மனித இனத்திற்கு விரோதியாக, மதத்தின் பெயரால் அப்பாவி
மக்களை கொன்று குவிப்பதும் ஒரு தெய்வீக செயலே என நியாயங்கள் கற்பித்து,
தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மேம்பாட்டுக்கென பாடுபட்டு வியர்வை சிந்த
வேண்டிய இளசுகளின் மொத்த மன மற்றும் மனித வளத்தை தீவிர வாத நோக்கத்துக்காக
திசை திருப்பி ரத்த ஆறு ஓட வைத்த மகானுபாவர்களின் மரணம் கூட மாபெரும்
தியாகமாக திரிக்கப்படும் அவலத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே.
அப்படியானால் அவனை கொன்றவன் யோக்கியனா என்ற விவாதத்திற்கு சொம்பு தூக்கிக்
கொண்டு வரும் புள்ளி விவர புலிகளிடமிருந்தும் எங்களை காப்பாற்றுங்கள்
பிதாவே.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
டாஸ்மாக்
என்னும் சுனையிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நதிப் பிரவாகத்தில்
குளித்து, திளைத்து நீந்திக் கரையேறி, இலவச தொலைக்காட்சி பார்த்து விட்டு,
ஒரு ரூபாய் அரிசியில் பொங்கித்தின்று, பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இலவச
சேலையும், வேட்டியும் வாங்கி உடுத்தி மகிழ்ந்து, மாதம் மும்மாரி வேண்டாம்,
பெய்கிற ஒரே மாரியில் வெள்ளக் காடுகளுக்குள் தீவு வாழ்க்கை வாழ்வதைக்
கண்டு, மனம் இளகி ஆளும் ஆண்டவக் குடும்பம் தரும் வெள்ள நிவாரண நிதிகளுக்கென
கையேந்தி நின்று என நாங்கள் வாழும் பிச்சைக்கார வாழ்க்கை போதும் பிதாவே.
வரும் 13ம் தேதிக்கு மேல் புதிதாக வரும் ஆட்சியாளர்களாவது மேலும் இலவசங்கள்
தந்து எங்களை மேலும் பிச்சைக்காரர்களாக்காமல் காத்தருளுங்கள் பிதாவே.
வெள்ள நிவாரணம் தருவதை விட வெள்ளத்தை வடிந்தோடச் செய்ய ஒரு நிரந்தர
வடிகாலாவது கட்டச்சொல்லுங்கள் பிதாவே.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆமாம்,
ஒவ்வொரு வருடம் போலவே இந்த வருடமும் வெய்யில் கொடுமை உக்கிரமாக உள்ளது.
ஆனால், ஒவ்வொரு கோடை காலத்திலும், ”கோடையில் குளுகுளுவென இருப்பது
எப்படி??” என ஒவ்வொரு ஊடகத்திலும் தொடை தெரிய உடையணிந்து ” நான் வெள்ளரி
பழத்தில் உள்ளாடை அணிவேன், தர்ப்பூசணியை தலையில் கவிழ்ப்பேன், பசலைக்கீரையை
பால் போல் குடிப்பேன், பச்சை மிளகாயால் பல் விளக்குவேன் ” என அருவருக்கும்
பேட்டி கொடுக்கும் நடிகைகளிடம் இருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.
இது
போதாதென்று “ வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிப்பது எப்படி??” என கேள்வி
மட்டும் கேட்பதோடு நிற்காமல் அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு முப்பது லிட்டர்
தண்ணீர் குடியுங்கள், நாற்பது முறை தலைக்கு குளியுங்கள், கண்ணை
மூடிக்கொண்டு சாலையில் நடவுங்கள், காதின் வழியாக சுவாசம் செய்யுங்கள்,
வாழைநாரில் ஆடை அணியுங்கள், புளியம் பூவின் பொரியல் சாப்பிடுங்கள் என
சகட்டு மேனிக்கு அறிவுரை சொல்லி ஈ மெயில் அனுப்பும் நாதாரி
நண்பர்களிடமிருந்து எங்களை காத்தருள்வீர் பிதாவே …
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒவ்வொரு
வருடமும் தவறாது வருகைதரும் வைகாசித் திருவிழாப் போல, ஒவ்வொரு முறையும்
பெருவாரி இந்தியனின் நேரத்தையும் பணத்தையும் கொள்ளையடித்து, எங்களையெல்லாம்
கூத்தாடிகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு எங்களை ஆக்கிரமித்து நிற்கும் இந்த
IPL என்னும் கொடிய நோயின் வீரியத்திலிருந்து எங்களை உடனடியாக
காப்பாற்றுங்கள் பிதாவே…
No comments:
Post a Comment
Thank You...