Monday, 4 June 2012

சுதந்திரத்திலும் மேலான சுகம் ...





மலை நகரின் சிறுகுன்றில்
தனிமரமொன்று வான் முட்ட
கால் உன்னி கிளர்ந்தெழுந்து
பாய்ந்தெழத் துடிக்கிறதோ!

கால்கட்டு விட்டொழித்து
கட்டற்ற சுதந்திரத்தை
நெஞ்சாழச் சுவாசிக்கும்
பெருவாழ்வு எட்டிடவா?

இல்லை!

காலடி பின்வைத்து
கண்சுருக்கி, தலை சரித்து
விழி கூர்த்துப் பாருங்கள்.
பெண் துணையை கைநீட்டி
அருகணைத்து முத்தமிட
முகம் நெருங்கி வருகிறதா?.


கண்மூடிக் கற்பனையை
சிறகடித்துப் பறக்கவிடுங்கள்.
சில் மனத்தில்
பொல்லாத காட்சிகள்
பொச்சடித்து விரிந்து வரும்.
நிறைவாழ்வு அதுவல்ல.

தன் சுகம் இழப்பதும்
தன் வலி மறப்பதும்
தாராள மனதுடன்
தயங்காது விட்டொழித்து
துணைக்காக வாழ்வதும்
தன்னைத் தொலைத்ததில்
மகிழ்வதும்  இழப்பல்ல.

அது சுதந்திரத்திலும் மேலானது.

No comments:

Post a Comment

Thank You...