தனி நடையும் அழகும் உண்டு.
"பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளிப் பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
தந்திர மூர்த்தியே போற்றி !
தாசர் தம் தலைவா போற்றி !
வஞ்சகவேந்தே போற்றி !
வன்கணநாதா போற்றி ! "
ஆரியத்திற்கு இப்படி அருச்சனை செய்து தனது
ஆரியமாயை நூலைத் துவக்கி அண்ணா
அந்த நாளைய குமுகக் கோளாறுகளையும்,
அந்தக் கோளாறுகளின் பிடியில் கிடந்து,
தமிழர்களைக் காலகாலமாய் அழித்து வரும்
காங்கிரசாரையும் பார்த்து இப்படிக் குரல்
எழுப்பினார்.
அந்த வரிகளை எழுதிய அண்ணாவுக்கு இருந்த
உணர்வும்,அதைப் படித்த திராவிடத் தளபதிகளுக்கு
இருந்த உணர்வும், பொதுமக்களுக்கு
இருந்த உணர்வுகளும் வெவ்வேறானவை.
அண்ணாவுக்கு "நமது குமுகத்தின் கேடுகளுக்குக்
காரணமான ஆரியத்தை, இப்படிக் கண்டித்து
விழிப்புணர்வு அளிப்பது காலத்தின் தேவை" என்ற
எண்ணம் இருந்தது.
அப்பாவித் தமிழ்மக்களோ "அப்படியா? அண்ணா
ஏதோ சொல்றாரே, ஓகோ இப்படியெல்லாம் இருக்கிறதா?
சரி - இந்தத் திராவிடப் பாசறை நம்மைக் காப்பாற்றிக்
கரை சேர்க்கப் போகிறது போல!" என்ற எண்ணம் இருந்தது.
பொதுமக்களிலே, சாதீய, கிழாரியக் காரர்களுக்கு,
அதாவது ஆரியம் கொடுத்த சாதியத்திற்கு
அணைவாக இருந்த அத்தனை சாதியாளர்களுக்கும்,
அச்சாதீயம் உருவாக்கின கிழார்களுக்கும் எரிச்சல் இருந்தது.
இதை நன்கு புரிந்து கொண்ட திராவிடத் தளபதிகள்
அல்லது மாயாண்டிகள் அல்லது அடிப்பொடிகள் ஒரே
கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தனர்.
ஒன்று, பெரியார் சொல்வது போல சாதியை
அறவே ஒழித்து விட்டால் அரசியல் பிழைப்புக்
கடினமாகிவிடும் என்பதால், அண்ணாவின்
ஆரியமாயையைத் தூக்கிப் பிடித்து அதில்
கூறப்பட்டிருக்கும் உட்கருத்துக்களையும்
பெரியாரின் பல்வேறு போர்க் குரல்களையும்
ஒருமித்து பார்ப்பன சாதியின்
மேல் மட்டும் குவித்துவிட்டு,
தமிழ்நாட்டில் இன்னும் சாதீய
வெறிக் கலவரம் செய்யும் சாதீயத்திற்குத்
தந்திரமாக அரணாக இருந்து விட்டனர். சாதீயத்
தீ அணையாமல் பார்த்துக் கொண்டனர்.
இப்படிச் செய்ததால் திராவிடம் என்ற பெயரை
எந்த இடத்தில் ஒட்ட வைத்தாலும் அங்கே
சாதியோடு சேர்ந்த அரசியல் ஒன்று வளர்ந்து
விடுவதை இன்றும் காணமுடிகிறது.
இரண்டு, அப்படி அரசியல் பிழைப்பைத் தக்க
வைத்து விட்டதால், வருமானத்தை அதிகப்
படுத்தவும் பரவலாக்கவும் வழி வேண்டும் அல்லவா?
அதற்கும் அண்ணாவின் ஆரியமாயை என்னும்
அமுதசுரபியைப் பயன்படுத்தினர்? என்னை?
