|
2000-ம் ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சியாளனாய் தோன்றிய பெளத்தம் மூன்று காரணிகளில் நின்றது.
1. புத்தம்- தலைவன் 2. தம்மம்- கொள்கை 3, சங்கம்- நிறுவனம்... தமிழர்களின் மேன்மைக்கு இம்மூன்றும் முக்கியம்! நீங்கள் மூன்றுமாய் இருப்பது சத்தியம்!! தமிழுக்கு புதிய முகவரி தந்த உங்களை வணங்கி வாழ்த்துக்கிறேன். - இப்படி வாழ்த்தி இருப்பவர் ஆ.ராசா, எம்.பி., தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர். யாருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதிக்கு இந்த வாழ்த்து மடலை டெல்லியிலிருந்து எழுதி அனுப்பி இருக்கிறார் ராசா. அந்த மடலை அப்படியே முரசொலியில் இரண்டாம் பக்கம் வெளியிட்டு முரசு கொட்டியிருக்கிறார் கருணாநிதி. ஆ.ராசா எழுதிய கடிதத்தை வாசிக்கும் போது திகார் காராக்கிரகத்தில் 15 மாதங்களுக்கு மேலாக இருந்த போது, ஏகப்பட்ட புத்தகங்கள் படித்திருக்கிறார் என்பது புலனாகிறது. மார்கசீயத்தை வாசித்திருக்கிறார். பெரியாரை வாசித்திருக்கிறார். பாரதியாரை வாசித்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால்... வைணவம்... சைவம்... பரமாத்மா... ஜுவாத்மா என்றெல்லாம் கடிதத்தில் வார்த்தைகள் வந்து விழுந்திருக்கிறது என்றால்... என்னவெல்லாம் படித்து முடித்திருக்கிறார் என்பதை இக்கடிதம் மூலம், தி.மு.க.வினருக்கு தெரிவித்திருக்கிறார். சிறையில் இருந்தாலும், அவரது படிப்பு தாகத்தை முதலில் பாராட்ட வேண்டும். சரி... சிறையில் இருந்தாரே... தான் செய்த தவறு என்ன என்று நினைத்து, அதை திருத்திக் கொள்ளவோ... அல்லது தான் செய்த தவறுக்கு பரிகாரமாகவோ ஏதாவது நாலைந்து வார்த்தைகள் எழுதியிருந்தால்... நன்றாக இருந்திருக்கும். வன்முறையை கையில் எடுக்கிறவன் மட்டும் குற்றவாளி அல்ல... அந்த குற்றத்தை செய்யத் தூண்டுகிறவனும் குற்றவாளி என்று பல இடங்களில் வாசித்த ஞாபகம் இருக்கிறது. ஆக, ஊழல் செய்துவிட்டு சிறையில் இருந்த ராசா.... “இந்த ஊழலை செய்ய வைத்து எது? யார்? ஏன்?” என்று விடையளித்து, தலைவரை வாழ்த்தி இருந்தால்... ஆ.ராசா பொதுவாழ்க்கையின் அடுத்த படிக்கட்டில் நிற்க வைக்க, இந்த நாடும் தயாராக இருக்கும். ஆனால், தலைவரை என்ன சொல்கிறார். புத்தம்-தலைவன்... தம்மம்- கொள்கை.... சங்கம்- நிறுவனம்... -இதிலிருந்து, கருணாநிதி தான் சிறந்த தலைவர்.... கருணாநிதி தான் கொள்கையில் சிறந்தவர்.... கருணாநிதி தான் சிறப்பாக நிறுவனத்தை(கட்சி) நடத்துபவர் என்று சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. பெளத்தம் என்ற மதத்தின் கோட்பாடுகளில் இருந்து மூன்று வார்த்தைகள் மூலம் கருணாநிதியை வாழ்த்தி இருக்கிறார். இங்கே ஒரு உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் ராசா. தலைவரில் சிறந்த தலைவர்.... சரி... கொள்கையில் சிறந்த கொள்கைவாதி(அரசியலில் கொள்கை என்ற வார்த்தைக்கு யாராவது உண்மையான அர்த்தம் சொன்னால் தேவலை) சிறந்த நிறுவனர்... இதுதான் உதைக்கிறது. ஜனநாயக கட்சியாக இருக்க வேண்டிய தி.