Thursday, 24 May 2012

பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறதே ஏன்?

பெங்களூருவிலிருக்கும் நாராயணா ஹ்ருதயாலயாவின் சிறப்பு மருத்துவரான தேவி ஷெட்டி, விப்ரோ தொழிலாளர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார். நவீன உலகின் இளைஞர், இளைஞிகளுக்கு வரும் இருதய நோய்களைப் பற்றிய கலந்துரையாடலில், மாரடைப்பை தடுப்பது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்களில், உடற்பயிற்சி செய்யுங்கள், சிரித்துக் கொண்டிருங்கள், பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் குறைந்த அளவில் எதையாவது சாப்பிடுங்கள், எண்ணையை தவிர்த்து விடுங்கள் என பதிலளித்துக் கொண்டே வந்தவரிடம் திடீரென கேட்கப் பட்ட ஒரு கேள்வி:

கேள்வி : பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறதே ஏன்?

பதில் : 45 வயது வரை பெண்களை இயற்கையே பாதுகாக்கிறது.

அய்யா, டாக்டரய்யா இந்த 45 வயசுக்குள்ள இவுங்க படுத்தற படுத்துல தான் ஆம்பளைங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருதுன்னு சொல்லாம சொல்றீங்களா? இல்ல, 45 வயசு வரைக்கும் பெண்களுக்கெல்லாம் பில்டிங் ஸ்ட்ராங்கு, மொட்டைமாடிதான் எப்பவுமே காலின்னு சொல்ல வர்றீங்களா? தெளிவா சொல்லாம இப்படி குழப்பறீங்களே….. என்னத்தச் சொல்ல…..
****************************************************************************
அகில இந்திய வானொலியின் பண்பலை சேவையில் தமிழ் பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக காட்டுக் கத்து கத்திக் கொண்டு, உங்கள் மனதுக்கு பிடித்த பாடலின் பிடித்த வரியில் வரும் பிடித்த வார்த்தையின் பிடித்த எழுத்தை எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க, நாங்க அந்த எழுத்தில் ஆரம்பிக்கற வேற ஒரு பாட்டை உங்களுக்காக் ஒலி பரப்புகிறோம் என்ற அருவருப்பான பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை விட, அனைத்திந்திய வானொலி நிலையத்தார் நிகழ்ச்சிகளை கதம்பமாக கோர்த்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் இடையில் இப்படி ஒரு விளம்பரம்:

அண்ணே, ஒரு சந்தோஷமான விஷயம். நான் அம்மாவாகப் போறேன். தினமும் கோயிலுக்குப் போயி சுக பிரசவம் வேணும்னு ஒண்ணே கால் ரூபாய் காணிக்கை போட்டுட்டு வர்றேன்.

அப்படியா தங்கச்சி, சுக பிரசவம் வேணும்னா, அயோடின் உப்பு சேர்த்துக்க, அதுதான் உடம்புக்கு நல்லது.. கோவில்ல போடுற ஒண்ணேகால் ரூவாயை அயோடின் உப்பு வாங்கறதுக்கு செலவு பண்ணேன்னா, உனக்கு மட்டுமல்ல, உன் வயத்துல இருக்கற குழந்தைக்கும் நல்லது

