பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை நாடுகளிலும் சரி, இந்த எண் முடிந்த வரை தவிர்க்கப் பட்டிருக்கிறது. தங்கும் விடுதிகளில் 13ம் எண் அறை இருக்காது. வீதிகளை அல்லது வீடுகளை வரிசைப் படுத்தும் பொழுது கூட 13ம் எண் வீதியோ, வீடோ இருந்ததில்லை. அதிலும் மாதத்தின் பதிமூன்றாம் நாள் வெள்ளிக் கிழமையாக இருந்து விட்டால், அது மிகவும் துரதிஷ்டம் கொண்ட நாளாக கருதப் படுகிறது. முற்போக்கு சிந்தனைகளில் நாங்கள் எல்லோரையும் முந்தியவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் மேலை நாடுகளில் கூட இந்த மூடப் பழக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழே நடப்பது, வீட்டில் கண்ணாடி உடைவது போன்றவை இன்னும் ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வாகவே இங்கு கருதப் படுகிறது.
கணக்கியலின் படி பன்னிரண்டு என்பது ஒரு முழுமையான எண்ணாகவே இதுவரை கருதப் படுகிறது. உலக நாகரிகமே இங்கிருந்து தான் தோன்றியது என சொல்லப்படும் மெசபொடோமிய சமவெளிகளில் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்த நம்பிக்கை தொடர்கிறது. இஸ்ரவேலர்களின் அதாவது யூதர்களின் பன்னிரண்டு கோத்திரங்கள், இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்கள், ஒரு கடிகாரத்தில் பன்னிரண்டு மணிக்கான சுழற்சி முறைகள், கிரக்க கடவுளர் பன்னிரண்டு பேர் என பட்டியலிட ஏராளம் தகவல்கள் உள்ளன. பதிமூன்று என்பது பன்னிரண்டிலிருக்கும் சமவிகித வகுபடும் தன்மையை குலைக்கும் ஒரு எண் என்பதால் இயல்பாகவே இது கணக்கியலாளர்களால் வெறுக்கப்பட்டது.
இந்தியாவில் இந்த வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதி ஒரு அபசகுனமாக கருதப் படுவதில்லை எனவே நான் நினைக்கிறேன். ஆனாலும் நாம் பெருவாரியாக பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரின் படி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 13ம் தேதி வெள்ளிக் கிழமைதான் வரும். ஒரு சில வருடங்களில் இப்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட வருவதுண்டு. ஆனால், பெருவாரியாக வருடத்தில் ஒரு மாதம் கண்டிப்பாக வெள்ளிக் கிழமை பதிமூன்றாவது தேதியாக இருக்கும்.
இந்த மூட நம்பிக்கை எவ்வாறு வளர்ந்தது என்று ஆராய்ந்தால் பல சுவராஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்து இதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்கிறார்கள். இன்றும் இந்த கடைசி விருந்தின் படங்களில் பார்த்தீர்களென்றால், இயேகிறிஸ்துவோடு சேர்ந்து பன்னிரண்டு சீடர்களுமாக பதிமூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். அப்படி அமர்ந்து அவர்கள் சாப்பிட்டது ஒரு வியாழக்கிழமை இரவு. இப்படி பதிமூன்று பேர் ஒன்று கூடி சாப்பிட்டபின், அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று பதிமூன்றாவது நபரான இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப் பட்டார் என்பதினால் இதை துரதிஷ்டமாக கருதி வந்திருக்கிறார்கள்.
