டு, இப்ப உங்க ஆசிரியருக்கு நீ எழுதறீன்னா மதிப்பிற்குரிய வகுப்பாசிரியர் அவர்களுக்கு அப்படீன்னு எழுது. பேனாவை கொஞ்சம் சாச்சுப் பிடி, அதை ஏன் அப்பிடி நெட்டுக் குத்தலா ஆணி புடிச்ச மாதிரி புடிச்சிருக்க.
இப்ப அந்த வரிக்கும் கீழ ஒரு காலியிடம் கட்டம் போட்டு இருக்குமல்லப்பா, அங்க அம்புக்குறிய கொண்டு வந்து மறுபடியும் மௌஸோட இடது பக்க பட்டனை தட்டுங்க, இப்ப அந்த இடத்துலயும் ஒரு கோடு வந்து வந்து போகுதா, அங்க அன்புள்ள மகளுக்குன்னு டைப் அடிங்க, கீ போர்டுல இருக்கற பட்டனையெல்லாம் மெதுவா அழுத்துங்க, ஏன் இப்படி டக்கு டக்குனு டைப் ரைட்டராட்டம் அடிக்கறீங்க.
இப்ப உங்க வாத்தியாருக்கு நம்ம ஊர்ல நடந்த திரு விழாவுல நீ என்னெல்லாம் பார்த்தியோ, அத அப்படியே நிதானமா யோசிச்சு ஒரு கடிதம் மாதிரி எழுது. அவசரப் படாம நிதானமா எழுது.
இப்ப அக்காவுக்கு நம்ம ஊர் திரு விழாவுல நடந்த ஒவ்வொண்ணையும் ஒரு விஷயம் விடாமா, நிதானமா யோசிச்சு எழுதுங்க.
எழுதீட்டயா, எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தரமா படிச்சு பாத்துக்க, எதும் தப்பு இருந்தா திருத்திக்க, கடைசில இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதலுள்ள அப்படீன்னு எழுதீட்டு, அதுக்கு கீழ உன் பேர எழுது.
கடைசியில அன்புள்ள அப்பான்னு எழுதி முடிச்சிருப்பீங்களே, எதுக்கும் ஒரு தரம் நீங்க எழுதுனத படிச்சு பாத்துக்குங்க. இப்ப மறுபடியும் மௌஸ நகர்த்தி அம்புக்குறிய அந்த இடது மூலைல Send அப்படீன்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அதுக்கு நேரா வெச்சு, ஒரு தரம் இடது பட்டனை அமுக்குங்க
அவ்வளவுதாண்டா, சபாஷ், உங்க வாத்தியாருக்கு நீ ஒரு கடிதம் எழுதீட்ட பாத்தயா
அவ்வளவு தான்ப்பா, நீங்களும் அக்காவுக்கு ஈ மெயில் அனுப்பீட்டீங்க பாத்தீங்களா.

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....


அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

மூச்சு முட்ட முப்பது நாட்கள்


பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

ங்கொய்யால


அப்பாவுக்கு புதுக் கண்ணாடி,

அம்மாவுக்கு புது புடவை,

ஆத்துக்காரிக்கு புதுப் பட்டு,

தங்கச்சிக்கு தங்கச் செயினு,

தம்பிக்கு டிஜிட்டல் கேமரா,

வாரிசுகளுக்கு புதுத்துணி, பட்டாசு,

வந்தவங்களுக்கு வழிச்செலவு,

பக்கத்து வீட்டுக்கு ஒரு தட்டு பலகாரம்,

ஒரு வழியா தீவாளி முடிஞ்சுது,

ங்கொய்யால,

இப்போதைக்கு இதெ வெச்சு ஓட்டு,

அடுத்த தீவாளிக்கு புதுச்செருப்பு வாங்கலாம்.

நகரம் - ஹரித்துவார் - தெய்வத்தின் வாசல்.