அய்யா, வானொலி நிலையத்தாரே, நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுதான் சொல்றீங்களா, இதை எங்கயாவது இந்த கோக்கு மாக்கா பக்தி பரவசத்திலாழ்ந்திருக்கும் பக்த கோடிகள் கேட்டுட்டாங்கன்னா, அப்புறம் நாலு பஸ் எரியும், ஆட்டோ ஓடாது, கடை கண்ணிக பத்தி எரியும், ரெண்டு மூணு வழிபாட்டுத்தலங்கள் தரை மட்டமாகும், பள்ளிக்கூடம் லீவு, ஆபீசு லீவு, ஒவ்வொரு தெரு முனையிலும் கூட்டம், சட்டசபையில வெளிநடப்பு செய்யறவங்கெல்லாம், திடீர்னு உள்நடப்பு செஞ்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாங்க, கடல் தண்ணி இருந்தாதான் உப்பு விளையுது, உப்பு விளைஞ்சாத்தான அயோடின் சேர்ப்பீங்க, அதனால கடலையே அழித்து விட அணி திரண்டு வாரீர்னு டிஜிட்டல் பேனர் கட்டுவாங்க, இது நாட்டை சீர்குலைக்க வந்த வெளிநாட்டு சதின்னு உளவுத்துறை ரிப்போட்டு வரும், ஏய்ய்ய்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா, ஆளை விடுங்க சாமி, ஒரு உப்புப் பெறாத உப்பு மேட்டர்ல எவ்வளவு வில்லங்கம் இருக்கு பாருங்க,,,,,, என்னத்தச் சொல்ல.
********************************************************************************
அது என்னன்னே தெரியலீங்க, நம்மளுக்குத்தான் இந்த மாதிரி நடக்குதா, இல்ல எல்லாருக்குமே நடக்குதான்னு தெரியல. டோல் கேட்ல நம்ம கார் எந்த வரிசையில நிக்குதோ, அந்த வரிசையில மாத்திரம், முன்னால இருக்கற கார்காரர், காசு வாங்கறவன் கிட்ட சண்டை போடுவார், இல்லைன்னா 500 ரூபாய் நோட்டை தேடி எடுத்துக் குடுத்து, சில்லறை வாங்கி சரி பார்த்து நிதானமா பர்ஸுல வெச்சுட்டு, அப்புறமா கிளம்புவாரு, இல்லைண்ணா நமக்கு முன்னால ரெண்டு கார் இருக்கும்போது அங்க மெஷின் கெட்டுப் போயிரும், இப்பிடி எதாவது ஒண்ணு நடந்து, நம்ம பொறுமையின் அளவை சோதிச்சுட்டே இருக்கும்.

பெட்ரோல் நிரப்ப போனா, நமக்கு முன்னால இருக்கற கார்காரர், சாவகாசமா கிரெடிட் கார்டை எடுத்துக் குடுத்து, அது வேலை செய்யாமப் போய், அப்புறம் இன்னொரு கார்டை எடுத்து குடுத்து, நிதானமா ரசீதுல கையெழுத்துப் போட்டு, ஏன், இல்ல, ஏன் இப்படி எனக்கு மாத்திரம் நடக்குது. என்னத்த சொல்ல…….
***********************************************************************************
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், தினமும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும் பொழுது, நிறைய மாடுகள் ரோட்டில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவைகளை ஒதுங்கச்சொல்லி ஹாரன் அடித்து விட்டு ஓரிருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை ஒரு இளம் கன்னுக்குட்டி நடு சாலையில் நின்று கொண்டிருக்க, நான் ஹாரன் அடிக்க, அந்த கன்றுக்குட்டி மிரண்டு ஓடாமல் சாவகாசமாக திரும்பி என்னை நெடு நேரம் பார்த்தது. அதன் பார்வையில் அது என்னிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசியது போல் தோன்றியது. வீட்டுக்கு போகும் வரை அது பேசியிருந்தால் என்ன பேசியிருக்கும் என யோசித்துக் கொண்டே போனேன். அது பேசியிருந்தால்……..

“டேய், வெண்ணை, பெருசா காருக்குள்ள உக்காந்துட்டு என்னைப் பார்த்து ஒதுங்கிப் போகச்சொல்லி ஹாரன் அடிக்கறயே, நீயும் உன் காரும் எங்க நிக்கறீங்க தெரியுமாடா, மவனே, இந்த இடம் நாங்க ஓடி விளையாட, நின்னு மூத்திரம் பேய, குனிஞ்சு புல்லு திங்கன்னு எங்களுக்காகவே உதிச்ச இடம்டா, அதுல ஒரு கான்கிரீட் சதுரத்தை வெச்சுட்டு ஆபீஸூங்கறீங்க, ஒரு வண்டி தாரைக்கொட்டி ரோடுங்கறீங்க, அதுக்கும் மேல என்னைப் பார்த்தே தள்ளி நில்லுன்னு ஹாரன் அடிக்கறயா, கசுமாலம், உன் இடத்துல நான் நிக்கலடா, என் இடத்துல தாண்டா நீ நிக்கற, சீ, தூரமாப் போடா”

இதை நினைத்த போது அந்த கன்னுக் குட்டியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் இந்த சாலையில் நான் மாடுகளைப் பார்த்து ஹாரன் அடிப்பதில்லை. என்னத்தைச் சொல்ல……


No comments:

Post a Comment

Thank You...