Friday, 29 June 2012

"படிப்பிற்கு தடையில்லை!'

"சிறு துளிகள்' அமைப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி சைதன்யா: பொதுவாக, கல்லூரியில், பிறந்த நாள், பாஸ் செய்தால், அரியர் வாங்கினால், என, அனைத்திற்கும் நண்பர்களுக்கு, "பார்ட்டி' வைப்பது சம்பிரதாயம்.

அப்படி ஒரு நாள், என் பிறந்த நாள் பார்டிக்கும், சில ஆயிரங்களை செலவிட்டேன். அதில், பெரும்பாலான உணவு வகைகள், வீணாகியிருந்ததைப் பார்த்த போது, இதற்கு ஏதாவது உபயோகமாக செய்திருக்கலாமே என தோன்றியது. எங்கள் கல்லூரியில், காலில் செருப்பு கூட போடாமல் வந்த, ஏழை மாணவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் முழு சம்பளத்தையும் கொடுத்து உதவினார். அந்த உதவும் மனப்பான்மை, எப்போதும், நம்மிடம் இருக்க வேண்டும் என, எங்கள் "டீன்' கூறிய வார்த்தைகள் எங்களை இன்னும் உத்வேகமாக்கியது.

தினமும் கேன்டீனிலும், அவ்வப்போது நடைபெறும் நண்பர்கள் பார்ட்டியிலும், செலவு செய்யும் தொகையில் ஒரு பங்கை, எங்கள் அமைப்பிற்காக கேட்டோம். இந்தத் தொகை நம்முடன் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என கூறி, ஒவ்வொரு வகுப்பிலும் பணம் சேகரித்தோம். கல்லூரியில், எங்கள் அமைப்பின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, அதன் நடவடிக்கைகளை முதல்வர், மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம், கண்காணிப்பது என, முறைப்படுத்தினோம்.

பணம் கொடுத்தவர்களின் விவரங்களை, எங்கள் இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தோம். இந்த வெளிப்படைத் தன்மை, எங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பத்து ரூபாயில் இருந்து, பல ஆயிரங்கள் வரை, மாணவர்கள் கொடுத்து உதவினர். "படிப்பிற்கும், மருத்துவச் செலவிற்கும், பிற அத்தியாவசிய செலவிற்கும் பணம் தேவையோ, அவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கல்லூரியின் முக்கியமான இடங்களில், பெட்டிகளை வைத்தோம்.

தக்கச் சான்றுகளுடன் விண்ணப்பித்த பலருக்கும் உதவினோம். எங்கள் கல்லூரியில் இனி யாருக்கும், படிப்பிற்கு குறுக்கே பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது. அதை, "சிறுதுளிகள்' பார்த்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment

Thank You...