Thursday, 24 May 2012

குவாலியர் – கோட்டைகளின் நகரம்


புழுதி பறக்க விரையும் குதிரைகளின் குழம்பொலி, உருவிய வாள், முறுக்கிய மீசை, நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், வாரிசு சண்டைகள், உருண்டு ஓடிய தலைகளிலிருந்து பிரிந்து சிதறிய மகுடங்கள், பொன்னாசை பிடித்த ஆப்கானியர்களின் ஊடுருவல்கள் என எப்பொழுதும் ஒரு அரசியல் சூறாவளிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்த ஒரு நகரம். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், முகலாயச் சக்கரவர்த்தியின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் இங்கு வந்தும் போவதுமாக இருந்ததால், இசையும், நாட்டியமும் இன்ன பிற கலைகளும் கூட அதன் போக்கில் தன் பல பரிமாணங்களை இந்த நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

முதன்முதலில் இந்த மலை நகரத்தை கண்ணெடுத்து பார்த்து அதை ஆக்ரமித்து தனதாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், சூரியவம்சத்தை சேர்ந்த பத்குஜ்ஜர் ராஜபுத்திர வம்சத்தின் குல விளக்குகள் தான். எந்தப் போரிலும் முன்னணியில் நின்று நெஞ்சை நிமிர்த்தி போரிடும் வீரமும், துணிவும், பெருமையும் கொண்ட குஜ்ஜர் எனப்படும் இந்த ராஜபுத்திர வம்சம், அரசியல் சூழ்நிலையில் அடிபட்டு இன்று தங்களது இருப்பியல் வசதிகளுக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்பது வேதனைதான். இந்த வம்சத்து மக்கள் இங்கு கோட்டை கட்டப் போய், அதன் பிறகு வந்தவர்கள், இங்கு பல கோட்டைகளைக் கட்டி இந்த நகரத்துக்கு கோட்டைகளின் நகரம் என பெயர் கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்து விட்டார்கள்.

தோமர் வம்சத்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜா மான்சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்ட குவாலியர் கோட்டையானது இன்றளவும் பிரசித்தமானது. இதை சுற்றிப் பார்ப்பதற்கே பல நாட்களாகும். இதற்குப் பின் இந்த நகரம், கச்வாஹா ராஜ புத்திரர்கள், அடிமை வம்சத்து அரசனான குத்புதின் ஐபெக், அதற்குப்பின் மராட்டிய வீரரான மாதவ்ராவ்ஜி ஷிண்டே என பலரது கைக்கு மாறி, சிப்பாக் கலகத்தில் பெரும்பங்கெடுத்து, பின் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்த சிந்தியா மகாராஜாக்களின் கைகளில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்திருக்கிறது.

குவாலியர் கோட்டையின் அழகையும் பெருமையையும் கண்ட முகலாய மன்னர் பாபர், இதில் லயித்துப் போய் இந்தியர்களால் கட்டப்பட்ட மாளிகைச் சரங்களில் இது ஒரு விலைமதிக்க முடியாத முத்து என்றாராம்.

இன்னும் இந்நகரம் அமைந்திருக்கும் பிராந்தியமான புந்தேல்கண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற நடனங்களான ஆஹிரி, பரேதி, சஹரியா, லூர், லாங்கி, துல் துல் கோரி போன்ற நடனங்களின் எச்சத்தையும் மிச்சத்தையும், திருமணங்களிலும் விழாக்களிலும் காணலாம்.

இசை மேதை தான்சேனுக்கு வருடத்திற்கொருமுறை தான்சேன் இசைவிழா நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.

ஒரு முறையாவது இந்தக் கோட்டைகளை போய் பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டு விட்டு வாருங்கள்.

No comments:

Post a Comment

Thank You...