ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
கிட்டு பயணம் செய்த MV Yahata கப்பல் நடுக் கடலுக்கு சென்றதும்,
AHAT என்ற பெயருக்கு மாறியதையும், கப்பலில் இருந்த சட்டலைட் டெலக்ஸ் வேலை
செய்யாத நிலையில், YESU-747 தொலைத் தொடர்பு செட் மூலம் கப்பலில் இருந்து
தகவல் அனுப்பத் துவங்கியதையும், இந்த புதிய அலைவரிசையில் மெசேஜ் போவதை,
அந்த ஏரியாவில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்
ஆட்டோ-ட்ராக் பண்ணி ஒட்டுக் கேட்டதையும், கடந்த அத்தியாயத்தில்
எழுதியிருந்தோம் (அதை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்)குறிப்பிட்ட அந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல், அந்தமானில் உள்ள இந்தியக் கடற்படை தளத்தில் இருந்து, தாய்லாந்து கடலுக்குள் வந்திருந்தது. (தாய்லாந்து அரசுக்கு தெரியாமல்தான்) AHAT கப்பலில் இருந்து வந்த சிக்னல்களை டிடெக்ட் பண்ணியதும், இந்திய நீர்மூழ்கிக் கப்பல், நீருக்கு அடியே, கிட்டு பயணித்த AHAT கப்பலை பின்தொடரத் துவங்கியது.
அதாவது நீருக்கு மேலே AHAT கப்பல் இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அக் கப்பலில் உள்ளவர்களுக்கு தெரியாமல், நீருக்கு அடியே இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பின் தொடர்ந்தது. AHAT கப்பலில் கிட்டு வரும் விபரம், இந்திய உளவுத் துறைக்கு துல்லியமாக தெரிந்திருந்த காரணத்தாலேயே, கப்பலை பின் தொடர்ந்து சென்று, மடக்கினார்கள்.
அந்தக் கப்பலில் பயணித்து, தற்போதும் உயிருடன் உள்ள கப்பல் சிப்பந்தி ஒருவரின் தகவலின்படி, இரவு நேரங்களில் கப்பலுக்கு பின் தொலைவில் மலைபோல ஒரு உருவம் தெரிந்திருக்கிறது. அதிகாலையில் அந்த உருவம் மறைந்து போயிருக்கிறது. பின்னாட்களில் யோசித்துப் பார்த்தபோதுதான், அது புலிகளின் கப்பலை பின் தொடர்ந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
இப்போது ஒரு மில்லியன் டாலர் கேள்வி உள்ளது.
AHAT கப்பலில் கிட்டு இருக்கிறார் என்ற விபரம் இந்திய உளவுத்துறைக்கு, கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட மெசேஜ்களில் இருந்து மட்டும்தானா தெரிய வந்தது? வேறு வழியில் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கவே இல்லையா?
இது ஒரு பெரிய சந்தேகத்துக்குரிய கேள்வி. AHAT கப்பலில் இருந்து தொலைத் தொடர்பு செட்டை இயக்கியவர்கள், கிட்டுவின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கோர்ட் வேர்ட்களில் கூறப்பட்ட சில விபரங்களை, இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் ஒட்டுக் கேட்டு… உடனடியாக டீ-கோடிங் செய்து… கப்பலில் கிட்டு செல்வதை கன்பர்ம் செய்துகொண்டு… அதன்பின், பின்தொடர்வது என்ற முடிவை எடுத்தது என்று சொன்னால், அது அதீத கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்.
கொஞ்சம் லாட்டிரல் திங்கிங்கில் யோசித்துப் பாருங்கள். கிட்டு தாய்லாந்தில் இருந்து ஒரு கப்பலில் இலங்கை செல்லப்போகும் விஷயம், இந்திய உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரியும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அப்படி எடுத்துக் கொண்டால், அந்தமான் கடல் தளத்தில் இருந்து, நீர்மூழ்கிக் கப்பல், தாய்லாந்தின் புக்கெட் கடலோரம் நடமாடுவது சாத்தியம். கிட்டு செல்லும் கப்பலை டெயில் செய்வதற்காகவே நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் சாத்தியம். அப்படி இருந்தால்தான், கிட்டு சென்ற கப்பலில் இருந்து சிக்னல்களை இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பிக் பண்ணியவுடன், கப்பலை பின் தொடர்வது சாத்தியமாகும்.
இப்போது, நாம் குறிப்பிட்ட மில்லியன் டாலர் கேள்வியை மீண்டும் கேட்டுப் பாருங்கள். “கப்பலில் கிட்டு உள்ள விஷயம், இந்திய உளவுத்துறைக்கு ‘வேறு விதத்தில்’ கிடைத்ததா?”