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து வழித்தெடுத்த அமுதத்தின் ஒரு குடம் (கும்பம்) இங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து சில துளிகள் தரையில் சிந்தியதாகவும் சொல்லப்படும் ஒரு இடம் இது. அமுதத்தை வழித்தெடுத்த பின் வழக்கம் போல தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் அழுகுணி ஆட்டம் ஆட, அசுரர்கள் அதைப் பறிக்க முயல, அமுதத்தை நான்கு குடங்களில் ஊற்றி, அந்த வழியே வந்த கருட பகவானிடத்தில் கொடுத்து அனுப்புகிறார்கள். கருட பகவான் நான்கு குடங்களையும் நான்கு இடங்களில் மறைத்து வைக்கிறார். உஜ்ஜைன், நாசிக், அலகாபாத் மற்றும் ஹரித்துவார். இந்த நான்கு இடங்களிலும் கும்பங்களில் வைக்கப்பட்டிருந்த அமுதம் சில துளிகள் சிந்தி விட்டதால் தான் இங்கு “கும்பமேளா” க்கள் கொண்டாடப் படுகின்றன. மேலும் இந்த பாற்கடலை கடைந்து, அதற்கப்புறம் நடந்த களேபரங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பார்வதியுடன் ரொமான்ஸில் இருந்த சிவனும் பங்கெடுத்துக் கொண்டதாலும், அதே சமயத்தில் பாற்கடலை கடைய எடுத்து வந்த மந்தராச்சல மலை கடலில் மூழ்கும் பொழுது, அதை தாங்கிப் பிடிப்பதற்காக ஆமையாய் அவதாரமெடுத்து விஷ்ணுவும் ஆட்டத்தில் உள்ளதாலும், ஹரித்துவார் என்னும் இந்நகரம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெருமை சேர்க்கிறது.

நிதர்சனத்தில், எக்கச்சக்க பெயர்தெரியா மூலிகைகளுக்குள் புகுந்து, நறுமணமெடுத்து, அநேக வியாதிகளுக்கு ஒரே மருந்தாயிருந்து, பொங்கிப் பிரவாகமெடுக்கும் கங்கை நதி மலைகளிலிருந்தெல்லாம் கீழிறங்கி சமவெளியில் சாதுவாக நடைபயில ஆரம்பிப்பது இந்தப் புள்ளியில் தான். அதனால் இங்கு கங்கையில் குளிப்பவர்களுக்கு உடல் சுகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஒரே ஒரு காரணம் தான் இந்த இடம் செழித்து வளர்ந்து ஒரு புண்ணிய தலமானதற்கு மூல காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதற்கு அடுத்த நகரங்களில் தெரியாமல் கூட கங்கையில் குளித்து விடாதீர்கள். உங்களுக்கு எதாவது வியாதிகள் தொற்றிக் கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. இந்த ஒரே காரணத்துக்காக சிறப்புப் பெற ஆரம்பித்த இந்த கங்கையின் சமவெளிப் பகுதியில், மனிதன் காலடி எடுத்து வைத்து பல காலம் வரை சிவனும் விஷ்ணுவும் நுழையாமல் தான் இருந்திருக்கிறார்கள். இவர்கள் நுழைந்தவுடன் தான் மோட்சமும், புனித குளியலும், ஆலகால விஷமும், பாற்கடலும், வாசுகி என்னும் பாம்பு கடலைக் கடைய கயிறானதும், விஷ்ணு ஆமையானதும், அமுதமும், பிறகு கும்பமும், அதுவும், இதுவும் பின்ன அது இது, அப்புறம் இது அதுவென எல்லா கதைகளும் ஆரம்பித்தது.

இன்னொரு விஷயம். இந்தியாவிலுள்ள இந்துக் குடும்பங்களின் வம்சாவளி விவரங்கள் இங்குள்ள பிராமிண பண்டிட்களிடம் கிடைக்கிறது. பண்டைய காலங்களில் முன்னோர்களின் சாம்பலை கரைக்க எல்லா இந்துக்களும் ஹரித்துவார்க்குத்தான் வந்தார்களாம். வருபவர்களின் ஊர், விலாசம், வம்சம், இன்னும் என்னென்ன விவரங்களையெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர்கள் பதிவு செய்து விட்டு போய் விட்டார்கள். இன்று அதில் அநேகர் முகமதுகளாகவும், ராபர்ட்டாகவும், பீட்டராகவும் மாறிப் போயிருக்கலாம். இன்று இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் உடனடி சுகமளிக்கிற அற்புத ஊழியர்களும், பகுத்தறிவு பகலவன்களும் தங்கள் ஏழு தலைமுறைக்கு முந்தைய பெயர்களை தேடவேண்டுமானால் இங்கு இன்றும் தேடலாம். ஆனால் எப்படி நாடி ஜோசியம் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகிப் போனதோ அப்படியே இந்த வம்சாவளி விவரங்களை வைத்து வியாபாரம் பண்ண ஒரு கும்பல் கிளம்பியிருப்பதுதான் வேதனை.

