Monday 10 March 2014

விலக்கப்பட்ட கனி

எங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்
ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறது
இன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதும்
இடையில் ஒருவன் அதை களவாட முயன்றதும்தான்
என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறது
இப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறது
காப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்
கண்களுக்குள் நிறங்களோடு நின்றாடுகிறது
கடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்
அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்
மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன்
வனம் வனமாய் அலைந்து
திராட்சைப் பழங்கள் முதல்
பலாப்பழங்கள் வரை பறித்து
எனது பசியின் அறையில் நிரப்புகிறேன்
ருசி கொஞ்சம் ஆறியது போலிருக்கிறது
பசி தணிந்தது போல்தானிருக்கிறது
பல தேசத்துப் பழங்களாலும் நிரப்பப்பட்ட
எனது பசியின் அறை
நடுவில் ஒரு சிறிய வெற்றிடத்தை
விட்டுவைத்திருக்கிறது
எனக்கு விலக்கப்பட்ட கனியின்
அளவிலேயே, உருவிலேயேயிருக்கிறது அவ்விடம்

No comments:

Post a Comment

Thank You...