Thursday, 24 May 2012

ஓதுவார் ஆறுமுகசாமி தமிழை உள்ளே அழைத்துச் சென்றார்...நந்தனாரை அழைத்துச் செல்வது யார் ?

சமணமும் பவுத்தமும் முற்றிலும் துடைத்து ஒழித்த பிறகு... தீண்டாமை ஓங்கி இருந்த கிபி 12 ஆம் நூற்றாண்டில், அடியார்களை மெய்சிலிர்க்க வைக்க பெறவும் உடனடி(அவசர) தேவையாகவும் சைவ சமயம் வளர்க்கவும் பக்தி பரவசக் கதைகள் தேவைப்பட்டது. அதற்கு பேருதவி புரிந்தவர் சேக்கிழார் என்னும் பெருமகனார். திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் எழுதப்பட்ட பெரிய புராணம் என்னும் சைவ சமய இலக்கியத்தை இயற்றினார். அதன்படி 63 நாயன்மார்கள் கதை புனையப்பட்டது, தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் அந்த ஊரின் தொடர்பில் புனைவுக் கதைகளாக நாயன்மாரில் ஒருவர் வாழ்ந்ததாக 63 கதைகளில் நாயன்மார்கள் பற்றி பெரிய புராணத்தில் எழுதினார் சேக்கிழார்.

கண்ணப்பநாயனார், காரைக்கால் அம்மையார் என 63 அடியார்கள் வாழ்ந்ததாக எழுதி இருக்கிறார். அதில் ஒருவர் தான் தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சேர்ந்த நந்தனார் என்னும் அடியார். நந்தனாரை கதைக்காக பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்பற்றிய பின்னனி எதையும் சொல்லாமல் குறிப்பாக நந்தனார் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட புலைப்பாடியைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் சேக்கிழாருக்கு புலையர்வாழ்வு எத்தகையது என்று தெரியவில்லை என்றும், அதற்க்கான காரணம் புலையர் வாழும் ஊர்களை சேக்கிழார் போன்ற பிரமனர் அல்லாத உயர்வகுப்பினரும் எட்டிப்பார்த்ததில்லை என்றும், தில்லைப் போன்ற ஆலயம் அமைந்த ஊர்களை சேக்கிழார் நோக்கத்தின் காரணமாக அளவுக்கு அதிகமாக புகழ்ந்திருக்கிறார் என்றும் பெரியபுராணம் பற்றி ஆய்ந்தவர்கள் எழுதி இருக்கிறார்கள். பதிவின் மையம் தொட்ட கருத்து அல்ல இது.

நந்தனார் வரலாறு பற்றி அனைவரும் அறிந்தது தான், மேலும் நந்தனார் எரிக்கப்பட்டு இறைவனுடன் இரண்டர கலந்ததாகச் சொல்லப்பட்ட கதைகளை பலரும் அறிந்தது தான் அதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள படி சிவன் கோவிலக்ளி 63 நாயன்மார்களை கோவில் சுற்றில்(பிரகாரம்) வைப்பது ஆகாமவிதிகளில் ஒன்று. நந்தனார் கதை தில்லையில் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளதால் நந்தனாருக்கென்றே சிறப்பு சிலையும் வழிபாடும் பாரதி / உவேசாமிநாதய்யர் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக குறிப்பு இருக்கிறது.

நந்தனார் சிலையை தில்லைவால்(எழுத்து பிழையன்று) அந்தணர்கள் எப்பொழுது அகற்றினார்கள் என்று தெரியவில்லை. கடந்த 65 ஆண்டுகளாக நந்தனாரின் திருவுருவ சிலை தில்லையில் இல்லை. வலைப்பதிவில் இதுபற்றி எவருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். அண்மையில் தின்னை கட்டுரையைப் படிக்கும் போது அண்ணன் (ஆர்.எஸ்).எஸ் அரவிந்தன் நிலகண்டன் மிகவும் மனம் வருந்தி நந்தனார் (தில்லைவால் அந்தணர்களால்) அகற்றப்பட்டதைக் குறிப்பிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், நந்தனார் சிலை இருந்ததற்கான ஆதார அணிவகுப்பையும் கட்டுரையில் வைத்து இருந்தார், பின்பு அதுபற்றி விழிப்புணர்வு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை தின்னையில் அந்த கட்டுரையை காணவில்லை. ஆனால் அதே போன்ற கட்டுரை ஒன்றை மலர்மன்னன் எழுதி முன்பு இருக்கிறார்.