காலச் சக்கரத்தை கொஞ்சம் டாப் கியரில் போட்டு ஒரு பத்து நூற்றாண்டுகள் கடந்து வந்தோமெனில், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதம் எனும் ஆன்மீக தத்துவம் ஐரோப்பிய உலகத்தின் ஆன்மீக பசிக்கு சுவையான தீனியாகிப் போன பொழுது, புனிதர்களின் அணிவகுப்புகள் ஐரோப்பாவெங்கும் தொடங்கியது, இயேசு கிறிஸ்துவின் சீடர்களோ அல்லது கிறிஸ்தவ மதத்தின் பெயரால் சமுதாயத்தில் நற்பெயரெடுக்கும் எந்த மனிதனும் புனிதனாக கருதப்பட்டான். கிரேக்க கடவுளர்களின் பழைய புராணங்களையே கேட்டு காது புளித்துப் போன ஐரோப்பியர்களுக்கு, இந்த புது வரவு ஒரு கவர்ச்சியை கொடுத்தது. எப்பொழுதுமே புனிதர்கள் என்றால் அவர்களுக்கென ஒரு தல புராணம் இருக்க வேண்டுமல்லவா, அப்படி ரிஷி மூலம் பார்த்ததில், பெருவாரியான புனிதர்கள் பிறந்த எபிரேய பூமி, (இன்றைய எருசலேமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும்) ஒரு புனித தலம் எனும் அந்தஸ்த்தை பெற்றது.
அவ்வளவுதான், எம்பெருமானின் திருவருளால் புனித யாத்திரைகள் தொடங்கி விட்டன. முதலில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த யாத்திரைகள், பிற்பாடு ஒரு கௌரவ சின்னமாக பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இப்படி வந்த யாத்ரீகர்களிடத்தில் காணப்பட்ட பணமும் நகையும் கொள்ளைக்காரர்களின் கண்களில் பட, சுலப வேட்டையாக வழிப்பறியும், அதற்கான கொலை ஒரு இலவச இணைப்பாகவும், அதற்கடுத்த கற்பழிப்பு ஒரு கிளுகிளு அன்பளிப்பாகவும் மாறிப்போனது. இந்த தொந்தரவுகளினால் புனித தலங்களிலும் , யாத்ரீகர்களின் வழியெங்கும் தேங்காயும், சூடமும், திருநீறும் விற்ற புனித வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடவே, அவர்கள் இதற்கென ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கினார்கள். இந்தப் படையிலிருந்த வீரப் பெருந்தகைகள் (Knights Templer என்பதற்கு கூகிளாண்டவர் இந்த தமிழ்ப் பெயரைத்தான் தருகிறார்) யாத்ரீகர்களுக்கு வழிப்பறியிலிருந்து பாதுகாப்பு கொடுப்பதில் பெருமளவு வெற்றி பெற்றார்கள்.
காலப் போக்கில் இந்த பெருந்தகைகள் ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து, யாத்ரீகர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் சொத்துக்களை இவர்களிடம் ஒப்படைத்து விட்டு அதற்கான பிரமாண பத்திரங்களுடன் தங்கள் யாத்திரையை தொடங்கலாமென்றும், வழியில் செலவுக்கு வேண்டுமென்கிற இடத்தில் இந்த பத்திரங்களை காட்டி அதற்கென உள்ள அலுவலகங்களில் காட்டி பணம் பெற்றுக் கொள்ளலாமென்றும் ஒரு ப்ரீ பெய்டு சிஸ்டம் உருவாகினார்கள். மடியில் கனமில்லாமல் யாத்திரை செல்ல இது ஒரு சிறந்த வழியாயிருக்கவே, மக்களின் அமோக ஆதரவு இவர்களுக்கு கிடைத்தது. ஆனால் யாத்திரை போனவர்களில் பலர் திரும்பாமல் போனதினாலும், திரும்பி வந்த பலரின் சொத்துக்களுக்கு பராமரிப்பு செலவு என கணிசமான தொகை வசூலித்ததாலும், பெருந்தகைகள் பணத்தால் கொழுத்தார்கள். குளித்தார்கள்.