அதற்கும் ஒரு சான்ஸ் உள்ளது. அந்த தகவல் புலிகள் இயக்கத்துக்கு உள்ளே இருந்தே போயிருக்கலாம் என்பதற்கும் சான்ஸ் உள்ளது.
அந்த விபரங்களை சொல்வதற்கு, இந்த இடத்தை விட்டால், வேறு இடம் கிடைக்காது. எனவே தொடரில் இருந்து சற்று விலகி, சில விஷயங்களை சொல்லி விடலாம். இந்த விபரங்கள், உங்களுக்க புதியவையாக இருக்கலாம். புலிகளின் கப்பல்கள் அடுத்தடுத்து அடி வாங்கியது குறித்து உங்களுக்கு இதுவரை இருந்துவந்த சில கேள்விகளுக்கு பதிலையும் கொடுக்கலாம்.
இது நடைபெற்ற காலப்பகுதியில் (90களின் துவக்கத்தில்) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் குட்டி. பிரபாகரனுக்கு வரும் தகவல்களும், பிரபாகரன் வெளியே அனுப்பம் தகவல்களும் குட்டி மூலமாகவே போய் வந்துகொண்டு இருந்தன.
புலிகள் இயக்கத்தில் பல கம்யூனிகேஷன் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு தளபதிகளுடன் இணைக்கப்பட்டோ, வெவ்வேறு இலாகாக்களுடன் இணைக்கப்பட்டோ இருந்தார்கள். அப்படி இருந்த மற்றொரு கம்யூனிகேஷன் பொறுப்பாளரின் பெயர், கிருபன்.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் கம்யூனிகேஷன் பொறுப்பாளராக இருந்த இந்த கிருபன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட காலத்துக்கு முன், இந்திய அமைதிப்படை இலங்கையில் யுத்தம் புரிந்தபோது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த இடத்தில் மற்றொரு விஷயம். கிருபனை, பிரபாகரனே நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். கிட்டு அப்போது சென்னையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ‘ஏதோ காரணங்களுக்காக’ கிருபன் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட விஷயம், சென்னையில் இருந்த கிட்டுவுக்கு தெரிவிக்கப்படிருக்கவில்லை.
தமிழகம் வந்த கிருபன் சென்னைக்கு செல்லவில்லை. மதுரையை தளமாக கொண்டு இயங்கினார். மதுரை மற்றும் அதன் தெற்கே வேதாரண்யம் வரை அவரது செயல்பாடு இருந்தது.
நாளடைவில், கிருபன் மதுரையில் இருந்து இயங்கும் விஷயம் கிட்டுவுக்கு தெரியவந்தபோது, கிட்டுவுடன் கிருபன் முறைத்துக் கொண்டதாக தெரிகிறது. மதுரையில் தாம் தங்கியிருந்து செயல்படுவது, கிட்டுவின் அதிகாரத்தின் கீழ் அல்ல என்பது கிருபனின் நிலைப்பாடு. ஆனால், அந்த நேரத்தில் தமிழகத்தில் (வீட்டுக்காவலில்) இருந்து இயங்கிய கிட்டு, கிருபனைவிட சீனியர்.
சுருக்கமாகச் சொன்னால் இருவருக்கம் இடையே முறுகல் நிலை இருந்தது.
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த நேரத்திலேயே, கிட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கிருபன் அதன் பின்னரும் மதுரையில் தங்கியிருந்தார். பின், சென்னைக்கு சென்று இயங்கத் துவங்கினார். அப்போதும், வேதாரண்ய ஆபரேஷனை அவர் கவனித்துக் கொண்டார். அங்கிருந்துதான் புலிகளின் பெரும்பாலான படகுகள் இலங்கைக்கு சென்றன.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு நடத்திய ரவுன்ட்-அப்கள் ஒன்றில் கிருபன், ஒயர்லெஸ் கருவியுடன் சிக்கிக் கொண்டார்.
அதையடுத்து, அப்போது தமிழகத்தில் சிக்கிக் கொண்ட மற்றைய புலிகள் உறுப்பினர்களுடன் ஒருவராக இவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பூந்தமல்லியில் தனி செக்ஷன் ஒன்றில் புலிகள் வைக்கப்பட்டிருந்தார்கள்.
திடீரென, தமிழக பத்திரிகையில் பூந்தமல்லி சிறையில் இருந்து விடுதலைப் புலி ஒருவர் தப்பிய செய்தி வெளியானது. அப்படி தப்பியவர் இந்த கிருபன்தான். சிறையில் இருந்து நீதிமன்றத்துக்க அழைத்துச் சென்றபோது அவர் தப்பிவிட்டார் என்பதே பத்திரிகைச் செய்தி. அவரை தமிழக போலீஸ் ‘வலை விரித்து’ தேடுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
தமிழக காவல்துறையின் வலையில் கிருபன் சிக்கவில்லை. யாருடைய கைகளிலும் சிக்காத கிருபன் வேதாரண்யம் சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கை சென்றுவிட்டார்.