ஆரியமாயை என்ற பார்ப்பனியத்தை,
பார்ப்பனர் பக்கம் மட்டுமே தொடர்ந்து திருப்பி
விட்டுக் கொண்டே இருந்தால்
தமிழர்கள் அதே மயக்கத்தில்
திராவிட மாயாண்டிகளின்
அடிப்படைத் தவறுகளைக் கண்டும்
காணாமல் இருந்து விடுவார்கள் என்று
மாயாண்டிகள் உறுதியாக நம்பினர்;
அதை நடைமுறைப் படுத்தவும் செய்தனர்.
தமிழ்நாடெங்கும், தமிழ், மேடைப்
பேச்சுக்கு மட்டும் உதவும் பொருளானது.
திராவிட மாயாண்டிகளின்
தமிழ்த் தொண்டால் பள்ளிக் கூடத்தை விட்டு
தமிழ் மாயமானது, தமிழர்கள் மயக்கத்தில்
இருந்த போதுதான்.
தமிழகத்தில் ஏறத்தாழ 7 பேருக்கு ஒருவர்
பெருங்குடியர். திராவிடவாதிகள் தாசுமாக்கு
வாதிகள் என்று அண்மையில் ஒரு அறிஞர்
கூறியிருந்தார். மிகப் பொருத்தமான சொல் அது.
பெருந்தனக்காரர்களின் சேவகர்களாக இந்தத்
தாசுமாக்குவாதிகள் ஆகிப்போனதில்
"ஊரில் உழவும் இல்லை,
வெளியில் தமிழும் இல்லை!
ஆற்றில் நீரும் இல்லை;
அதனடியில் மணலும் இல்லை!!"
இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கூர்ந்து பார்த்தால், ஆரியத்தால் அடிபட்டுக் கிடந்த
மக்களை அதே ஆரியத்தைக் காட்டிக் காட்டி
அச்சத்தில் வைத்துக் கொண்டே திராவிட மாயாண்டிகள்
கட்சி வேறுபாடின்றி ஒழுக்கக் கேட்டின் உச்சத்திலும்
ஊழலின் சிகரத்திலும் திளைத்திருப்பது புரியும்.
ஊழலை மட்டும் எடுத்துக் கொண்டால்,
சிறு குவியலில் இருந்து பெரிய மலைவரை
இந்த ஆரியமாயை திராவிட மாயாண்டிகளுக்கு
எடுத்துத் தந்திருக்கிறது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சிக்கு
வளைந்து கொடுத்துப் பணம் பண்ணும் வித்தையை
தனது முகன்மைத் தொழிலாக ஆக்கிக் கொண்டு
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும்
பெருஞ்சொத்துக்களை ஏற்படுத்திக் கொண்டனர்
தி.கவின் தளபதிகள்ள்.
தமிழர்களை நிமிர்ந்து நிற்கச் சொன்ன பெரியாரின்
கட்சிக்குத் தலைவராக வந்த வீரமணி வெறும்
5 இலக்க உரூவாய் நன்கொடைக்கு
செயலலிதாவிடம் கூனிக் குறுகிக் குழைந்து
மடிந்து வளைந்து வாழ்ந்தது யாருக்கும் மறக்கவில்லை.
அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் ஆரியமாயை
வர்த்தகத்தைத் தொடர்ந்த கருணாநிதியின் தி.மு.க
சிக்காத ஊழல்கள் இல்லை. எம்சியார் அவர் மேல்
54 வழக்குகள் போட்டார். அண்ணா உருவாக்கிய
தி.மு.கழகமே இரண்டாக உடைந்தது
காசு சங்கதியில்தான்.
பூச்சி மருந்து அடிப்பதில் ஊழல், சருக்கரை ஊழல்
என்று ஊழல் கணக்குகள் நாறின. வீராணம் குழாய்
ஊழல், சென்னை மாநகராட்சி மசுடரு உரோல் ஊழல்
போன்ற மிகவும் புகழ் பெற்ற ஊழல்கள் தி.மு.கவின்
கணக்கில். கருணாநிதி அதை ஒப்புக் கொண்டு
"ஏதோ கொஞ்சம் புறங்கையை
நக்கினோம் - அவ்வளவுதான்"
என்று சொல்லி ஊழலைப் பின்னாளில்
ஒப்புக் கொண்டார்.
