Thursday, 24 May 2012

தன்மதிப்பும் மற்றும் அடுத்தவரைப் பற்றிய மதிப்பும் !

பெரியார் சொல்லும் சுயமரியாதைப் பற்றியது அல்ல. அது வேறு தன்மானம் தாக்கப்படுவதைப் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியது அது. எனக்கு பெரியார் சொல்லும் சுயமரியாதையில் அந்த அளவுக்கு ஈர்ப்பு கிடையாது. பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களிடம் மரியாதையை சூழல் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கும் மாறாக தெரியாத ஒருவர் நம்மைப் பற்றி மிகவும் ஆபாசமாக பேசிவிட்டால் அவருடன் எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றால் சட்டை செய்யாமல் சென்று விடுவதே நல்லது. எதிர்வினை ஆற்றுவதால் பயனில்லை.

எனக்கிருக்கும் பழக்கம் நண்பர்களுடன் நெருக்கமானால் அழைப்பை ஒருமைக்கு மாற்றிக் கொள்வது, அவர்களிடம் விண்ணப்பம் வைத்துவிட்டுதான் அதைச் செய்வேன், முன்பு சென்னையில் ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றியவர் நால்வர், அவர்கள் நால்வரும் என் வயதில் 1 அதிகம் அல்லது 1 குறைவாகவே இருந்தார்கள், அவர்களுடன் பழகிய 10 நாட்களுக்கும் அவர்களை ஒருமையில் 'வாடா..போடா' என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர்களும் என்னை அவ்வாறே அழைத்தார்கள். இதில் கவனிக்கதக்கது என்னவேன்றால் அந்த நால்வரும் என்னைத் தவிர அவர்களுக்குள் ஒருமை விளிப்பை செய்யவில்லை, பெயரைச் சொல்லி 'என்னங்க' 'சொல்லுங்க' என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஒத்தவயதினர். நானும் கேட்டுப்பார்த்தேன், எல்லோருமே நெருக்கமாகத்தான் உணருகிறோம், இருந்தாலும் ஒருமை விளிப்பு கூச்சமாகவே இருக்கிறது என்றார்கள்.

ஒருமை விளிப்பு மதிப்பு கொடுக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு நாம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது, நன்கு தெரிந்தவர்கள் நம்மை ஒருமையில் அழைக்கும் போது இருவருக்கிடையேயான உரிமை, பிணைப்பு என்று தானே அதைச் சொல்ல முடியும், தெரியாத ஒருவர் அல்லது வேண்டுமென்றே நம்மை ஒருமையில் அழைத்தால் அது அங்கே மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது, அழைக்கும் முறை ஒன்றுதான், அழைக்கப்படும் நபர்களின் நோக்கம், நெருக்கம் பொருத்தே ஒருமை விளிப்புகள் பொருள் கொள்ளப்படுகின்றன. உள்நோக்கத்தோடு அவ்வாறு அழைப்பவர்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. பதிலுக்கு பதில் நாமும் அவ்வாறு செய்தால் அவர்கள் சொல்லுவதை நாம் மறைமுகமாக ஏற்கிறோம் என்றே பொருள்.

சிறுவயதில் என் பெற்றோர்கள் குறிப்பாக அம்மா என்னை வா போ என்று தான் அழைப்பார்கள், பிறகு 'வாப்பா' 'போப்பா' என்று மாற்றிக் கொண்டார்கள், பிடிக்கவில்லை, வா போ என்றே அழையுங்கள் என்று சொன்னேன். எங்கள் இல்லத்தில் அம்மா அப்பா தவிர அனைவரையும் எங்களுக்குள் உடன்பிறந்தோரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதுதான் வழக்கம், அண்ணன் என்றால் வா போ ஆனால் வாடா போடா வுக்கு பழகிக் கொள்ளவில்லை, இளைய உடன்பிறப்புகளிடம் கூடவே வாடா போடா என்ற டாவும் இருக்கும், சகோதரிகளை வா போ என்று அழைப்போம் ஆனால் அவள் இவள் வாடி போடி என்று சொன்னது கிடையாது, பெண் குழந்தைகளை எங்களின் உறவினர்களில் அப்பாக்கள் கூட அவள் இவள் டி போட்டு என்று அழைக்க தயக்கம் காட்டுவார்கள், பெண் குழந்தைகளை வாம்மா போம்மா என்பார்கள், மகன்களுக்கு வாடா போடா உண்டு. நான் என் மகளை அழைக்கும் போது வாடி போடி என்று சொல்வதுண்டு, வா போ என்று அஃறிணையில் பெண்குழந்தையை சொல்வதைவிட 'டி' போட்டு அழைப்பது சரியென்றே படுகிறது.

