Thursday 24 May 2012

நகரம் – அமிர்தசரஸ் - தங்க நகரம்


சீக்கியர்களின் புனித பூமி, பொற்கோவில், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நகரம், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுக்கு பெயர் போன பூமி, மண்ணிலும் நீரிலும் மாத்திரமல்லா; காற்றிலும் வீரம் உலவும் பூமி, பிரிவினையின் போது பிரிய மனமில்லாது பிரிந்தவர்களின் துயர வடுக்கள் துடைக்கப் படாமல் இன்னும் புண்களாய் உள்ளது என சிறப்பும், சிறுமையும் ஒருங்கே உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே அம்ரிஸ்டர் எனப்படும் அமிர்த சரஸ் நகரம்.

துங் என்ற பழங்குடியினர் வசித்து வந்த இந்த பூமியை குரு ராம்தாஸ் ஜி என்பவர் கி.பி.1574 ல் 700 ரூபாய்க்கு வாங்கினார். பிறகு இங்கு இருந்த வளங்களைப் பார்த்து குளங்கள் வெட்டவும் மரங்கள் நட்டவும் என திருப் பணிகள் தொடங்கி, வளம் கொழிக்கும் பூமியானவுடன் அதற்கே உரிய சண்டைகளும் சச்சரவுகளும், உரிமைப் பிரச்சனைகளும், உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும் என அரசியல் ஆரம்பித்தவுடன் இங்கிருக்கும் உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு அடையாளம் தேடிக் கொண்டதுதான் சீக்கிய மார்க்கம். அதன் இன்னொரு பரிமாணமே கால்ஸா பிரிவு என்ற வீரர்கள் படை. இந்திய திருநாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் இந்த நகரைக் கடந்துதான் வர வேண்டுமென்பதாலும், நுழைந்தவுடன் கண்ணில் காணும் வளங்கள் அவர்களது நாவில் நீர் ஊற வைப்பதாலும், எப்பொழுதும் ஒரு எல்லை பாதுகாப்பு படையை போலவே இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானார்கள். ராஜஸ்தானிய ராஜ புத்திரர்களை புரட்டியெடுத்த ஆப்கானிய போர் வீரன் அப்தாலி, தன் கண்களை இந்த மண்மீதும் பதிக்க தவறவில்லை. வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், கண்ணைப் பறித்தது இங்குள்ள மங்கையர்களும் கூடத்தான். கோதுமை நிறத்தில் கூரிய நாசியும், நெடிதுயர்ந்த வனப்பும், அகன்ற தோள்களும், இடுப்பு வரை கூந்தலுமென இருக்கும அழகுப் பதுமைகளை கண்டு மனதை பறி கொடுத்த வந்தேறிகள் அநேகர். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கத்தானோ என்னவோ ஒவ்வொரு சீக்கிய பெண்ணும் கூட எப்பொழுதும் கத்தியும் கையுமாகவே இருந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13, 1939, எல்லோருக்கும் போலவே இந்நகரத்து வாசிகளுக்கும் ஒரு இனிய காலையாகத்தான் விடிந்தது. ஆனால் அன்று நிகழப் போகிற விபரீதம் தெரியாமலே, “வாஹே குரு”, என்ற கோஷங்களுடன் அமர்ந்திருந்த 1500 சொச்சம் பேரை தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கும்படியாக தனது துப்பாகிகளை திருப்பிய ஜெனரல் டயர் இங்குதான் தனது திருவிளையாடலை நடத்தினார். துப்பாக்கிகள் ஓய்ந்த பின் எண்ணிப்பார்த்தால் 329 பேர் கடைசி முறையாக “வாஹே குரு” என அழைத்திருந்தார்கள்.

அடுத்ததாக சுதந்திரமடைந்தோம் என்ற சந்தோஷ கீதம் காதில் படுவதற்கு முன்னே, வந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை தனது கோரக்கரங்களால் இன்னொரு முறை இந்நகர வீதிகளில் ரத்த ஆறை ஓடச்செய்து விட்டுப் போனது. டோம்னிக் லேப்பயர் மற்றும் லேரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய Freedom at Midnight என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். பிரிவினையின் போது இந்நகரமும் லாஹூரும் சந்தித்த அனைத்து வேதனைகளையும் வார்த்தைகளில் அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள்.

இன்று இந்த நகரம் புதுப் பொலிவுடன், பொற்கோவில் மற்றும் ஏனைய புராதனச் சின்னங்களின் சிறப்புகளுடன், மனித நேயமிக்க சீக்கிய மக்களுடன், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுடன் என இன்னும் எத்தனையோ சிறப்புடன் தனது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Thank You...