வந்தார் எம்சியார்; இவரின் ஊழல் அலாதியானது.
அந்தக் காலத்தில் கருணாநிதி ஊழல் பண்ணினால்
அவர் மட்டும் சாப்பிடுவார் - ஆனால் எம்சியார்
பண்ணினால் அவரும் சாப்பிட்டு ஊருக்கும்
கொடுப்பார் என்பர். அப்படிச் செய்தே வள்ளல் என்ற
பெயரும் வாங்கினார் எம்சியார். இவர் கணக்கில்
பல்பொடி ஊழல், சத்துணவு ஊழல், பல்கேரிய கப்பல்
பேர ஊழல் போன்றவை மிகப் பெருவலம் ஆனவை.
பின்னர் வாராது வந்த தமிழ் அன்னை செயலலிதாவின்
ஆட்சி. தினம் தினம் நகைக்கடைகளின் ஊர்வலங்கள்;
தேர்தலின் வாக்குகளுக்காகக் கொடுக்கப்படும் இலஞ்சப்
பணம் இவர் காலத்தில்தான் அதிகரிக்கப் பட்டது.
வித விதமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குச்
சொந்தக்காரர். தொட்டதையெல்லாம் தனது
பொன்னாக்கும் வித்தை இந்த அம்மையார்
தமிழ்நாட்டுக்குத் தந்த கொடை.
தமிழ்நாட்டில் இருக்கும் காலி இடங்களை எல்லாம்
கண்டு கொள்ளும் வித்தையை தமிழ்நாட்டுக்குக்
காட்டியவர் இவர் என்று சொன்னால் மிகையன்று.
டான்சி, பிளசெண்ட் தங்கல், வெளிநாட்டுப் பணம்,
சுடுகாடு என்று வகை வகையான ஊழல்கள்.
70களின் ஊழல்கள் 1கோடி, 2 கோடி முதல்
100 கோடிகள் அளவு வரை இருந்தன.
அப்பொழுதுதான் அண்ணாவின் ஆரியமாயை
வரும்படி செய்து கொடுக்கத் தொடங்கியது.
எம்சியார் காலத்தைய கப்பல் பேர ஊழல்
உள்ளிட்டப் பல ஊழல்களும்
அன்றைய ஊழல் அளவும் பல நூறு
கோடிகளுக்குச் சென்றன. ஆனந்த விகடன்,
மந்திரிமார்களை முகமூடிக்
கொள்ளையர் என்று வருணித்தது
நினைவிருக்கலாம். எம்சியார் காலத்தில்,
தானும் உண்டு பிறரும் வாழனும் என்று
நினைத்ததால் ஊழலின் அளவும் உயர்ந்து பரந்து வந்தது.
தொடங்கி வைக்கப் பட்ட ஆரியமாயைத்
தாக்கங்கள் பரந்து விரிந்து பலருக்கும் பலனளித்த
காலம் எம்சியார் காலம்.
பங்குச் சந்தை மதிப்பு போல ஆரியமாயையை
முறிக்கக் கிளம்பிய திராவிட மாயாண்டிகள்
அடித்த கொள்ளைகளின் அளவு ஆயிரம் கோடி
உரூவாய்களாக உயர்ந்தது அப்போது.
திருச்செந்தூர் முருகனின் வேலைக் கூட பிடுங்கிக் கொண்டு
ஓடிவிட்டனர். கடந்த 40+ ஆண்டுக்கால திராவிட
ஆட்சிகளில் கோவில்கள் நலிந்தன. அங்கிருந்து சிலைகளும்
வேல்களும் குறிப்பாக மரகதலிங்கங்கள் சிலைகள் எல்லாம்
காணாமல் போவது தொடர்கதை. ஏறத்தாழ எல்லா கோவில்
நிலங்களும் ஏப்பம் விடப்பட்டாயிற்று. ஏரி குளங்கள் திராவிடத்
தளபதிகளைப் பெற்றவர்களின் பேட்டைகளாயிற்று.
