Thursday, 24 May 2012

பொறுப்பு !



காதை செவிடாக்கும் பெரும் வெடிச்சத்தம்,
கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள்,
இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி,
இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள்,
உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி,
இரத்தத்தில் நினைந்த நயிந்த மேலாடைகள்,
வெட்டி தூக்கி எறியப்பட்டதுபோல்
எட்டடி தாண்டி விழுந்த கால்கள்,
வெளியுலகை சரிந்தபடி,
எட்டிபார்க்கும் பெருங்குடல்கள்,
பாதி எரிந்து,
இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள்,
சிதறிய காலணிகள் !
பிளந்து விரிந்த மார்பின் வழியாக
இயற்கை காற்றை சுவாசிக்க முனைந்து
தோற்ற இதயங்கள் !
கடைசியாய் உலகை கேள்வியுடன்,
கேலியாய் பார்த்தபடி அடங்கிய கண்கள் !
இந்த பரபரப்புகள் அடங்குமுன்,
பூமியில் இரத்தம் காயும்முன்,
அங்க அடையாளம் காணும்முன்,
துப்பு துலங்கவில்லை என்று கூறி
பாதுகாப்புத்துறை கைவிறித்து விடக்கூடாது,
என்பதில் அக்கறைகொண்டு,
இப்பொழுதெல்லாம், பொறுப்புடன்
நடந்து கொள்கிறார்கள்,
தீவிரவாதக் குழுக்கள் !
சலனப்படாமல், சத்தமாக உடனே
சொல்லி விடுகிறார்கள்,
தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் !

No comments:

Post a Comment

Thank You...