தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.-வை விட அதிகளவில் எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள தே.மு.தி.க.-விடம், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலில் இவர்களுக்கு, 5,104 ஓட்டுக்கள் உள்ளன.
கட்சியின் தலைவர் விஜயகாந்த், “தமிழகத்துக்கு அது செய்தீர்களா? இது செய்தீர்களா?” என்று ஒன்றரைப் பக்க டயலாக் ஒன்றை ஏற்ற இறக்கத்துடன் பேசிவிட்டு, “ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம்” என்று அறிவித்திருந்தார். அதன்பின், காங்கிரஸ், பா.ஜ.க. என்று வரிசையாக, “புறக்கணிப்பு யோசனையை கைவிடுங்கள்” என கோரிக்கை வைத்துவிட்டன.
கேப்டன் வெளிப்படையாக அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் கட்சியின் பாலிஸி மேக்கிங் கமிட்டியுடன் (மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ்) “யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்” என்று கிச்சன் டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளார் என அவரது கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்.
இது ஒரு பக்கமாக நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கமாக பல கட்சிப் பிரமுகர்களும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க துவங்கியுள்ளார்கள். “ஜனாதிபதித் தேர்தல் மூலம் தேசிய அரசியலுக்கு வந்தால், அரசியலில் என்னவெல்லாம் செய்யலாம்” என்று அவர்கள் கூறுவதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் விஜயகாந்தின் எம்.எல்.ஏ.க்கள்.
கேப்டனுக்கு டீல் எதுவும் சரிவராமல், இறுதிவரை தேர்தலை புறக்கணிக்கும் முடிவிலேயே இருந்துவிட்டால், அவரது கட்சி எம்.எல்ஏ.-க்களே “ஓட்டு போடலாமண்ணே” என நச்சரிக்கத் துவங்குவார்கள். நச்சரித்தால் சிக்கல் இல்லை.
அதற்கு அடுத்த கட்டத்துக்கு போனால்தான் கேப்டனுக்க இருக்கும் சிக்கல்!
No comments:
Post a Comment
Thank You...