எங்கு நோக்கினும் பூஜைகளும், மந்திரங்களும், மணியோசைகளும், ருத்திராட்ச மாலைகளும், சாம்பிராணி புகையும், கஞ்சா சாமியார்களும் கூடவே சாமியாரிணிகளும், கும்ப மேளாக்களுமென இந்நகரம் இன்னும் புராதன வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நவீனத்தின் தாக்கமும் இல்லாமலில்லை. இன்டர்நெட் பார்லர்களும், மூலிகை மசாஜ்களும், ருத்திராட்சக் கொட்டைகளின் பல்வேறு வடிவங்களும் (பஞ்சமுகி ருத்திராட்சமென ஒரு ஐட்டத்தை காட்டி ஏமாற்றிய ஒரு சாதுவிடமிருந்து தப்பித்து வருவதற்குள் டரியலாகி விட்டோம்) என வேகமாக நவீன மடைந்து வருகிறது.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.


1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.

பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.

1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.

இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.

இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.

உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.

இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:

1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?

இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?

ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?

வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?

ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

ங்கொய்யால



நாலுகாசு கையில இருந்தா பணக்காரங்கறான்,
நாலு வார்த்தை பேசிப்புட்டா மேதாவிங்கறான்,
நாலு எழுத்து சேர்த்து எழுதுனா எழுத்தாளர்ங்கறான்,
நாலு பேரு கூட நடந்தா தலைவருங்கறான்,
ங்கொய்யால
மொபைலு எத்தனை பெருசா இருந்தாலும்
சிம்கார்டு ஒரே சைசுதாண்டா.

பாகிஸ்தானா- பட்டாசுக்கடையா


எதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறமாதிரி, குண்டு வெடிச்சுகிட்டிருக்காங்க. பெஷாவர் நகரில் நகர மேயரே சிவலோக பிராப்தி அடைந்திருக்கிறார். இங்குதான் என்பது இல்லை, இதில்தான் என்பது இல்லை. காரில், பஸ்ஸில், சைக்கிளில், ராணுவ முகாமுக்கு அருகில், இன்னும் மக்கள் கூடும் இடங்கள் எல்லாவற்றிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மரணமும், ஓலங்களும், அறிக்கைகளும் த்தூ…..,

அங்குள்ள அரசியல் வியாதிகள் மக்கள் கவனத்தை திசை திருப்ப, இந்தியா தீவிரவாதிகளுக்கு துணை நின்று பாகிஸ்தானில் குண்டு வைக்கிறார்கள் என்று கத்திப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. குண்டுகள் வெடிக்கத்தான் செய்கிறது, காமன் மேன் கதறத்தான் செய்கிறான்.

இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொன்னானோ::

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்.

எங்க அய்யாமாருக பெருமைப் பட்டாக!!!!!

நிலாவுல நீர் இருக்குதாம். இந்தியந்தான் கண்டு பிடிச்சானாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா, ராசா, எங்கூருக்கு

எப்பய்யா தண்ணி கண்டு பிடிப்பீக.?



பங்குச்சந்தைல பதினேழாயிரம் புள்ளியாம்,

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக.

அய்யா, ராசா, பருப்பு தின்னு பல மாசம்

ஆச்சய்யா, பங்குச் சந்தைல பருப்பு விப்பீகளா?



எல்லாரும் எல்லாம் படிக்க சமச்சீர் கல்வி வருதாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக,

அய்யா ராசா, சமச்சீரோ, சமையாத சீரோ

படிக்க மொதல்ல பள்ளிக் கூடம் குடுங்கைய்யா?



கிரிக்கெட் போட்டியில மொத இடமாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா ராசா, விளையாட்டெல்லாம் சரிதான்யா

எங்க வாழ்கைக்கு ஒரு வழி சொல்லுங்கைய்யா

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்