மு.க.வை ஓர் நிறுவனம் என்று ராசா சொல்லி இருப்பதிலிருந்தே, அதன் உள் அர்த்தம் குறித்து சொல்ல வேண்டியதில்லை. சிறந்த கட்சியாக நடத்திச் சென்றிருக்க வேண்டியவர், சிறந்த நிறுவனத்தை அதாவது ஒரு கம்பெனியாக தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்தார் என்பது தான் அதன் உண்மையான அர்த்தம். சிறந்த தலைவராக, சிறந்த கொள்கை உடையவராக இருந்து, கட்சியை சிறப்பாக நடத்தி இருந்தால், ராசாவின் மடலில் இருக்கும் கூற்றுபடி, புத்தரை போல வரலாற்றில் கருணாநிதி இடம் பெற்றிருப்பார். ஆனால், கருணாநிதி சறுக்கி விழுந்து, சறுக்கி விழுந்து வரலாறு என்ற ஆற்றில் அடித்துச் செல்லப்படும் நபராகவே இருக்கிறார். ஆசையே அனைத்து பிரச்னைக்கும் காரணம்… என்று புத்தர் மகான் சொன்னதை ஏனோ ராசா அம்மடலில் குறிப்பிடவில்லை. தலைவர் பதவி தனக்கே வேண்டும்…. தனக்குப் பிறகு, தனது குடும்பத்துக்கே அவை செல்ல வேண்டும்… என்ற ஆசையின் காரணம் தானே, இன்று கருணாநிதிக்கு இந்த நிலை…. தனது குடும்பத்தின் ஸ்டாலின் மட்டுமே வாரிசு என்ற இருந்த நிலையை மாற்றி, அழகிரிக்கு ஓர் அந்தஸ்து…. கனிமொழிக்கு ஓர் அந்தஸ்து என்று கட்சியை எழுதி வைக்க ஆசைப்பட்டதின் விளைவுதானே கருணாநிதிக்கு இந்த நிலை…. கருணாநிதிக்கு அன்று வீராணம் ஊழல்… கனிமொழிக்கு இன்று ஸ்பெக்டரம் ஊழல்…. கண்ணுக்கு தெரிந்த வீராணம் பைப் ஊழலில் கூட கருணாநிதி மீது இத்தனை குற்றச்சாட்டு இல்லை. சிறைக்கும் செல்லவில்லை. ஆனால், கனிமொழி? ராசா? இத்தனைக்கும் காரணம் ஆசை? -இப்படிப்பட்ட ஆசையால் தான் நான் சிறைக்குச் சென்றேன்…. உங்கள் மகள் சிறை புகுந்தார்…. நீங்களும் கட்சியும் சித்ரவதைக்குள்ளானீர்கள். ஆக… இந்த பிறந்த நாளிலிருந்து தி.மு.க. தலைவராகிய நீங்களும், நானும், கட்சியினரும் அதிகமாக ஆசைப்பட வேண்டாம் என்று சத்தியம் ஏற்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று ராசா கடிதம் எழுதியிருந்தால்… ராசாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். இதெல்லாம் நடக்குமா? நடக்காது தான்… ஏன் தெரியுமா? கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ராசாவை நியமித்த நாளில், கருணாநிதி என்ன சொல்லி வாழ்த்தி இருப்பார்… ‘கட்சியை உலக அளவில் கொண்டு போய் சேர்’ என்று சொல்லி வாழ்த்திருப்பாரோ என்னவோ… அதன்படியே, தி.மு.க.வை உலக அளவில் பிரகாசிக்க வைத்துவிட்டார்? ஊழல் செய்தவர் மட்டுமல்ல… ஊழலை செய்யத் தூண்டியவரும் குற்றவாளி என்பதை ராசா மறக்காமல் சொல்லிவிட்டால்… நிச்சயம் அவரை இந்த உலகை மறக்கவே மறக்காது |
No comments:
Post a Comment
Thank You...