பூந்தமல்லி சிறையில் இருந்து கிருபன் தப்பிய சாகசம் பற்றி சிறிது காலம் புலிகள் இயக்கத்துக்குள் சிலாகித்துப் பேசப்பட்டது. இந்த ‘தகுதி’, அவரை புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சர்க்கிள் வரை கொண்டுபோய் சேர்த்தது. இயல்பில் ஒயர்லெஸ் ஆபரேட்டராக இருந்த கிருபன். பிரபாகரனின் பிரத்தியேக ஒயர்லெஸ் ஆபரேட்டர் குட்டிக்கு உதவியாக நியமிக்கப்பட்டார்.
ஒயர்லெஸ் ஆபரேஷனில் ஒரே நபர், 24 மணி நேரமும் பணியில் இருப்பது சாத்தியமில்லை. இதனால், குட்டி பணியில் இல்லாத நேரங்களில் கிருபனும் பிரபாகரனுக்கு வரும் தகவல்களை ரிசீவ் பண்ணுவதுண்டு. பிரபாகரன் கொடுக்கும் தகவல்களை அனுப்பி வைப்பதுமுண்டு.
இதுவரை சரி. இப்போது ஒரு ட்டுவிஸ்ட்.
கிருபன் பூந்தமல்லி சிறையில் இருந்து எப்படி தப்பினார்?
அந்த நாட்களில் சென்னை பத்திரிகைகளில் பணிபுரிந்த இரு செய்தியாளர்கள் பின்னர் கூறிய தகவலின்படி, கிருபன் தப்பிய செய்திக்கு மீடியா கவரேஜ் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டவர், யார் தெரியுமா? அப்போது உளவுத்துறை றோவின் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர்தான்!
இது ஒரு சாதாரண ‘கைதி எஸ்கேப்’ என்ற அளவில்தான் மாலைப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. குறிப்பிட்ட றோ அதிகாரி, தமது மீடியா தொடர்புகள் மூலம், இந்த செய்திக்கு மறுநாள் காலைப் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில ஏற்பாடுகளை செய்தார்.
அந்த வாரம் வெளியான வார சஞ்சிகை ஒன்றிலும், கிருபனின் எஸ்கேப் ஸ்டோரி இடம்பெற்றது. அதை எழுதிய பத்திரிகையாளர் தற்போதும் மீடியாவில் உள்ளார். சஞ்சிகை வெளியிட்ட எஸ்கேப் ஸ்டோரிக்கு தகவல் சப்ளை செய்ததும், நாம் குறிப்பிட்ட றோ அதிகாரிதான். (2000களில் ரிட்டயரான அந்த றோ அதிகாரி, ஓய்வு பெற்றபின் சொந்த மாநிலம் சென்றபின், தற்போது வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார்)
கிருபன் தப்பிய ஸ்டோரி, விலாவாரியாக இந்திய மீடியாவில் வரவேண்டும் என்று குறிப்பிட்ட றோ அதிகாரி ஏன் விரும்பினார்?
இந்திய மீடியா செய்திகளை க்ளோஸாக ஃபாலோ செய்யும் புலிகளுக்கு அந்த செய்தி தெரிய வர வேண்டும் என்பதற்காகவா? கிருபன் தப்பியது உண்மைதான் என்று புலிகளை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவா? அது ஒரு சாகசச் செயல் என்று புலிகளுக்கு காட்டி, புலிகள் இயக்கத்துக்கள் கிருபனுக்கு செல்வாக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியா?
மேலேயுள்ள கேள்விகளுக்கான பதில், “ஆம்” என்பதாக இருந்தால், பூந்தமல்லி சிறையில் இருந்து கிருபனின் எஸ்கேப், ஒரு செட்டப் நாடகம் என்றாகிறது. றோ அவரை தப்ப வைத்து, தமிழக போலீஸிடம் சிக்காமல் வேதாரண்யத்தில் இருந்து அனுப்பி வைத்தது என்றும் ஊகிக்க வைக்கிறது.
அந்த ஊகம் சரியாக இருந்தால், கிருபன், புலிகள் இயக்கத்துக்குள் ஊடுருவ விடப்பட்ட றோவின் ஸ்பை என்று அர்த்தமாகிறது.
அப்படியான ஒரு நபர், பிரபாகரனின் ஒயர்லெஸ் தொடர்புகளை ஹேன்டில் செய்தால் என்னாகும்? தாய்லாந்தில் இருந்து கிட்டு இலங்கைக்கு கப்பல் ஒன்றில் செல்லும் விபரம், இந்திய உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க சான்ஸ் உள்ளது அல்லவா?
