திருப்பூர் புத்தகக் கண்காட்சி - பகுதி 1
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது மட்டும் ம்கிழ்ச்சி இல்லை. கண்காட்சிக்குப் போவது, அடுக்கியும், கலைத்தும் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்ப்பது, இத்துனை தலைப்புகளா???இத்துனை புத்தகங்களா??? என அதிசயிப்பது, புத்தகங்கள் வாங்கிச் செல்வோரைப் பார்த்து மகிழ்வது என ஒவ்வொரு விடயமும் மகிழ்வூட்டக் கூடியதே.
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்திருக்கிறது.ஒரு முறை பாலகுமாரனின் தீவிர வாசகனாக இருந்த போது, புத்தகக் கண்காட்சி முழுமையும் அவர் பின்னே அவர் அறியாமல் சுற்றியிருக்கிறேன். தளபதி படத்தில் ரஜினி ஸ்ரீவித்யா பின்னால் சுற்றுவாரே அதைப் போல...
பிறிதொரு முறை கி.ரா அய்யா என் சொந்த ஊர் கடலையூர் என்று சொன்னவுடன் அருகில் அமர வைத்து வாஞ்சையோடு இரண்டு நிமிடங்கள் கதைத்தார்.அவருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் இடைசெவல். ஒரு விநாடியில் ஓரூர்க்காரர்கள் ஆனோம். என் வாழ்வில் உள்ள மறக்க முடியாத நினைவுகள் பட்டியலில் எப்போதும் இவையிருக்கும்.
இம்முறை முற்றிலும் புதிய அனுபவம்.
திருப்பூரில் பாரதி புத்தகாலயமும், பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து 9 வது புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். சுமார் 100 கடைகளில் புத்தகங்களும், “கானுயிர் காப்போம்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும், மாலை நேர சிறப்பு நிகழ்வுகளும் திருப்பூர் புத்தகக் கண்காட்சி குழுவினரின் உழைப்பையும், ஆர்வத்தையும் பறைசாற்றுகின்
றன.
கண்காட்சியில் சுமார் 30 நேரடிப் பதிப்பகங்களும், சுமார் 50 புத்தக விற்பனையாளர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள். உயிர்மை, கிழக்கு, விகடன், சுரா, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளார்கள். இருந்தாலும் காலச்சுவடு, காவ்யா போன்ற பதிப்பகங்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் கேட்க முடிந்தது.
அடுத்த முறை படக்கதைக்கு என்று பிரத்யேக ஸ்டால்கள் போடவிருப்பதாக சொன்னார்கள். சுட்டி, சித்திரம், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க் என்று அடுத்தவர்களின் கற்ப்னையை பார்வையிடும் வேலைகளை மட்டுமே செய்து வரும் நம் குழந்தைகளை மீட்டு அவர்களை சுயமாகக் கற்பனை செய்யத்தூண்டும் திறனும், வாசிப்பின் ருசியை அவர்களுக்கு உணரச் செய்யும் திறனும் காமிக்ஸ்களுக்கு மட்டுமே உண்டு.
நாம் வாழும் வாழ்க்கையை பிழைப்பிற்காக வாழும் தொழில்வாழ்க்கை (Professional), நமக்காக வாழும் சுயவாழ்க்கை(Personal), சமூகத்திற்காக வாழும் சமூக வாழ்க்கை (Social) என்று மூன்றாகப் பிரித்துக் கொண்டோமேயானால் மூன்றையும் மேம்படுத்த உதவுவது புத்தகங்கள் மட்டுமே.
திருப்பூர் போன்ற தொழில் நெருக்கடி மிகுந்த நகரகங்களிலும் புத்தகங்களைத் தேடி குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் விற்பனை ஆகும் பெரும்பான்மைப் புத்தகங்கள் சமையல் குறிப்பு, சுயமுன்னேற்றப் புத்தகங்கள் தான் என்று கேள்விப் படும் போது சற்று வருத்தமாகவும் உள்ளது. இதையும் தாண்டி நம் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கும் புத்தகங்கள் நிறைய உள்ளன என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும்.
இது தவிர திருப்பூர் இணையக் குழுமமான ”சேர்தளம்” வரவேற்புக் குழுவுடன் இணைந்து அன்றாட நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றி வருகிறது. பார்வையாளர்களாக இருந்த எங்களைப் பங்கேற்பாளர்களாகவும் மாற்றியிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி.
ஒவ்வொரு நாளும் மாலையில் நண்பர்கள் கூடுவதும், கண்காட்சியை சுற்றி வருவதும்,திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 என்ற வலைப்பதிவுக்காக வாசகர்களையும், பதிப்பாளர்களையும் பேட்டி எடுப்பதுமாக இனிமையாக நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.
புத்தகங்கள் நல்ல நண்பர்களுக்கு ஒப்பானவை என்பது மட்டுமில்லாமல் நல்ல நண்பர்கள் புத்தகங்களுக்கு ஒப்பானவர்கள் என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012.
No comments:
Post a Comment
Thank You...