இல்ல உறவுகளைத் தாண்டி நண்பர் வட்டத்தில் மிகவும் நெருக்கமானவர்களை உறவின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்துவிடுவேன். அப்பா வயதுடைய நண்பர்களின் அப்பாக்களை அப்பா என்று தான் அழைத்தே வந்திருக்கிறேன். தமிழ் சமூகத்தில் அம்மா வயதுடைய எந்த பெண்ணையும் அம்மா என்று தயங்காமல் அழைப்பது போன்று அப்பாக்களுக்கு அந்த மரியாதைக் கிடைப்பதில்லை. காரணம் எவருடைய குழந்தைக்கும் பால் சுரக்கும் அம்மாவால் பாலுட்ட முடியும், அந்த ஒரு உணர்வு பூர்வ அடிப்படை தகுதி அப்பாக்களுக்கு கிடையாது, அப்படியும் நெருங்கிய ஒருவரை அப்பாவென்று அழைக்க முடியாமல் போவதற்கு காரணம், தனது தாயுடன் தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்கும் கிழான மனநிலையே காரணம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்கள் அனைவருமே அடுத்தவரின் அப்பாவை அப்பா என்றே தயங்காமல் அழைத்தனர். அம்மா அப்பாவின் வயதை ஒத்தவர்களை தாரளமாக அதே உறவின் பெயரில் அழைக்கலாம், நம் அம்மாவின் வயது ஒத்த பெண்களை அம்மா என்று அழைப்பதற்குத் தயக்கம் காட்டாத பலரும், நம் தந்தையின் வயதுடைய ஆண்களை அப்படி அழைப்பதற்கு ஏனோ தயங்குகிறார்கள், ஆண்களை அவ்வாறு 'அப்பா' என்று அழைக்கத் தயங்குவதற்கு, யார் வேண்டுமானாலும் அம்மாவாக இருக்காலாம், ஆனால் அப்பா என்று அழைத்தால் அது பிறப்புடன் தொடர்புடையர் மட்டுமே என்று நினைப்பது ஆண்களை உயர்வுபடுத்துவதாக பொருளா ? பிறரால் அம்மா என்று அழைக்கப்படும் போது எந்த பெண்ணும் அதை உயர்வாகவே நினைக்கிறாள், சமூக பொதுச் சிந்தனையால் ஆண்களுக்கு அத்தகைய உயர்வு கிடைக்காமல் போனது இல்லாதது குறைதான். அவ்வாறில்லாமல் பிறரால் அப்பா என்று அழைக்கப்படும் ஆண்கள் அதை தனது குணநலனுக்கு கிடைத்த உயர்வாக நினைத்து மகிழ்கிறார்கள் என்பது பலருக்கு தெரியவில்லை

வலைப்பதிவு நண்பர்களிடம் நட்பு என்பதைத் தாண்டிய நெருக்கமாக நினைத்து ஒரு சில பதிவர்களை உறவின் பெயராலே அழைக்கிறேன். எனது பின்னூட்டங்களைப் படிக்கும் பதிவர்கள், நான் யார் யாரை அவ்வாறு அழைக்கிறேன் என்று தெரிந்திருக்கும். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுபோல் வேறு சிலர் அவர்களாகவே உறவின் பெயர் சொல்லி அழைத்தார்கள், பிறகு விலக்கிக் கொண்டார்கள், நான் அவ்வாறு செய்யச் சொல்லிக் கேட்கவில்லை என்பதால் அவர்கள் முறை மாற்றும் போது 'தன்னால் வந்தது தன்னால் போனது' நட்டமில்லை என்றே நினைத்துக் கொண்டேன்.

நண்பரின் மனைவி நம்மைவிட 10 வயது குறைவாக இருந்தாலும் நண்பரை அழைப்பது போல் நண்பரின் மனைவியையும் ஒருமையில் அழைக்கும் உரிமையை நாமாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே நினைக்கிறேன். நான் இதுவரை எந்த நண்பரின் மனைவியையும் அவர் எவ்வளவு இளையராக இருந்தாலும் 'ங்கள்' விகுதி இன்றி அழைத்தது இல்லை.

மதிப்பு குறித்து எழுதத் தொடங்கி நட்பு உறவென்று நீண்டுவிட்டது.

தலைப்பின் மையக் கருத்து இதுதான்,

நீங்கள் நன்கு தெரிந்த ஒருவரை, உங்களுக்கு நெருக்கமான ஒருவரை பொதுவில் திடிரென்று எதோ காரணங்களுக்காக ஒருமையில் தூற்றுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது 'எதிர்காலத்தில் இது தனக்கும் நடக்கலாம்' என்றே உங்களுக்கு நெருக்கமான பிறர் உங்கள் மதிப்பை உடனடியாக குறைத்துவிடுவார்கள். அது தவிர்க்கவும் முடியாது. மீறியும் நமக்கு நெருக்கமான ஒருவர் தூற்றிவிட்டால் கொஞ்சம் பொறுமையாக அவர்களுக்கு விளக்கலாம், அவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் அவர்களை விட்டு விலகலாம். அப்படி இல்லாமல் நாமும் எதிர்வினை ஆற்றினால் நாம் அவர்கள் மீது இதுநாள் வரை கோபமாக இருந்ததாக அது வெளிக்காட்டிவிடும், பொது இடத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களிடம் எதிர்வினை ஆற்றாது நடந்து கொள்வது கோழைத்தனம் அல்ல.
தெரியாத ஒருவர் அல்லது எதிரியாக 'நினைத்துக்' கொண்ட ஒருவர் நம்மைச் சீண்டுவதற்காகவே தாயைத் தரம் தாழ்த்தித் தூற்றுகிறார் என்றால்,அவர் இழிசொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைப்பார்க்கலாம். இதில் இரண்டு அம்மாக்களின் கண்ணியம் காக்கப்படுகிறது


பிறரிடம் நாம் மரியாதையாக நடந்து கொள்வது, நம்மைப் பற்றிய மதிப்பை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்துவதுதான். 'இவர் நம்மை மதிப்பதால் இவர் நம் மரியாதைக்குரியவர்' என்றே நினைக்க வைக்கும் அதாவது பிறருக்கு நாம் செய்யும் மரியாதையில் சம அளவு தன் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்காக அமைந்துவிடுகிறது. மதிப்பு மரியாதை என்பது கொடுத்து (பின்)வாங்குவதல்ல, 'மரியாதை செய்வது' என்பது பிறர்குறித்த மரியாதை தொடர்புடையது மட்டுமல்ல, தன்மரியாதையும் சேர்த்தே அதில் அடங்கி இருக்கிறது.

தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை காத்துக் கொள்வதில் பெரும்பங்கு நம்மிடையே தான் இருக்கிறது

No comments:

Post a Comment

Thank You...