புலிகளின் கப்பல்கள் பற்றிய ரகசியங்கள் உளவுத்துறைகளுக்கு போவது பற்றி இதுவரை வந்துவிட்டோம். வந்ததுதான் வந்தோம் மற்றொரு விஷயத்தையும் தொட்டுவிட்டு போகலாம். இது கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்.
இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்ற காரணங்களில் முக்கியமானது, யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்கள் வந்து சேராததுதான். வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற நாட்களில், ஆயுதங்களுடன் வந்த புலிகளின் கப்பல்கள் ஒவ்வொன்றாக அடி வாங்கின. பல கப்பல்கள் சர்வதேச கடல் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டன. ஆயுதங்களுடன் மூழ்கடிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான டாலர் பெறுமதியுள்ள ஆயுதங்கள் நீருக்கடியே போயின.
சரி. புலிகளின் கப்பல்கள் எங்கே, எப்போது வருகின்றன என்ற விபரங்கள் எப்படி இலங்கை கடற்படைக்கு சென்றன?
புலிகளின் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் வைத்து தாக்கப்பட்டிருந்தால், இலங்கை கடற்படை ரோந்து சென்றபோது கண்ணில் பட்டது என்று சொல்லலாம். ஆனால், அநேக கப்பல்கள் தாக்கப்பட்டது, இலங்கைக் கடல் பகுதிக்கு வெளியே, இன்டர்நேஷனல் வாட்டரில். இந்தோனேசியாவுக்கு அருகே வைத்துகூட புலிகளின் ஒரு கப்பல், இலங்கை கடற்படையால் தாக்கி, மூழ்கடிக்கப்பட்டது.
அந்த இடத்துக்கு செல்வதற்கே இலங்கை கடற்படை கப்பல்களுக்கு குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவை.
புலிகளின் கப்பல் அங்கே வரப்போகும் விபரம் எப்படி இவ்வளவு துல்லியமாக இலங்கை கடற்படைக்கு தெரிய வந்தது? யாராவது தகவல் கொடுத்தால்தான், அந்தப் பகுதிக்கு இலங்கை கடற்படை கப்பல்கள் தாக்குதலுக்காக சென்றிருக்க முடியும்.
சர்வதேச கடலில் இலங்கை கடல்படை கப்பல்கள் தாக்க வந்தபோது, புலிகளின் கப்பல்களால் ஏன் திரும்பித் தாக்க முடியவில்லை? ஏன் ஒவ்வொரு தடவையும், புலிகளின் கப்பல்கள்தான் மூழ்கின? புலிகளின் 16 கப்பல்கள் அடுத்தடுத்து தாக்கி மூழ்கடிக்கப்பட்டனவே.. ஏன் ஒரு தடவைகூட அவற்றை தாக்கிய இலங்கை கடல்படை கப்பல்கள் தாக்கப்படவில்லை? மூழ்கடிக்கப்படவில்லை?
‘16-க்கு 1’ என்ற சான்ஸில்கூட, இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றுக்குகூட சேதம் ஏற்படவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? இதென்ன மாயமா? மந்திரமா? இலங்கைக் கடற்படையினர் மாயாவிகளா?
இல்லை! இதற்கெகல்லாம் பின்னணி உண்டு. புலிகளின் இறுதி யுத்தம் தோற்றதற்கான அடிப்படைக் காரணம் அது. அதையும் தெரிந்து கொள்ளங்கள்.
புலிகள் யுத்தத்தில் வெற்றிகளை குவித்தபோது, அவர்களின் ஆயுதக் கப்பல் ஆபரேஷன், கே.பி. தலைமையிலான வெளிநாட்டுப் பிரிவிடம் இருந்தது. அப்போது, (சுமார் 15 ஆண்டுகளாக) வெளிநாட்டில் இயங்கிய பிரிவுக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே கம்யூனிகேஷன் தொடர்பாளராக இருந்தவரின் பெயர் குமாரவேல்.
கே.பி. குரூப்-குமாரவேல்-பிரபாகரன் என்ற காம்பினேஷனில்தான், புலிகளுக்கு ஆயுதங்கள் தடையில்லாமல் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. 2002-ம் ஆண்டு, சமாதான பேச்சுக்கள் துவங்கிய பின், புலிகளின் ஆயுதக் கப்பல் ஆபரேஷனையும், கடல்புலிகள் பிரிவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார், கடல்புலிகளின் தளபதி சூசை.
அதற்காக, பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த குமாரவேலை அணுகினார் சூசை. அங்கேதான் துவங்கியது எல்லாக் குழப்பங்களும்! (மீதி அடுத்த அத்தியாயத்தில்)
No comments:
Post a Comment
Thank You...