Thursday, 24 May 2012

நம் வீட்டில் நமக்கு தெரியாதது !



நம் வீட்டில் நாம் இருக்கிறோம், நம்முடைய பொருள்கள் இருக்கிறது. கூடவே கரப்பான் பூச்சிகள், பல்லிகள் வசிக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் நாம் நம் வீட்டில் வசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

சில சமயம் நம் வீட்டில் உள்ளவர்களை (பொருட்கள்) உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நகையும், பணமும் வைத்திருக்கும் இடம் மட்டும் நன்றாக தெரிந்து இருக்கும். மற்றவைகள் இருக்கும் என்பது தெரியும் ஆனால் தேடினாலும் சமயத்திற்கு கிடைக்காது.

அவசரத்துக்கு தொலைபேசி எண் குறித்து வைக்க ஒரு பேனா தென்படுவதே பெரிய விசயம், மற்றவைகளை சொல்லவும் வேண்டுமா ?

சில பொருள்கள் வீட்டில் இருந்தாலும் அதன் இருப்பை அறியாமல் பாதுகாப்பாக எங்கோ இருப்பதால், இரண்டாவது முறையாக வாங்கி வரும் நிலைமை ஏற்பட்டுவிடுவது பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் நடப்பதே.

அந்த அந்த அறையில் இருக்க வேண்டிய பொருள்கள் பெரும்பாலும் இடம் மாறியே இருக்கும், சமையல் அறையில் இருக்கும் பாலித்தீன் பையை வெட்டும் கத்திரி என்றோ செய்தித் தாள் வெட்டச் சென்றது திரும்பாது. அடுத்த நாளோ வேறு நாளோ தேவைப்படும் போது தான் அதன் ஞாபகம் வரும். தேடி எடுப்பதில் நேரவிரயம், தேவையில்லாத டென்சன் இவைதான் மிஞ்சும்.

நம் வீடு நம்முடைய பொருள்களுக்கான இடம் ஆனால் இவைகள் எங்கு எங்கு இருக்கிறது என்று நமக்கே தெரியாமல் இருப்பது பெரும் கவனக் குறைவு. இவற்றை சரி செய்யமுடியும். வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்கு படுத்துவது / பராமரிப்பது நமக்கு பயன் தரும்.

எனக்கு தெரிந்த சில நடைமுறைகளை பட்டியல் இடுகிறேன்

1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம்.

2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம்.

3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும்.

4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன்.

5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும்.

6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது.

7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம்.

9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.

பின்குறிப்பு: வீட்டுக்குறிப்பு எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து எழுதிவிட்டேன். படிக்கும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த வீட்டு பராமரிப்பு குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

No comments:

Post a Comment

Thank You...