இந்த பெருந்தகைகளின் வீரமிகு செயல்களால் பல அரசர்களும் இவர்களை தங்களுக்கென உபயோகித்தது ஒரு கிளைக்கதை. பதினாலாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பரம வைரியாய் இருந்து நாளொரு சண்டையும் பொழுதொரு பஞ்சாயத்துமாக அரசாண்ட பிரஞ்சு மன்னன் நான்காம் பிலிப்பு, இவர்களுக்கு ஏடாகூடமாக கடன் பாக்கி செலுத்த வேண்டியுருந்தது. ஒரு பக்கம் பெருந்தகைகள் பணத்துக்காக நெருக்கடி தர, மறுபக்கம் திறமையில்லாத ஆட்சியாலும் திட்டங்களில்லாத போர்களாலும் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு போய் விட, நான்காம் பிலிப்பு ஒரு வஞ்சக திட்டம் தீட்டினான். இந்த பெருந்தகைகளையெல்லாம் சுவடில்லாமல் துடைத்து விட்டால் தன் சுமை பெருமளவில் குறையும் என்பதற்காக, அப்போதைய போப் ஆண்டவர் ஐந்தாம் கிளமெண்டையும் சரிக்கட்டினான். பெருந்தகைகள் மதம் மற்றும் தேச துரோகிகள் என குற்றம் சாட்டி அனைவரையும் கழுவிலேற்றி, தீயிலிட்டு என பல வகைகளிலும் கொல்லும்படி போப்பின் முத்திரை பெற்ற கடிதங்களை வெளியிட்டான். பெருந்தகைகள் பணத்திமிரில் சிலுவையின் மேல் துப்பினார்கள், சிலுவையை மிதித்தார்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதோடல்லாமல் இளைஞர்களை இந்த பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார்கள், கிறிஸ்துவை இகழ்கிறார்கள் என பல பொய்குற்றங்களையும் அதற்கான பொய் சாட்சிகளையும் மிக கவனமாக ஏற்படுத்தினான்.
குற்றம் (பொய்) சாட்சியோடு நிரூபிக்கப்படவே மக்களும் நடுநிலை வகித்து விட்டார்கள். பெருந்தகைகளுக்கு ஆதரவில்லாமல் போனதால், அவர்களை தீயிலிட்டுக் கொளுத்துவது எளிதாகப் போயிற்று. பின்னாளில் மன்னனின் வஞ்சக திட்டம் வெளிப்பட்டதென்பது வேறு கதை. இப்படி இந்த பெருந்தகைகளை அழிக்கும் ஆணை வெளியிடப்பட்டது 1307 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை. பின்னாளில் பெருந்தகைகளின் தயாள குணமும், வீரமும், மன்னனின் வஞ்சகமும் மக்களுக்கு தெரிய வந்தபின் அவர்களது மரணத்தை தியாகமெனவும், அந்த அழித்தொழிப்பு நாளை துக்கமும் துயரமும், துரதிஷ்ட வசமான நாளாகவும் கருத ஆரம்பித்ததின் விளைவே இந்த வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதி, அபசகுனமெனும் மூட நம்பிக்கை. இன்னும் இதற்கு பலம் சேர்க்கும் பல நம்பிக்கைக்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நிகழ்ந்தது, நிகழ்கிறது, நிகழப் போகிறது….
இதோ தமிழ்நாட்டிலும் நாளை ஒரு வெள்ளிக்கிழமை, பதிமூன்றாம் தேதி, மிகவும் துரதிஷ்டவசமான நாளாக இருக்கப் போகிறது, ஆமாம் நாளைக்குத்தான் தேர்தல் முடிவுகள் வரப் போகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த கும்பல் நம்மை கொள்ளையடிக்கப் போகிறது, என்னென்ன இலவசங்களால் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டு, மறுபடியும் ஒரு முறை இலவசங்களுக்காக கையேந்தி பிச்சைக்காரர்களாகப் போகிறோமோ தெரியவில்லை,
ஐயா, பெருந்தகைகளே எங்கே போனீர்கள், விரைந்து வாருங்கள், அரக்கர்கள் அழிந்து விட்டால், அசோகவனத்தில் அனுமன் கூட அழகு பருக மட்டுமே வருவான். அழிய வேண்டியது அரக்கர்கள் தான், அசோக வனமல்ல.
No comments:
Post a Comment
Thank You...