Thursday, 28 June 2012

ஆபரேஷன் புலித் தோல் வேட்டை: மதுரை ஆதீனமே ‘கொல்’லென்று சிரிக்கிறார்!



நேற்று காலை வீடியோகிராபர்கள் சகிதம் மதுரை மடத்துக்குள் பிரவேசித்த விளக்குத்தூண் போலீஸார், அங்கே புலியைக் காணாமல் திகைத்தனர் என்று மதுரை மூத்த ஆதீனமே கிண்டலடிக்கும் நிலையை அடைந்துள்ளது மதுரை போலீஸ். “நம்ம மடத்தில் யானையும் இல்லை; தந்தமும் இல்லை. புலியும் இல்லை; புலித்தோலும் இல்லை” என்று ரைமிங்காக காமெடி பண்ணியுள்ளார் ஆதீனம்.
மதுரை விளக்குத்தூண் போலீஸார், ஆதீன மடத்துக்குள் ஆள், அம்பு, சேனை சகிதம் புகுந்து மேற்கொண்ட ‘ஆபரேஷன் புலித்தோல் வேட்டை’, வெற்றிகரமாக தோல்வியில் முடிந்துள்ளது.
“மடத்துக்கு உள்ளே டான்ஸ் ஆடியதாக புகார் கூறப்பட்ட ரஞ்சிதாவும் இல்லை, புலித்தோலில் படுத்ததாக கூறப்பட்ட நித்தியானந்தாவும் இல்லை, குறைந்தபட்சம் புலித்தோலும் இல்லை” என்று ரிப்போர்ட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார்கள் விளக்குத்தூண் போலீஸார். டான்ஸ் நடந்து ஒரு வாரத்தின்பின், நீதிமன்ற உத்தரவு காரணமாக ரெயிடுக்கு போகும்போது, புலித்தோல் கிடைக்கும் என்று நம்பிய அதிபுத்திசாலி, காவல்துறையில் யார் என்று தெரியவில்லை!
ரெயிடு வந்த போலீஸ், மடத்துக்கு திருத்தொண்டு ஆற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார் மதுரை மூத்த ஆதீனம்.
“மடத்துக்குள் சாவி தொலைந்த நிலையில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் சில பீரோக்கள் இருந்தன. அந்த பீரோக்களை ‘புலிவேட்டை போலீஸ்’ பூட்டை உடைத்து திறந்து தந்துவிட்டு போயிருக்கிறார்கள். அவர்களுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று போலீஸ் திருத்தொண்டு பற்றி சிலாகித்திருக்கிறார் மூத்த ஆதீனம்.
நித்தியானந்தா தற்போது மதுரையில் இல்லை என்பது சகல மீடியாவிலும் அடிபட்ட செய்தி. மதுரையில் இருந்து சுவாமிகள் புறப்பட்டபோது, படுத்த புலித்தோலை சுருட்டிக்கொண்டுதான் கிளம்பியிருப்பார் என்பதை ஊகிக்க முடியாதவர்கள் யாராவது இருந்தால் அவர்களை என்ன செய்யலாம்?
“அவர்கள் மதுரையில் போலீஸாகக் கடவது” என்று சாபம் கொடுக்கலாமா?

No comments:

Post a Comment

Thank You...