செயா காலத்தைய ஊழல்கள், திராவிட மாயாண்டிகள்
ஏற்படுத்தியிருந்த ஊழல் அடிக்கட்டமைப்பை மேலும்
மேலும் வலுப்படுத்தி வருமானங்களின் அளவை
சில ஆயிரங் கோடிகளாக ஆக்கி விட்டது.
இப்படி அண்ணா ஆக்கிய ஆரியமாயை,
பங்குச் சந்தையிலே சில பொருள்கள் என்றைக்கும்
ஏறுமுகமாக இருப்பது போல ஏறிக் கொண்டே போய்
பணமாகக் காய்ச்சிக் கொட்டுகிறது.
அதன் அண்மைய உச்சம்தான் நடுவண் அரசில்
பங்கு கொள்ளச் சென்ற தி.மு.கவின் ஆ.இராசா
செய்ததாகச் சொல்லப்படும் 66 ஆயிரம் கோடி ஊழல்.
திராவிடத் தளபதிகளின் மேலே சொல்லப் பட்ட
ஊழல்களில் எல்லாம் உயர்ந்த ஊழல் இசுபெக்ட்டுரம் ஊழல்.
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலேயே
முதன்முறையாகச் செய்யப்பட்ட ஆகப் பெரிய ஊழல்
இசுபெக்ட்டுரம் ஊழல்; அதன் தொகை 66000 கோடிகள்;
அதைச் செய்ததாகச் சொல்லப்படும் கட்சி தி.மு.க.
அண்ணாவின் ஆரியமாயையை தமிழரிடம் காட்டி
எங்களை விட்டால் ஆரியம் வந்து விடும் என்று
தமிழர்களை அச்சப்படுத்தியே கொள்ளை அடித்த
சூக்குமம் தாசுமாக்குவாதிகளையேச் சாரும்.
இதன் விளைவு வீரம் மானம்
சூடு சொரனை மொழி இனம் என்ற அத்தனை
உணர்வுகளையும் தமிழர்கள் இழந்து நிற்பதுதான்.
இதன் தாக்கம் நெடுங்காலத்திற்கு நிற்கும்.
ஆரியமாயையில் இருந்து விடுபட்ட தமிழர்கள் இந்த
திராவிட மாயாண்டிகளிடம் இருந்து விடுபட முடியாது.
காரணம் திராவிடக் கட்சிகளின் சந்தை மதிப்பு
(Market Capitalization) இன்றைக்குப் பல
இலக்கம் கோடிகள்.
ஆகவே, அண்ணாவின் ஆரியமாயை நூலின் மதிப்பு
1970களில் சில கோடிகளாக ஆகி, சில நூறு, சில ஆயிரங்கள்
என்று வளர்க்கப் பட்டு இன்றைக்கு அறுபத்து ஆயிரம்
கோடிகளாக வளர்ந்து நிற்கிறது.
மீண்டும் அண்ணாவின் அந்தப் பரணியை படித்துப் பாருங்கள்.
"பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !"
அவர் சொன்னது ஆரியத்திற்கு மட்டும்தானா?
அல்லது அவரின் வாரிசுகளுக்கும் சேர்த்துத்தானா
என்பது விளங்கும். ஆரியத்தின் விழுதுகள் என்று
சொல்லப்படும் இந்துராமும் சோவும் சு,சாமியும்
தமிழர்க்கு இழைத்த தீங்குகளில் எந்தத் தீங்கைத்
திராவிட மாயாண்டிகள்
தமிழர்க்கு இழைக்கவில்லை? என்பதும் புரியும்.
No comments:
Post a Comment
Thank You...