Thursday 24 May 2012

எங்க அப்பா ஒரு காமெடி பீஸூ

காதலர் தினத்தன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே வண்டியை உருட்டிக் கொண்டு கே.கே. நகரின் அந்த சரித்திர பிரசித்தி பெற்ற அரங்கத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றேன். வண்டியிலிருந்து இறங்கும் பொழுதே எதிரே தரிசனம் தந்தார் நம் கார்க்கி. பச்சை தேநீர் சட்டை அணிந்து காதலர் தின நினைவுகளோடு தனக்குத்தானே பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவருக்கு நிர்மலா பெரியசாமியைப் போல் ஒரு வணக்கம் சொன்னேன். திடுக்கிட்டு சுதாரித்தவர், புன்முறுவலோடு வணக்கம் சொன்னார். பரஸ்பர விசாரிப்புகளுடன் விழா அரங்கை அடைந்தோம். அரங்கத்தில் நாங்கள் தான் இரண்டாவதாக வந்தோமோ என நினைத்தால் அட ஆமாம். முதலில் வந்தது கேபிள் மற்றும் பரிசல் மற்றும் உறவும், சுற்றமும், நட்பும்.

நேரம் ஆக ஆக பதிவர்கள் ஒருவர்பின் ஒருவராக வர அரங்கம் நிறைந்ததோடல்லாமல், பதிவர்களின் அன்பினால் ஒவ்வொருவர் மனமும் நிறைந்தது. முக்கிய விருந்தினர்கள் வர தாமதமானதை மிக சாமார்த்தியமாக சமாளிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேகா (கலக்கல் பார்ட்டிப்பா இவுரு) ஒவ்வொருவரின் அறிமுகப் படலத்தை ஆரம்பித்து வைத்தார்.

முதலில் பிரமிட் நடராஜன் வர, பின்னாலேயே மற்ற எல்லா நாட்டாமைகளும் வந்து விட, தொகுப்பாளர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்கு அடையாளமாக தமிழ்தாய் வாழ்த்து பாடவைத்தார். ஏன் எல்லோரும் இப்படி மெதுவாக உதட்டுக்கு நடுவில் பாடுகிறார்களே என்று பார்த்தால், பாதிப் பேர் முதல் சில வரிகளுக்கு மேல் வெறும் உதட்டை மாத்திரம் அசைத்தனர். வாழ்த்துதுமே, வாழ்த்துதுமேவுக்கு பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலில் வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், புத்தக வெளியீடு, நாட்டாமைகளின் வாழ்த்துரைகள், எழுத்தாளர்களின் ஏற்புரைகள், பதிவர்கள் வாழ்த்துரைகள் என நிகழ்ச்சியில் சுவராஸ்யத்திற்கு பஞ்சமில்லாதிருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடவே செய்தன.

ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக நீங்கள் அழைக்கப் பட்டால், அங்கு ஏதோ அழைத்தார்கள் போனோம் என கடமைக்காக செல்வதை விட்டுவிட்டு, எதற்காக அழைத்தார்களோ அதற்கு முற்றிலும் ஆயத்தமாக செல்வதே, அந்த அழைப்புக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள், உங்கள் பொற்கரங்களால் ஒரு படைப்பாளியின் படைப்பு முதல் முதலாக இந்த உலகை காணப் போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது அந்த முக்கிய மனிதரின் தலையாய கடமை. அதை விட்டுவிட்டு எனக்கு நேரமில்லை, அதனால் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க முடியவில்லை என சப்பை கட்டு கட்டுவது எந்த நாகரீகத்தில் சேர்த்தி என தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் கைகளால் வெளியிடும் புத்தகத்தில் இவர்களுக்கு சற்றும் உடன்பாடில்லாத கருத்துக்கள் இருக்குமானால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா??

பிரமிட் நடராஜன் தன் பங்குக்கு கேபிளின் கதைகளை சிலாகித்து பேசிவிட்டார். “கேபிள் சங்கரின் கதைகளை படித்தால், ஒரு 55 வயது மனிதரின் முதிர்ச்சி தெரிகிறது” என்று சொல்லி, அவரை நிரந்தர யூத் ஆக்கி விட்டார். அவர் ஒன்றோ அல்லது இரண்டு கதைகளையாவது படித்திருப்பார் போல் தோன்றுகிறது. ஆனால் அஜயன் பாலா, ம்ஹூம் ……. சாரி பாஸ். நீங்கள் அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தீர்கள். இந்த சமயத்திலாவது நீங்கள் வெளியிட்ட பரிசலின் புத்தகத்தை சில பக்கங்கள் புரட்டி படித்திருக்கலாம்.

இங்கு பிழை எங்கு நடந்தது என தெரியவில்லை. பதிப்பகத்தார்தான் புத்தகத்தை விருந்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா, அல்லது படைப்பாளியா என தெரியவில்லை.

கார்க்கியின் வாழ்த்துரை பதிவர்களுக்கு ஒரு உற்சாக டானிக். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதுங்கள், எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் எழுதுங்கள் என்றார்.

அனைவரும் கேபிளிடமும், பரிசலிடமும் கையழுத்து பெறுவதில் மிக ஆர்வம் காட்டினோம். கூட்டம் முடிந்து வழக்கம் போல பதிவர்கள் குழுக்குழுவாக கே.கே நகர் முனுசாமி சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அண்ணன் அப்துல்லா, நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ஆதி, அடியேன் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஒரு மாநகர காவல் கார் ஒன்று வந்தது. சில விநாடிகள் அங்கு கும்பலாய் நின்றிருக்கும் அனைவரையும் பார்த்தார் அந்த கடமை தவறா காவலர். பதிவர்கள் பலர் கையில் சிகரெட் வேறு புகைந்து கொண்டிருக்கிறது. சரி, பொது இடத்தில் சிகரெட்டா என தீட்டப் போகிறார் என நினைத்தேன். ஆனால் அந்த கடமை வீரரை யாருமே ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவரவர் அரட்டையில் மூழ்கியிருக்க, காவலர் பொறுமை இழந்து விட்டார். “சார், யார் நீங்க, இப்படி கும்பலா எதுக்கு நிக்கறீங்க” என கேட்டவுடன், அப்துல்லா அண்ணன் “அய்யா, நாங்கெல்லாம் இலக்கியவியாதீங்க, இலக்கிய கூட்டம் முடிஞ்சுட்டு நிக்கறோம்” என்று சொன்னவுடன், காவலருக்கு முகம் சுருங்கிப் போய் விட்டது. இங்க எதாவது துட்டு தேத்தலாம்னு பார்த்தா, முதல்லயே இவனுங்க பெரிய வியாதிங்கறானுங்களே, போலாம் ரைட் என சென்று விட்டார்.

விழாவின் ஹைலைட் கேபிள் அண்ணனை அவரது மகன் அறிமுகம் செய்து வைத்ததுதான்.

“எங்கப்பா ஒரு காமெடி பீஸூ”

No comments:

Post a Comment

Thank You...