சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு முதலில் ஆதரவு கொடுத்தது, தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதே நேரத்தில் அவரது வேட்பாளர் ஆசைக்கு முதல் தடையாக இருப்பது அவர் சார்ந்துள்ள கட்சி! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக பி.ஏ.சங்மா அறிவித்தபோது, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி எச்சரித்திருந்தது.
ஆனால், இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் கிடையாது.
எது எப்படி இருந்தாலும், போட்டியிடுவதில் அவர் சீரியசாகவே உள்ளார். “நான் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் உள்ளேன். என்னை ஆதரிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். “எனக்கு ஆதரவு தருமாறு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் மமதா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால், அவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை” எனவும் சங்மா கூறியுள்ளார்.
காட்சிகள் தமக்கு சாதகமாக திரும்பும் என்பதே அவரது நம்பிக்கையாக உள்ளது. லோக்சபா முன்னாள் சபாநாயகரான சங்மா, பா.ஜ.க.-வும், மமதாவும் தம்மை ஆதரிக்கும் முடிவை எடுத்தால், வேறு சில கட்சிகளின் ஆதரவையும் திரட்ட முடியும் என்றும் நம்புகிறார்.
தமாஷ் என்னவென்றால், அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் சங்மா, டில்லியில் தி.மு.க. பிரமுகர் ஒருவரை வார இறுதியில் சந்தித்து தமக்கு ஆதரவு தருமாறு தலைமைக்கு எடுத்துச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சபாநாயகராக இருந்த நாட்களில், அனைத்துக் கட்சியினரிடமும் நன்மதிப்பை பெற்றவர் இவர்.
சங்மா சந்தித்த கனிமொழி ஆதரவு எம்.பி., தமது சந்திப்பு பற்றி கனிமொழியிடம் கூறியிருக்கிறார். கனிமொழி, கருணாநிதியுடன் அது பற்றி பேசியதாக தெரிகிறது. தி.மு.க. எக்காரணம் கொண்டும் காங்கிரஸை முறைத்துக் கொள்ளப் போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், சங்மாவுடனும் ஒரு தொடர்பை வைத்திருக்கிறார்கள்.
தமக்கு ஆதரவு தருமாறு மமதாவிடம் கோரியதையும் மறைக்காமல் தெரிவித்துள்ளார் சங்மா. “மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எனக்கு ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக் கொண்டேன்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, கலாம் விரும்பவில்லை. எனவே, எனக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன். அதற்கு பதிலளித்த மம்தா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கலாம் சம்மதித்தால், நீங்கள் ஆதரவு தர வேண்டும் என, என்னை கேட்டுக் கொண்டார்”
கலாம் போட்டியிடுவதில்லை என்றது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மமதா சங்மாவை ஆதரிக்க முன்வரலாம்!
No comments:
Post a Comment
Thank You...