Thursday, 14 June 2012

பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்?


இஃது எனது நட்சத்திர வார நிறைவுப் பதிவு.
விருப்புடன் படித்த அனைத்து நண்பர்களுக்கும்,
மறுமொழிகள், பின்னூட்டுகள் அளித்த அனைத்து
நண்பர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் எனது
நன்றிகளும் வணக்கங்களும்.


பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்?

தமிழ் அரசுகள் உள்ள மூன்று நிலங்களில் ஒன்று புதுவை.
புதுவை ஈன்ற இருபெரும் கவிஞர்களில் ஒருவர்
பாவேந்தர் பாரதிதாசனார். தமிழ் மொழி, நாடு,
மக்கள் என்ற ஒரே குறிக்கோளில் காலம் முழுவதும் வாழ்ந்தவர்.

இளமையிலேயே கவித்திறன் மிகுந்து
இருந்து இவர் இயற்றிய
இறைப்பாடல்களை அவரின் நூல்களில் காணலாம்.

மாகவி பாரதியாரின் அன்புக்கு உரியவர்.
பாரதியாரின் தூண்டலில்
அவரின் முன்னர், பாரதிதாசனார் எழுதிய
முதல் பாடலே சத்தியைப் பற்றித்தான்!

எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா! - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையை - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்! - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுதும் துண்டு செய்வேன் - என
நீள இடையினின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

அன்னை சத்தியின் மந்த நகையில் மனம் மயங்கி,
புலவனின்/கவிஞனின் சிந்தையிலேஅன்னை நடம்
புரிந்து திறம் தருவாள் என்றும்,
சீரிய மறவனின் தோள்களிலே
அன்னையே நேர்படுவாள்

என்றும் இறைத்துய்ப்போடு
பாவேந்தர் பாடிய இப்பாடலில்
மனம் பறிகொடுத்தவர்கள்
பலர்; என்னையும் சேர்த்து.

மேலும் சுப்பிரமணியர் துதியமுது, சிவசண்முக பஞ்சரத்நம்
போன்ற நீண்ட பாடல்கள் அவரிடம் மிகுந்து இருந்த
ஆன்மச் சிந்தனைகளைச் சொல்லுவன.

அப்படி இருந்த பாவேந்தரைத்தான், தமிழகத்தையும்
இறைத்தலங்களையும் சுற்றியிருந்த வைதீகக் கொடுமைகள்
ஆன்மிகத்தை விட்டே விரட்டியது.

பெருத்த மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு,
மக்களை வருண பேதிப்பால் கூறுபோட்டு, கல்வியை மறுத்து,
உச்சமாக தமிழ்நெறிகளையும் கடவுள்களையுமே
தமிழர்களிடம் இருந்து பிரித்து, தமிழ்நாட்டின்
இயல் நெறிகளின் தடமே ஏறத்தாழ இல்லாத நிலை செய்து,
பலரை நாத்திகத்துக்கும் பிற மதங்களுக்கும்
விரட்டிக் கொண்டே இருந்தது, இருக்கிறது வைதீக மதம்.

அந்த வைதீகத்தை வெறுத்து ஓடியவர்களில் நாத்திக நிலையில்
நின்ற பலருள் பாவேந்தரும் ஒருவர்.
மேலே உள்ள பாடலில் அவர் காட்டியிருக்கும்
இறைத்துய்ப்பை உணரும் நடுநிலையாளர்,
அவர் அப்படி நாத்திகத்திற்குப் போனது எவ்வளவு
பெரிய இழப்பு என்று புரிந்து கொள்ள முடியும்.

வெகுண்டு அவர் தமிழ்க் கடவுள்களை
ஏசியதும் உண்டு. ஏன் பீரங்கியையே தூக்க வேண்டும்
என்று சொன்னதும் உண்டு.

அது அவர் தமிழ்க்கடவுள்களை
ஏசியது என்று எண்ணுவதை விட,
தமிழ்க்கடவுளரைச் சுற்றியிருந்த
வைதீகக் குற்றங்களைச் சாடினார் என்பதுதான் உண்மை.

இதையே பிடித்துக் கொண்டு சில வருணதாசர்கள்
'பீரங்கி பீரங்கி..' என்று பிதற்றுவதெல்லாம்
இறைவனை அப்படிச் சொன்னாரே என்ற இறையன்பினால் அல்ல.

அறியாமையில் சிலரும்,
வைதீகக் காப்புப் போட்டுக் கொண்டே
இருக்க சிலரும் செய்யும் பரப்புரை இது
என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

ஆதலாற்றான் சில வருணதாசர்கள்
மற்றும் சில அவசரக்காரர்கள்
பாவேந்தர் குறித்து சொல்லும்
தவறான கருத்துகளை நாம் செவிமடுப்பதில்லை.

நாத்திக நிலையில் இருந்து பலரும்
வைதீகத்தைத்தான் எதிர்க்கிறார்கள் தமிழகத்தில்.
ஆனால் இதனையே சாக்காக
வைத்துக்கொண்டு பல திரிப்புக்களையும் புரட்டுக்களையும்
செய்து கொண்டு வைதீகம் பழைய நினைப்பிலேயே திரிகிறது.

ஆகவே, தமிழ் மொழியை,
தமிழ் மண்ணைப் பேணுவதோடு,
நமது தொன்மத் தமிழ் இறை நெறிகளையும்
மீட்டெடுத்துப் பயின்று
பேண தமிழர்கள் முனைப்புடன் இருக்க வேண்டும்.

கோயிலில் வடமொழி, மூடநம்பிக்கை,சாதியாதிக்கம் என்று
சொல்லிக் கொண்டே, யாரோ வந்து நமக்கு நமது இறைச்
செல்வங்களை, தமிழ்ச் செல்வங்களைத் திருப்பித் தருவார்கள்
என்ற எண்ணத்தில் வைதீகத்திலேயே சுழன்று
கொண்டிராமல் நமது அன்றாட வாழ்வில்
முழுமையாக வைதீகத்தைத் துறந்து தமிழ்ச்
சமயநெறி பேணுதலே நமது கடமையாக இருக்க முடியும்.

மாற்றம் என்பது மாறாதது, பாவேந்தர்
போன்ற பல புரட்சிக் காரர்களின் முயற்சியால்
சிறிதளவு தமிழ்நாடு மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், இன்று பாரதிதாசன்
இருந்திருந்தால் அவர் நமது முக்கியமான
இறைச்செல்வங்களை மெய்யியல் செல்வங்களை
மீட்டெடுப்பதையே தலைமையாகக் கொண்டிருக்கக் கூடும்.
ஏனென்றால் அதில்தான் தமிழ் உலகம்
இன்னும் மொத்தமாக கவிழ்ந்து கிடக்கிறது.
தமிழர்களின் இயல்பு நெறிகளான சிவநெறியும் மால் நெறியும்
மீளாமல் தமிழருக்கு வாழ்வில்லை.

No comments:

Post a Comment

Thank You...