ஈழம் அமைவதை கண்டுவிட்டு உயிரை விடத் தயாராக இருக்கும் அவர், “அந்த ஈழம் அமைவதற்கு எனது உயிரைக் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கும் நான் தயாராக உள்ளேன்” என தமது உயிரையே துச்சமாக தூக்கியெறிந்து பேசியும் உள்ளார்.
சுருக்கமாக சொன்னால், கருணாநிதி, தனது உயிலில், இலங்கைத் தமிழருக்கு, இலங்கையில் பல ஏக்கர் பரப்பளவில் ஈழத்தை எழுதி வைத்துள்ளார்!
“தமிழ் மொழியைக் காக்க, மொழியின் தன்மானத்தை காக்க, அன்று முதல் இன்று வரை போராட்டம் நடத்தி வருகிறோம். தி.மு.க. தமிழனின் தன்மானத்தைக் காக்க, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு நடத்தியது அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டோம். இலங்கையிலும் தமிழனின் தன்மானத்தைக் காக்காமல் ஓயமாட்டோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளமாட்டோம்” என்றும் கொள்கை முழக்கம் செய்தார் அவர்.
தி.மு.க. தலைவர் இவ்வாறு முழங்கியது, தமிழன் தன்மான மாநாடு ஒன்றில் அல்ல. நேற்று (புதன்கிழமை) திருவாரூர் வரை சென்று தமது 89-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது முழங்கிய முழக்கம் அது. தன்மானத் தமிழர்கள் ஊர் ஊராகப் போய் பிறந்தநாள் கொண்டாடுவது, புறநாநூறு காலத்தில் இருந்தே நடந்து வரும் வழமைதான்.
தமது 89-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், இலங்கைத் தமிழருக்காக இரண்டிலொன்று பார்க்காமல் ஓயப்போவதில்லை என்று கூறியுள்ள கருணாநிதி, “ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம்” என்றார்.
தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசை ‘லேசாக’ வலியுறுத்திய எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு உள்ளதால், இம்முறையும் வலியுறுத்துவதில் சிக்கல் ஏதும் கிடையாது.
முதல்வராக இருந்தபோது மத்திய அரசை வலியுறுத்துவதைவிட, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக கூட இல்லாத நிலையில் சாமான்ய எம்.எல்.ஏ.-யாக வலியுறுத்துவதால் அவர், மக்களோடு மக்களாக நிற்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
“ஒரு முதலமைச்சர் சொல்வதையாவது காது கொடுத்து யாராவது கேட்பார்கள். திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. சொல்வதை டில்லியென்ன, டில்ஷான்கூட கேட்கமாட்டாரே” என்று யாராவது சந்தேகத்தை கிளப்பலாம். அவர்களுக்கு, தலைவரின் மெயின் கொள்கைகளில் ஒன்று, “முதல்வர் பதவி முள் கிரீடம்” என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
நாளைக்கே இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி ஈழம் பெற்றுக் கொடுக்கும்போது, முதலமைச்சர் அதிகாரத்தை வைத்து பெற்றுக் கொடுத்தார் என ஊர் உலகம் சொல்லக்கூடாது அல்லவா? அதுதான், முதல்வர் பதவி போகும்வரை காத்திருந்துவிட்டு, ஈழம் எடுத்துக் கொடுக்க முன்வந்துள்ளார்.
‘அம்மா’ போகும் போக்கில் அடுத்த தேர்தலில் மீண்டும் தி.மு.க. வந்துவிடும் போலிருக்கிறது. எனவே அடுத்த 4 வருடங்களுக்குள், திருவாரூர் எம்.எல்.ஏ.வாக இருந்து ஈழத்தை எடுத்துக் கொடுத்து விடுங்கள்.. பிளீஸ்!
No comments:
Post a Comment
Thank You...