Thursday, 24 May 2012

நான் நிறுத்தீட்டேன், நீங்க........

தினமும் காலையில கணினிக்கு உயிரூட்டி, வந்திருக்கிற மின் அஞ்சல்களுக்கெல்லாம் பதில் சொல்லீட்டு, ஆணி புடுங்க ஆரம்பிச்சு, ஒரு 10 மணி வாக்குல, பதிவுலகத்துல பூந்து, நமக்கு புடிச்ச கடைகளுக்கெல்லாம் போய் புதுசா எதாவது வந்திருக்கான்னு ஒரு தரம் பார்த்துட்டு, அப்படியே பின்னூட்டமும் போட்டுட்டு வந்துருவேன். ஆனா ஒரு சிலர் அப்பத்தான் கடையில புது சரக்கு இறக்கியிருப்பாங்க, பின்னூட்ட பொட்டியில இன்னும் கணக்கே ஆரம்பிச்சிருக்காது. அங்க போயி பதிவ கிண்டல் ப்ண்ணியோ, பாராட்டியோ, அல்லது மேற்கோள் காட்டி கருத்து சொல்லியோ பின்னூட்டம் போட்டுட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் போடறதுல ஒரு சிக்கல் இருக்குது. முதல் பின்னூட்டம் டெம்பிளேட் பின்னூட்டமா, “கலக்கல்”, “அசத்திட்டீங்க,” “ரசித்தேன்”, அப்படீன்னு எழுதுனாலோ, அல்லது கிண்டல் பண்ணி எழுதுனாலோ நிறைய விபரீதம் இருக்குது. அதாவது முதல் பின்னூட்டம் எந்த தோரணையில இருக்குதோ அதே மாதிரித்தான் அனைத்து பதிவர்களின் பார்வையும் இருக்கும்னு ஒரு சில பதிவர்கள் நினைக்கறாங்க. ஒரு பதிவு போடறதுக்கு அவனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி மேட்டர் தேத்தி பதிவு போடறாங்க, அதப் போயி முதல் முதலா கருத்து சொல்றேன்னு சொல்லி எதுக்கு பொழிக்கணும்னு தான் நான் முதல் பின்னூட்டம் போடறத நிறுத்தீட்டேன்.

***************************************************************************
1995ம் வருஷம், ராஜஸ்தானின் பில்வாடா பகுதியில் இருக்கும் சிரோஹி மாவட்டத்தில் வேலை செஞ்சுகிட்டிருந்தேன். எங்க ஆபீஸுக்கு கூட்டி பெருக்கவும், தேநீர் கொடுக்கவும் ஒரு பொண்ணு வேலைக்கு வருவா, ராஜஸ்தானி பழங்குடியினருக்கே உள்ள அந்த சிவப்பு நிறமும், மூக்கும் முழியுமா உள்ள ஒரு பதினஞ்சு வயசு வாலிப பொண்ணு. பக்கத்து கிராமத்துல இருந்து தினமும் வந்த அந்த பொண்ணோட அண்ணன் எங்களுக்கு டிரைவரா இருந்தான். ஒரு நாள் நான் தங்கியிருநத வீட்டுல இருந்து காலையில வேலைக்கு போறதுக்கு சைக்கிள எடுத்துட்டு கிளம்பி கொஞ்சம் தூரம் போனா, வேலைக்கு போக வேண்டிய எல்லாரும் கம்பெனில உள்ள காலனியில ஒரு நாலு ரோடு சந்திக்கற இடத்துல கும்பலா நிக்கறாங்க. என்னனு பார்த்தா, எங்க ஆபீஸ்ல வேலை செய்யற பொண்ணு இடுப்புக்கு மேல ஒரு பொட்டு துணியில்லாம கையை ரெண்டையும் நெஞ்சுக்கு குறுக்க கட்டிகிட்டு, குத்த வெச்சு உக்கார்ந்து, பாவாடையால நெஞ்ச மூட முயற்ச்சி பண்ணிகிட்டிருக்கா, கன்னத்துலயும், முழங்கையிலயும் சிராய்ப்புக் காயம் பட்டு ரத்தம் கசியுது, உதட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன வெட்டுக்காயம். காலையில வேலைக்கு போற அத்தன பேரும் சைக்கிள நிறுத்திகிட்டு அவ வெற்றுடம்பை வேடிக்கை பாக்கறாங்க. ஒருத்தரும் அவளுக்கு உதவ முன்வரல. நான் போய் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு, பக்கத்து வீட்டு பையனோட சைக்கிள்ல பின்னால உக்காந்துட்டு வேலைக்கு வந்ததாகவும், அவன் சைக்கிள்ல துப்பட்டா மாட்டி, துப்பட்டாவோட சேர்ந்து சோளியும் சக்கரத்துல சுத்தி கிட்டதாகவும், தான் கீழ விழுந்து எல்லாம் காயமாகிவிட்டதாகவும் சொன்னா. (ராஜஸ்தான்ல பில்வாடா பகுதி ஆதி வாசி பெண்கள் இடுப்புக்கு மேல உள்ளாடை எதுவும் அணிய மாட்டார்கள், சோளி அதுவும் உடலின் முன்னே மார்புகளை மாத்திரம் தான் மறைக்குமே தவிர, முதுகு பக்கத்தில் வெறும் இரண்டு கயிறுகளைக் கொண்டு முடிச்சுகள் மாத்திரம் தான் இருக்கும். துப்பட்டா சரிந்து விடாமலிருக்க அதன் ஒரு நுனியை சோளியுடன் சேர்த்து, பின்னூசியால் குத்தியோ அல்லது முடிந்தோ வைத்திருப்பார்கள். சைக்கிள் சக்கரத்தில் சுற்றிய வேகத்தில் துப்பட்டா சோளியையும் கிழித்துக் கொண்டு போய் விட்டது). அத்தனை ஆண்கள் மத்தியில் வெற்றுடம்புடன் நிற்கிறோமே என்ற அவமானம் ஒருபுறம், கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களின் வலி ஒருபுறமுமாக அந்தப் பெண் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாள். கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு வழியுது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வந்தது, வெற்றுடம்புடன் உக்கார்ந்திருந்த அவளிடம் சென்று, பரபரவென என் சட்டையை கழற்றி அவளுக்கு கொடுத்து விட்டு, அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அவளின் அண்ணனிடம், ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ என சொல்லிவிட்டு, பனியனுடன், மறுபடியும் வீட்டுக்கு வந்து வேறு சட்டை அணிந்து வேலைக்கு போனேன். என்னை பனியனில் பார்த்த அனைவரும் என்ன செய்தி என கேட்டனர், விஷயத்தை சொன்னவுடன், கதை வேறு விதமாக திரிக்கப்பட்டு எனக்கும் அவளுக்கும் ஒரு இது என நான் வேலை செய்த இடத்தில் பேசப் பட்டது. அதனால இப்படி அதிரடியா களத்துல இறங்குறத அன்னைல இருந்து நிறுத்தீட்டேன்……..

