Wednesday, 27 June 2012

ஜெயலலிதா பஞ்ச்: “பஞ்சாயத்து ஆலமரம் கீழ் அமர வேண்டிய ஆசாமி அவர்!”

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தாமதப்படுத்தப் பட்டுக்கொண்டு வருகிறது. “கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், ஆவணங்கள் கையில் வரவேண்டும்” என்று சசிகலா தாக்கல் செய்த மனு, ஒரு ரவுன்ட் போய், டிஸ்மிஸ் ஆகியது.
‘தாமத புராணத்தின்’ அடுத்த அத்தியாயம் விரைவில் துவங்கும் என நேற்று எழுதியிருந்தோம். ஆரம்பமாகி விட்டது.
“அவர் நீதிபதியே கிடையாது. அவர் உக்காந்திருக்க வேண்டிய இடம் பஞ்சாயத்து ஆலமரம்!”
“சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, அரசு உத்தரவின்படி நியமிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை விசாரிக்க அவருக்கு அதிகாரம் இல்லை” என ஒரு மனுவை தயாரித்து, அவரிடமே தாக்கல் செய்து, அடுத்த அத்தியாயத்தை அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார்கள், தாமத பார்ட்டிகள்.
இந்த வழக்கில் சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் நான்கு நாள் விசாரணை நடந்தும் முடிந்து விட்டது. தோழிகள் பிரிந்திருந்தபோது, சசிகலாவிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு, பாதிக் கேள்விகளுக்கு அவர் பதிலும் சொல்லிவிட்டார். இவ்வளவும், இதே நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில்தான் நடைபெற்றன.
“வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லாத நபர்” என தற்போது இவர்களால் கூறப்பட்ட நீதிபதியின் கேள்விகளை எதிர்கொள்ளவே, தமிழக முதல்வர் தனி விமானத்தில் பறந்து பறந்து வந்து பதில் சொல்லிவிட்டு சென்றார். இப்போது அதே நீதிபதியிடம், ”உமக்கு தகுதி இல்லை ஓய்” என்று மனு கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மனு தள்ளுபடி செய்யப்படும்போது, இவரது சிறப்பு நீதிமன்றம், பெங்களூரு ஹைகோர்ட் என்று என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, டில்லிக்கு பயணமாகும், அங்கே சுப்ரீம் கோர்ட் அப்பீலுக்கு போகும். குறைந்த பட்சம் 6 வாரங்களை இதில் தாமதப்படுத்தலாம். அதன்பின் அடுத்த புராணம் படிக்கப்படும்.
நீதிபதி மல்லிகார்ஜுனய்யா ‘திக்திக்’ நெஞ்சில் கை வைத்தபடி, உள்ளார். காரணம் அடுத்த மனு, “இவர் சட்டப் பரீட்சையில் பாஸ் செய்ததே செல்லுபடியாகாது என்பதால், மல்லிகார்ஜுனய்யா நீதிபதியே கிடையாது” என்று வந்து விட்டால், என்னாகும்?

No comments:

Post a Comment

Thank You...