அதில் நந்தனார் சிலை அகற்றப்பட்ட ஆதாரம் தொட்டு குறிப்பிட்டுள்ளவையில் ஒன்று மிகவும் மனம் பாதித்தது

"மகாதேவன் மீண்டும் 1943ல் சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்கிறார். இப்பொழுது அங்கு

நந்தனாரைக் காணவில்லை! இதுபற்றி மகாதேவன் மனம் நொந்து எழுதுகிறார்:

நந்தனார் சிலையுருவில் நின்றிருந்த இடம் கால்களால் மிதிபடும் இடமாகிவிட்டிருந்தது."

***

சிலைகளிலும் தீண்டமை பார்த்து அதை அகற்றிய தில்லைவால் அந்தணர்களின் செயலை என்னவென்று சொல்வது, அவர்களும் தமிழ்பேசுகிறார்கள், தமிழர்கள் அனைவரையும் வேறுபாடு பார்க்காமல் விசி திருமாவளவனுக்கும் மாலை மரியாதை செய்தார்கள் என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டுகள் தானே. திருமாவளவனுக்கு மாலை மரியாதைச் செய்தது அவருக்கு பின்னால் நிற்கும் மக்கள் சக்தியை நினைத்தும், பெரும்பான்மை தலித் பெருமக்கள் வாழும் தில்லையில் அவ்வாறு செய்யவில்லை பிழைப்புக்கே வேட்டு என்ற பயம் தானே காரணம் ?

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தில்லைக் கூத்தனுக்கு தமிழை மீட்டுத்தந்தார் ஒரு ஓதுவார் ஆறுமுகசாமி, அந்த போராட்டத்தில் தில்லைவால் அந்தணர்களின் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு கண்ணை இழந்து கண்ணப்பநாயனாராக ஆகியும், உறுதி குறையாமல் இறுதியில் அவரது உண்மையான இறைவேட்கை அவருக்கும் சிவனுக்கும் வெற்றியைத் தேடித்தந்தது, சிற்றம்பலமும் தமிழும் சங்கமம் கொள்ள வைத்தது அவரது தொடர் போராட்டம். நந்தன் சிலையாக எங்காவது மறைவாக திருமுறைகளைப் போல் மறைத்துவைக்கட்டு இருக்கிறானா ? அல்லது எதோ ஒரு தில்லைவால் அந்தணரின் வாயில் படிக்கட்டுக்கு கீழ் கால்மிதியில் நசுங்குன்றானா ? தில்லையம்பலனுக்கே வெளிச்சம்.

சைவ சமயத்தில் மட்டும் தான் தீண்டப்படாத வகுப்பினன் என்று நந்தன் ஒதுக்கப்பட்டது ?ஆழ்வார் சிலைகள் கூட பெருமாள் அருகில் நிற்பதற்கு மறுக்க்கப்பட நிகழ்வுகள் வைணத்திலும் நடந்தேறி இருக்கிறது.

நந்தனார் சிலை உள்ளே அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். தில்லையில் மீண்டும் சிலைத்தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படவேண்டும். வரட்டு ஆன்மிகம் பேசினால் மட்டும் போதுமா? நாத்திகனுக்கு கவலை வேண்டாம் என்று சொல்லும் ஆத்திகர்கள், நாத்திகன் துணை இல்லாமல் இதை சாதிப்பார்களா ?

No comments:

Post a Comment

Thank You...