**************************************************************************
ஒரு நாள் கிழக்கு கடற்கரை சாலையில மனைவி, மகளுடன் கார்ல போகும் போது, அப்பத்தான் தென் ஆப்பிரிக்க வாசம் முடிந்து வந்ததால, அங்க கார் ஓட்டுன பழக்க தோசத்துல, ரோடு நல்லாருக்குதேன்னு நினைச்சுகிட்டே, ஒரு அழுத்து அழுத்த, அந்த தக்ஷின் சித்ராவுக்கு பக்கத்துலன்னு நினைக்குறேன். ஒரு காவல நண்பர், குழாய் மாதிரி என்னத்தையோ ஒண்ணை கையில புடிச்சுகிட்டு என்னையே உத்துப் பாக்கறது தெரிஞ்சுது. அவுருக்கு பக்கத்துல ஒரு அதிகாரி பைக்குல உக்கார்ந்துகிட்டு பேப்பர் படிச்சுகிட்டிருக்காரு, ஒரு ஜீப்பு வேற நிக்குது. ஆஹா, மாட்டிகிட்டமடான்னு வேகத்தை குறைக்கறதுக்குள்ள அவுரு கையைக் காட்ட, வண்டிய சரியா அவுரு கிட்டவே நிறுத்தினேன். கைய காமிச்சவரு சுத்தி வர்றதுக்கும், நான் கண்ணாடிய இறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு, என்னப் பார்த்தவரு, என்ன ஏதுன்னு கூட கேக்காம, ஒரு வினாடி என்னை ஏற இறஞ்க பார்த்துட்டு, “என்ன சார், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படி பண்ணா எப்படி சார், கொஞ்சம் மெதுவா போங்க சார்” னு சொல்லீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் அடுத்த வண்டிய பார்க்க கிளம்பீட்டார். என்ன நடந்ததுன்னே தெரியல, நானும் வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சுது, அன்னைக்கு காலைல தான் தலை முடி வெட்டுனப்ப நல்லா குறைச்சு வெட்டுப்பான்னு சொல்லி நறுக்குன்னு வெட்டியிருந்தேன். நம்ம சிகைஅலங்காரத்தப் பார்த்துதான் அவரு டிப்பார்ட்மெண்ட் ஆளுன்னு நெனச்சுட்டாருங்கறது புரிஞ்சதுக்கப்புறம், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களாட்டம் முடி வெட்டிக்கறத நிறுத்தீட்டேன்……..

No comments:

Post a Comment

Thank You...