Thursday 24 May 2012

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்

No comments:

Post a Comment

Thank You...