Wednesday, 27 June 2012

‘ஒரு மணி நேர மந்திரத்தில் மறுபிறவி’ பார்க்கணுமா?

‘ஒரு மணி நேர மந்திரத்தில் மறுபிறவி’ பார்க்கணுமா?



வரிசையாக பல பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களை வைத்து எரிப்பது அல்லது புதைப்பது போன்ற பெட்டிகள் அவை. அவற்றின் பக்கவாட்டில், புத்த சின்னம் வரையப்பட்டுள்ளது. பெட்டிகளுக்குள் யாருமில்லை. அனைவரும் தியான மண்டபத்தில் இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்து பல பேர் அங்கே கூடியிருக்கிறார்கள்.
இவர்களில் 50 பேர், வரிசையாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் இருந்து மறுபிறவி எடுத்து, எழுந்து வரப் போகிறார்கள்!
தாய்லாந்தில் நடைபெறும் ‘மறுபிறவி மந்திர நடைமுறை’ இது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் இது பெரிய அளவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, நேற்று முன்தினம் (18-ம் தேதி, வெள்ளிக் கிழமை)நடைபெற்றது.
தாய்லாந்தின் நக்ஹோன் நாயக் என்ற இடத்தில் உள்ள புத்த கோவிலின் மண்டபத்தில் இந்த மறுபிறப்பு நடைபெறுவது வழக்கம். தலைநகர் பாங்காக்கில் இருந்து வட-கிழக்கே 106 கி.மீ. தொலைவில் உள்ளது நக்ஹோன் நாயக்.
மறுபிறப்பு நிகழ்வுக்கு வரும் அனைவரும் முதலில் வரிசையாக நின்று அங்குள்ள புத்த துறவியிடம் நெற்றியைக் காட்டுகிறார்கள். நெற்றியில் ஒரு மந்திர இலச்சனை புத்த துறவியால் வரையப்படுகிறது. அதன்பின் அனைவரும் தரையில் அமர, மந்திரம் ஓதப்படுகிறது.
அதன்பின் மறுபிறவி எடுக்க பதிவு செய்த நபர்கள் மட்டும் எழுந்து நிற்கிறார்கள். தமக்கு ஒதுக்கப்பட்ட சவப் பெட்டிக்குள் ஏறிக் கொள்கிறார்கள். அதற்குள் வணங்கியபடி நிற்க, மீண்டும் மந்திரம் ஓதப்படுகிறது. மந்திரம் முடிந்ததும், சவப் பெட்டிக்குள் படுத்துக் கொள்கிறார்கள். கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
மீண்டும் மந்திரம். அதன்பின் நிசப்தம். இந்தக் கட்டத்தில் அவர்கள் இறந்து விட்டதாக அர்த்தம். சில நிமிடங்களில் மீண்டும் மந்திரம் ஒலிக்க, கண்விழிக்கிறார்கள். இப்போது அவர்கள் மறு பிறப்பு எடுத்து விட்டார்களாம்.
புத்த மதத்தில், உள்ள கோட்பாடு இது என்று அங்குள்ள துறவிகள் விளக்கம் கொடுக்கிறார்கள். “முற்பிறவியில் செய்த பாவம், இந்தப் பிறவியில் கஷ்டங்களை ஏற்படுத்தும். அதிலிருந்து விடுதலையாக வேண்டுமானால், இப் பிறவியில் சில நல்ல காரியங்களை செய்துவிட்டு, இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டும்.
சடங்கில் இறப்பதாக பாவனை செய்யும்போது, முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக கிடைத்த இப்பிறவி முடிந்து போகும். இப்பிறவியில் செய்த நல்ல காரியங்களுக்கான அடுத்த பிறவி (மறுபிறப்பு), ஏற்படும்” என்கிறார் அங்குள்ள தலைமைத் துறவி (புரிகிறதா? ஒரு லாஜிக் இருக்கிறது)
இது உண்மை, பொய், என்பதைக் கடந்து, தாய்லாந்திலுள்ள ஒரு மத நம்பிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் இதை வெளியிட்டிருக்கிறோம். இதைப் படித்துவிட்டு நம்மூரில் யாராவது சாமியார் இதை பிராக்டிஸ் பண்ணி பைசா சம்பாதிக்க துவங்காவிட்டால் சரி.
நெற்றியில் இடப்படும் மந்திர இலச்சனை
மறு பிறவி சடங்குக்கு முன்னர் சுமார் 1 மணி நேர மந்திர உச்சாடனம்
மறுபிறவி எடுக்க பதிவு செய்தவர்கள், தத்தமது சவப் பெட்டிகளுக்கு முன் தயாராகிறார்கள்.
அடுத்த கட்டம், தத்தமது பெட்டிகளுக்குள் ஏறிக்கொள்ள மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.
மறுபிறப்பு மந்திரத்தை உச்சரிக்கும் புத்த துறவிகள்
மறுபிறவியை கொடுப்பதாக கருதப்படும் தேவதை (தேவன் என்று சொல்ல வேண்டுமா?)
மந்திரம் முடிந்து பெட்டிக்குள் படுத்தவர்களை துறவிகள் துணியால் மூடுகிறார்கள்
இறுதி மந்திரம் முடிந்து கண்களை திறந்தால்.... மறுபிறவி!

No comments:

Post a Comment

Thank You...